Thursday, January 30, 2020

கோபம் வருகிறதே - காந்தி

கோபம் வருகிறதே பதிவின் இறுதியில் நான் கூறியது இப்படி கோபம் மட்டும் படாமல் ஒரு ஆக்க பூர்வத் தீர்வை நோக்கி செல்ல வேண்டும் என்று. ஆம், புரிதலுடன் ஆக்க பூர்வ செயலை நோக்கி நகரவேண்டும். அதற்காக நான் கரம் பற்றிக் கொள்ள போகும் ஒருவரின் இறந்த நாள் தான் இன்று.

அவர் இறந்து இத்துனை ஆண்டுகளுக்கு பிறகும் ