Wednesday, October 31, 2018

மண்ணின் மரங்கள்

          இரண்டு நாட்களாக கையில் மண்ணின் மரங்கள் புத்தகம். வாசிக்க வாசிக்க மனதை பிடுங்கி எடுக்கிறது. எவ்வளவு மரங்களையும் காடுகளையும் நாம் இழந்திருக்கிறோம் என்று அறியும்பொழுது நெஞ்சு கனக்கிறது. மரங்களின் தன்மையும், மண்ணோடு அவற்றின் உறவுகளையும், அதன் அவசியத்தையும் புரிந்துகொள்ள உதவுகிறது. தமிழ்நாட்டின் தாவரங்களின் பட்டியல் அருமை.



          காடுகளின் இருப்பு சதவீதம், வெட்டப்பட்ட நம் மண்ணின் மரங்களும், அவற்றிற்கு பதிலாக நடப்படும் அயல் தேசத்து மரங்கள் மற்றும் அவற்றால் ஏற்படும் பல்லுயிர்ச் சூழல்களின் பாதிப்புகள் பற்றியும் நிறைய அறிந்துகொள்ள முடிந்தது. அயல் தேசத்து மரங்கள் எவை, இயல்தேசத்து அதாவது நம் நாட்டின் மரங்கள் எவை என்பதையும் புரிந்துகொண்டேன். ஏன் அயல் தேசத்து மரங்களை நம் நாட்டில் வைக்கக்கூடாதா என்று நீங்கள் கேட்கலாம். இப்புத்தகத்தை படித்தால் தெரிந்து கொள்ளலாம்.

          ஏன் இதை இங்கு பதிவிடுகிறேன் என்றால் நானும் மரம் வைக்கிறேன் பேர்வழி என்று நிறைய செய்துள்ளேன். அயல் தேசத்து மரங்கள் என்று தெரியாமலேயே நிறைய மரங்கள் நட்டு வளர்க்கப்பட்டு வருகிறது. இனி வரும்காலங்களில் அதை சரி செய்துகொள்ளலாம். இப்புத்தகம் மூலம் ஒரு அறிதலும், புரிதலும் கிடைத்துள்ளது.

          தாவரங்களுக்கு உயிர் மட்டுமல்ல உணர்வும் உண்டு என்றொரு பகுதி இப்புத்தகத்தில் வருகிறது. படித்ததிலிருந்து வெளிப்படுத்த முடியா உணர்வும் தவிப்பும் தொற்றிக்கொண்டது.
ஆம், உண்மை தான் தாவரங்களுக்கும் உணர்வு உண்டு. அவைகளுக்கு நம்முடன் எப்பொழுதும் ஒரு உறவும் உண்டு. நாம்தான் அறிவதில்லை. நான் அதை உணர்ந்திருக்கிறேன். அவ்வாறான ஒரு உறவு எனக்கு இருந்திருக்கிறது.

          சிறுவயதில் பள்ளியிலிருந்து  திரும்பியவுடன் முதல் வேலையாக பள்ளி பைகளை திண்ணையில் வீசிவிட்டு வீட்டிற்கு பின்னாடி இருக்கும் அவளை பார்க்க செல்வது தான் வழக்கம். அவள் வானுயர்ந்த அகண்டு விரிந்து நின்றிருப்பாள். அவளை பார்த்த பின்பு மனதில் தோன்றும் குதூகலத்திற்கு அளவில்லாமல் இருக்கும். என் கால்களை வைத்து ஏறுவதற்கு ஏதுவாக ஏணி போன்று தன் கிளைகளை அமைத்திருந்தாள்.

          நடு உயரத்திற்கு சென்றவுடன் அவள் எனக்காகவே வைத்திருக்கும் கனிகளில் நடுத்தரமான ஒன்றை பறித்து கடிக்கும்பொழுது பிறந்த பலனை அடைந்துவிட்டேன் என்றே தோன்றும். அவளும் அப்படித்தான் நான் உண்பதற்காகவே கனிகளை மடியில் ஏந்திக்கொண்டு நிற்பாள். வீட்டில் திட்டு வாங்கிவிட்டாலோ அல்லது சண்டை போட்டாலோ என்னுடைய அடைக்கலம் அவளிடம் தான் இருக்கும். அவளை கட்டிக்கொண்டு அழும்பொழுது எனக்காக யாரோ இருக்கிறார்கள், என் வலியை உணர, என் சோகங்களை புரிந்துகொள்ள என்றே தோன்றும்.

          அவள் ஒரு மரம் என்பதைத் தாண்டி எனக்கும் அவளுக்கும் ஒரு பந்தமும் புரிதலும் இருந்தது. ஒவ்வொரு முறையும் நான் அவள் மீது ஏறும்போது ஒரு சிலுப்பு சிலுப்புவாள். உச்சிமீது சென்றவுடன் கீழே தள்ளுவதுபோல பாசாங்கு செய்து விளையாடுவாள். நான் பயந்து அவளை கட்டிபிடித்துகொண்டாள் அவள் அமைதியாகி கீழே இறங்க அனுமதிப்பாள். நான் கிளையின் ஓரத்தில் இருக்கும்போது வேகமாக காற்றடித்தால் கூட அவள் என்னை கைவிட்டதில்லை.

          வறட்சி காலத்தில் கூட எப்படியாவது குழாயடியில் சண்டை போட்டு இரண்டு குடமாவது தண்ணீர் ஊற்றிவிடுவேன். அவளே எனக்கு சம்பாதிக்கவும் கற்றுகொடுத்தாள். அவளுடைய பழங்களை பறித்து பொட்டுக்கூடையில் எடுத்துச் சென்று பக்கத்தில் இருக்கும் போயர் தெருவில் விற்று வருவேன். வாரத்தில் 4 நாட்கள் பழங்கள் இருக்கும். ஒரு நாளைக்கு குறைந்தது ஐந்து அல்லது ஆறு ரூபாயாவது தேறிவிடும். சேமிக்கவும் கற்றுக்கொண்டேன்.

          இந்த பிணைப்பை ஒருவராலும் உணர்ந்துகொள்ள முடியவில்லை. நாங்கள் இருவரும் பேதம் பார்க்கவில்லை. எங்கள் பக்கத்து வீட்டில் உள்ள அனைவரும் அம்மாவிடம் புகார் செய்தனர். "ஒரு பொட்டபுள்ள இப்படியா ஆம்பள பையன மாதிரி மரம் ஏறுறது? அப்படி என்னதான் இருக்கு அந்த கொய்யா மரத்துல" என்று ஊரே பேசியது. ஆனால் அவர்களுக்கு புரியவில்லை இது ஒரு அம்மா மகளுக்கான உறவு என்று.

          பழைய வீட்டை இடித்து புது வீடு கட்டும்பொழுது அவளையும் நான் இழந்தேன். அன்று அவளை கொல்ல வேண்டாம் என்று சொல்லும் தைரியமும், அறிவும் என்னிடம் இல்லாமல் இன்றும் தவித்து வருகிறேன். அவளை இழந்து பத்து வருடங்கள் ஆகிறது. இன்றும் ஏதாவது மனக்குழப்பத்தில் இருந்தால் கனவில் வந்துவிடுவாள். அதில் ஏறி விளையாடும் நினைவுகளை கொடுத்து என்னை மகிழ்வுறச் செய்வாள்.

          அவளிடம் உணர்ந்த அந்த ஸ்பரிசத்தைத் தேடித்தேடி இன்றும் அலைகிறேன். அதனாலேயே எங்கு சென்றாலும் அங்குள்ள மரங்களின்மீதேறி அந்த உணர்வை பெற தவியாய்த் தவிக்கிறேன். அவளோ, அவளை இழந்த பாதிப்பு இல்லாமல் இருக்க அவள் வாரிசை விதைத்து விட்டுத்தான் சென்றிருக்கிறாள். ஆம் இப்பொழுதும் எங்கள் வீட்டிற்கு வெளியே அவள் வாரிசு வளர்ந்துகொண்டும், கனிகளை கொடுத்துக்கொண்டும் இருக்கிறாள்.



          இவ்வாறு மரங்களோடு செடிகொடிகளோடு பேசி, விளையாடி, உறவாடி மகிழ்ந்த தருணங்களை, அதில் கற்றுக்கொண்ட வாழ்வியலை எந்த பள்ளிகளும், கணினிகளும் கற்றுத்தர இயலாது. குழந்தைகளை இயற்கையோடு இணைந்து வாழ வழிகொடுங்கள். வீட்டில் ஒரு மரமாவது வளருங்கள். அவை கற்றுத்தரும் பாடங்கள் வேறு எங்கும் கிடைக்காதது.

          அழித்தல் எளிது. ஆத்தல் கடினம். மரங்களை வெட்டாதீர்கள். அவைகளுக்கும் உணர்வு, பாசம், வலிகள் உண்டு. அவைகளும் நம்மை போலவே. ஆனால் நம்மைவிட மேலானவர்கள்.

Monday, October 8, 2018

கிணறு

           எங்கள் வீட்டில் ஒரு அழகான சிறிய கிணறு இருந்தது. வீட்டிற்கு இருபத்தி நான்கு மணி நேரமும் தண்ணீர் சேவையை இலவசமாக வழங்கிக்கொண்டிருந்தது. அழகான சதுர வடிவம் கொண்ட கிணற்றின் இருபக்கமும் இரண்டடி உயரமுள்ள பெரிய தூண்கள். அதை இணைத்து மரத்தால் ஆன ஒரு சட்டமும், அதில் எப்பொழுதும் நீர் இறைக்க ஒரு உருளையும் கட்டித் தொங்க விடப்பட்டிருக்கும்.

          பதினைந்து இருபது வருடங்களுக்கு முன்பெல்லாம் ஊரில் காவிரியாற்றின் நீரை பெரிய குழாய்களின் மூலமாக கொண்டு வந்து கிராமங்களில் வீட்டுக்கு வீடு நீர் வழங்கும் திட்டம் எதுவும் வந்திருக்கவில்லை. ஊரின் நுழைவாயில் அருகில் ஒரு பொது கிணறு. அதனருகில் ஒரு ஆழ்துளைக் கிணறும் ஒரு பெரிய தண்ணீர் தொட்டியும் இருக்கிறது. இதன் மூலம் தான் ஊருக்குள் தண்ணீர் வழங்கப்படும். எந்த க்ளோரினும் கலக்காமல் சுத்தமான நீர்.

          வீதிக்கு ஒரு தண்ணீர் குழாய். அது போல வீதிக்கு ஒரு வீட்டிலாவது ஒரு கிணறு இருக்கும். இந்த கிணறுகள் எங்களை எப்பொழுதும் நீருக்காக திண்டாட வைத்ததில்லை. குடத்தை தூக்கிக் கொண்டு சாலை மறியல் செய்ய வைத்ததில்லை. முக்கியமாக இந்த நீரால் முடி கொட்டியதில்லை. ஒரு வாளித் தண்ணீரை இறைத்து கையில் அள்ளி எடுக்காமல் அப்படியே வாய் வைத்து குடிக்கும் சுகமே தனி. என்ன பெரிய ஐஸ் தண்ணி, ஜூஸ். எங்க கிணத்து தண்ணி கிட்ட பிச்சை எடுக்கணும்.

          இருபதிலிருந்து இருபத்தைந்து அடி வரை ஆழமிருக்கும் எங்கள் கிணறு கோடை காலத்தில் மட்டும் நீர் குறைந்து ஒரு மாதம் வறண்டு அதன் அருமையை எங்களுக்கு புரிய வைக்கும். மழை காலங்களில் நீர் நிரம்பி வழிவதை பார்ப்பதற்கு அவ்வளவு ஆனந்தமாய் இருக்கும். அருகிலுள்ள அனைவரின் தண்ணீர் தேவையை இந்த தேவதை தீர்த்து வைத்துக்கொண்டே இருந்தாள். உருளையில் எப்பொழுதும் கயிறும், வாளியும் இணைந்தே இருக்கும்.



          எங்கள் வீட்டிற்கு எதிரில் கண்ணாடி ஆயாவின் வீடு இருந்தது. சுமார் எண்பது வயதிருக்கும். அந்த காலத்திலேயே கண்ணாடி போட்டிருந்ததால் கண்ணாடி ஆயா என்றே அழைப்போம். அவரும் எங்கள் கிணற்றில் தண்ணீர் எடுக்க வருவார். ரொம்ப வயதான பாட்டி ஆயிற்றே என்று நான் இருக்கும்போதெல்லாம் தண்ணீர் சேந்திக் கொடுப்பேன். எதுவும் சொல்லாமல் குடத்தை எடுத்துக்கொண்டு சென்றுவிடுவார்.

          குடத்தில் நீர் தளும்பத் தளும்ப இருக்க வேண்டும் பாட்டிக்கு. சிறிது குறைந்தாலும் "உன் மாமியார் கண்ணு குருடா? தண்ணி கொறச்சலா இருக்கு" என்று திட்டிக்கொண்டே செல்வார். தண்ணீர் சரியாக ஊற்றினால், வேகமா சேந்த மாட்டியா என்று ஏதாவது குறை சொல்லிக்கொண்டே இருப்பார். எனக்கும் கோவம் வரும். பெரியவர்களிடம் சண்டை போடக்கூடாது என்று அம்மா சொன்னதால் அமைதியாகி விடுவேன்.

          ஒரு முறை எங்கள் பக்கத்து வீட்டு பெரியம்மா பையன் தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்தான். கண்ணாடி ஆயாவும் குடத்தைத் தூக்கிக் கொண்டு வந்து நின்றது. அவனிடம் "எங்க போனா உங்க ஆத்தாகாரி? இப்படி ஆம்பள பையன வேல செய்ய விட்டுட்டு அவ என்ன பண்றாளாம்" என்று கேட்டது. அவனும் பதில் சொல்லிக்கொண்டே பாட்டியின் குடத்துக்கும் சேர்த்து நீர் இறைத்து முடித்தான். உடனே இந்த ஆயா "நீ மகராசனா இருப்பா. ஆம்பள பையன் இப்படி தண்ணி சேந்திரியே" என்று கூறிவிட்டு சென்றது.

          "அடி பாவி கிழவி நான் எத்தனை தடவை தண்ணீர் சேந்தி ஊத்தியிருப்பேன். ஒருமுறையாவது ஒரு நல்ல வார்த்தை சொல்லியிருப்பியா? நீ நல்ல வார்த்தை சொல்ல வேண்டாம். குறை சொல்லாமல், திட்டாமல் இருந்திருப்பியா?" என்று திட்டிக்கொண்டேன். அப்பொழுதே ஏன் ஆண் பிள்ளைகளையும் பெண் பிள்ளைகளையும் சமமாக பார்ப்பதில்லை என்ற கேள்வி தொடங்கியிருந்தது. அதுவே வளர வளர வெறுப்பாகவும் மாறத் தொடங்கியிருந்தது.

          நகரத்து வாழ்விற்கு வந்து எட்டு வருடங்களாகிறது. இங்கு நான் ஒரு கிணற்றைக்கூட பார்த்ததில்லை. ஊரில் இருந்த சமயத்தில் சிறிது தண்ணீர் சிந்தினால் கூட "தண்ணியை காசு கொடுத்து வாங்கி குடிக்கும்போது தான் தெரியும் அதன் அருமை" என்று பள்ளியில் படித்ததை வைத்து சண்டை போடுவேன். "தண்ணிய யாராவது காசு போட்டு வாங்குவாங்களா?" என்று என் வீட்டிலும் பக்கத்து வீட்டிலும் என்னை பார்த்து சிரித்தனர்.

          பதினேழு வருடங்கள் ஆகிறது நான் அதை கூறி. இப்பொழுது எங்கள் ஊரிலேயே கேன் தண்ணீர் விற்பனை பிரமாதமாக இருக்கிறது. சிரித்த அனைவரும் இப்பொழுது கேன் தண்ணி தான். நகரத்திலும் இது தான். 25 லிட்டர் கேன் தண்ணி 35 ரூபாய். நகரத்தில் எங்களுக்கு வேறு வழியில்லை. சரி கிராமத்தில் தான் காவிரித் தண்ணீர் வருகிறதே, போதாகுறைக்கு ஊர் பொது கிணற்றில் தண்ணீர் இருக்கிறதே என்றால் "இந்த தண்ணீர் குடித்தால் கேன்சர் வருகிறதாம். கேன் தண்ணி தான் சுத்தமாம். அது தான் நல்லதாம்" என்று பதில் வருகிறது.

          என்ன என்னவோ காரணங்கள் கூறி நமக்கு இலவசமாக இயற்கை கொடுத்த அனைத்தையும் அழித்தும், இழந்தும் வருகிறோம். நவீன வளர்ச்சியில் நாம் இழந்து வருவதில் கிணறுகள் முக்கியமானவை. அறிவியல் வளர்ச்சியின் கூடவே மூட நம்பிக்கையின் வளர்ச்சி அதீதம். ஆம் அந்த மூட நம்பிக்கையால் தான் நான் எங்கள் வீட்டு கிணறை இழந்தேன். எங்கள் ஊரில் உள்ள வாஸ்த்து நிபுணராகவும் அதி மேதாவியாக கருதப்படும் ஒருவரால் எங்கள் கிணற்றுக்கு பால் ஊற்றி மூடப்பட்டது.

          கிணறு அக்னி மூலையில் இருப்பதாகவும் குடும்பத்திற்கு ஆகாது என்றும் கூறி மண்ணை வாரிப் போட்டனர். எம் முன்னோர்கள் யாரும் இதை அறிந்திராமல் தான் கிணறு வெட்டினார்களா? அவர்கள் வாஸ்த்து அறிந்திருக்கவில்லையா? அப்படியென்றால் அவர்கள் குடும்பம் நன்றாக வாழவில்லையா?  நன்றாக வாழவில்லையென்றால் எங்கள் தலைமுறை வரை எப்படி பிழைத்திருக்கிறோம்?

          இயற்கையோடு இணைந்து வாழ்ந்த வாழ்க்கையே இன்பமாய் இருந்தது. இயற்கையோடு தொடர்பற்ற இடத்தில் பற்று குறைந்தேவிடுகிறது.

Tuesday, October 2, 2018

உண்மையும் பொய்யும்

          சிறு வயதிலிருந்தே யாராலும் உண்மையை மட்டுமே பேசி வளர்ந்திருக்க முடியாது. ஏதோவொரு சந்தர்ப்பத்தில் பொய்யின் உதவியை நாடியிருப்போம். பொய்யின் உதவியால் பல தருணங்களில் பல்வேறு பிரச்சனைகளில் மாட்டியிருப்போம் அல்லது தப்பித்திருப்போம்.

          நானெல்லாம் பொய்யின் வீட்டிலேயே குடியேறியிருந்தேன். என்ன பாக்குறீங்க? நானே தான். நிறைய பொய்யிருக்கும். நினைவு தெரிந்த நாளில் இருந்து வயதிற்கு ஏற்றது போல, சூழ்நிலைக்குத் தகுந்தாற் போல பொய்கள் வேறுபட்டிருக்கும். இப்பொழுது யோசித்தால் எதற்க்காக இந்த பொய்யின் உதவியை நாடினேன் என்றால் வெவ்வேறு காரணங்கள் இருக்கின்றது. இதில் பயமே முதல் காரணம்.

           நினைவு தெரிந்து ஒரு எட்டு ஒன்பது வயதிலிருந்து பொய் சொல்லியிருப்பேன். பொய் சொன்ன முதல் சம்பவம் இதிலிருந்தே  நியாபகம் இருக்கிறது. சைக்கிள் ஓரளவு ஓட்டிப் பழகியிருந்த தருணம். என் தாத்தாவின் சைக்கிள், ஹெர்குலஸ் பெரியது அதுவும் தண்டியுடன். நானோ இரண்டு அடி இருந்திருப்பேன். சைக்கிளோ மூன்று அடி இருக்கும். அப்பொழுது தான் குரங்கு பெடல் ஓட்ட கற்றிருந்த சமயம்.

           பள்ளியிலிருந்து வீட்டுக்கு வந்தவுடன் சைக்கிள் ஓட்டுவது தான் முதல் வேலை. அன்று என் பள்ளித் தோழர்களான சதீஸ், பிரபாகரன் மற்றும் கௌசல்யா அனைவரும் சேர்ந்து என் உயிர் தோழனான பிரகாஷ் வீட்டிற்கு செல்வதாக திட்டமிட்டிருந்தார்கள். சைக்கிளில் செல்வதால் என்னை அழைக்கவில்லை. நான் குரங்கு பெடல் தானே. நானும் எப்படியாவது சென்றுவிட வேண்டும் என்று முடிவு செய்துகொண்டு வீட்டிற்கு வந்து சேர்ந்தேன்.

          வீட்டிற்கு வந்தால் எருமைகளுக்கு புல்லறுக்க அம்மா செல்வதால் தங்கையை பார்த்துக் கொள்ளும் பொறுப்பு எப்பொழுதும் போல என் தலையில் விழுந்தது. என் தங்கைக்கு அப்பொழுது 3 அல்லது 4 வயதிருக்கும். இப்பொழுது அவளை என்ன செய்வது என்று யோசித்து யோசித்து, சரி அவளையும் அழைத்துக்கொண்டே சென்றால் என்ன என்று முடிவெடுத்தேன். சைக்கிளை சாலை ஓரமாக நிறுத்தி அவளை கஷ்டப்பட்டு தூக்கி உட்கார வைத்தேன். அருகில் கோணப்புளியாங்கா மரம் வெட்டப்பட்டு முட்களோடு விறகுக்காக போடப்பட்டிருந்தது.

          முதல் முறை டபுள்ஸ். சைக்கிள் ஸ்டாண்டை எடுத்துவிட்டு ஒரு வழியா மொத்த பாரத்தைத்  தாங்கி காலை பெடலில் வைத்து நகர்த்தும்போது நிலை தடுமாறி சைக்கிள் என் பிடியில் இருந்து தப்பித்தது. ஒரு கனம் மூச்சே நின்றது போல் ஆனது. நான் ரோட்டிலும், சைக்கிள் முள் மீதும், என் தங்கை முள்ளுக்கும் சைக்கிளுக்கு நடுவிலும் கிடந்தோம்.

          எல்லாம் கெட்டது போ என்று வேக வேகமாக அவளையும், சைக்கிளையும் தூக்குவதற்குள் அவள் அழுது ஊரைக் கூட்டத் தொடங்கியிருந்தாள். அய்யோ செத்தேன் என்று யாரும் வருவதற்குள் அவளை தூக்கி நிறுத்தி கெஞ்ச ஆரம்பித்தேன். அழுகையை நிறுத்த தவுசாயி அம்மாயி கடைக்குக் கூட்டிச் சென்று தேன் மிட்டாயும், எலந்த பொடியும் வாங்கிக் கொடுத்து சமாதானம் செய்தேன்.

         இனி தான் பிரச்சனையே ஆரம்பம். அம்மாவிடம் இதை சொல்லக்கூடாது என்று கெஞ்சி, அதற்காக தினமும் அவள் கேட்கும் மிட்டாய் வாங்கித் தருவதாக பேரம் பேசி முடித்தேன். இங்கு தான் பொய் சொல்ல ஆரம்பித்திருப்பதாக நினைவிருக்கிறது. இன்று வரை பொய் சொல்வது மிக எளிதாகவும், ஒரு வழக்கமாகவும் மாறிவிட்டிருக்கிறது.

          இந்த பொய் கூறும் பழக்கம் நிறைய நேரம் கைவிட்டிருக்கிறது. சில நேரங்களில் மட்டுமே காப்பாற்றியிருக்கிறது. ஒரு பொய் கூற ஆரம்பித்து, அதை காப்பாற்ற பல பொய்கள் கூற வேண்டியிருந்தது. செய்த தவறில் இருந்து தப்பிக்க பொய் சொல்ல ஆரம்பித்து, அம்மாவை கஷ்டப்படுத்தக் கூடாது என்பதற்காக அதை தொடர்ந்து, சுதந்திரத்தை அனுபவிப்பதற்காகவும், தேவையற்ற கேள்விகளைத் தவிர்க்கவும், பெண்ணிற்கு இருக்கும் கட்டுப்பாட்டில் இருந்து தப்பிக்கவும் பயன்படுத்திக் கொண்டேன்.

          இந்த பொய்யின் உதவியால் ஒரு கட்டத்தில் என் சுயத்தை வீட்டில் இழந்திருந்தேன். நான் அல்லாத வேறொரு பிம்பத்தை என் வீட்டில் வளர்த்திருந்தேன். அதற்காக நிறைய நடிக்க வேண்டியிருந்தது. இந்த பிம்பம் உடையும்பொழுது அதை என் பெற்றோர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஒரு கட்டத்தில் இந்த பொய் கூறுவதை நிறுத்தி உண்மையை கையாண்டு நிம்மதியோடு வாழ வேண்டும் என்று தோன்றியது. உண்மை பேசுவதால், எங்கே மாட்டிக்கொள்வோமோ என்ற பயம் இருக்காது. நம் சுயத்தை அறிந்த உறவுகளும், நட்புமே உடனிருக்கும்.

          இன்று அக்டோபர் 2, காந்தி ஜெயந்தி. காந்தியைப் பற்றி சிறு வயதிலிருந்தே ஒரு மோசமான பிம்பம் என் மனதில் விதைக்கப் பட்டிருந்தது. இது நாள் வரை அது தொடர்ந்து கொண்டிருந்தது. இனி அவர் விட்டு சென்ற நல்ல கருத்துக்களை மட்டும் எடுத்துக்கொண்டு யாரையும் வெறுக்காமல் இந்த வாழ்க்கையை உண்மையோடு வாழ முடிவெடுத்துள்ளேன். இனி முடிந்த வரை பொய்யின் உதவியை நாடாமல் இந்த அழகான வாழ்க்கையை தொடர போகிறேன்.

          இந்த வயதிலுமா பொய் கூறுகிறீர்கள் என்றால் ஆம். மலையேற்றம் செல்லும்போது, தனிப் பயணம் மேற்கொள்ளும்போது, நிகழ்வுகளுக்கு செல்லும்போதும் வீட்டில் சொல்வதில்லை. மறைப்பதற்காக அல்ல தேவையில்லாத கேள்விகளையும், அச்சங்களையும் தவிர்ப்பதற்காக. என் பொய்யின் ஆரம்பமும், ஆணிவேருமாய் இருப்பது பயம். பின் பெண் என்பதால் ஏற்படும் சுதந்திரமின்மை, அடக்குமுறை ஆகியவற்றில் இருந்து தப்பிக்க எடுத்துக் கொண்ட ஆயுதம். இனி இவை அனைத்தையும் உண்மையைக் கொண்டு கையாளப் பழக வேண்டும்.

          ஓ மறந்தே போய்விட்டேன். எங்கு கீழே விழுந்தாய் என்று அம்மா என் தங்கையிடம் கேட்க, அவளுக்கு பொய் சொல்ல தெரியாமல், திக்கி திக்கி உண்மையை போட்டு உடைத்து என் தோலை உரித்து தொங்கவிடுவதை பார்த்துக்கொண்டே இலந்தை பொடியை நக்கிக் கொண்டிருந்தாள். ஒரு  வாரம் சைக்கிளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது.

          கடைசியாக ஒரு கருத்து. உண்மை நம்மை காப்பாற்றும். பொய்யை நாம் காப்பாற்ற வேண்டும்.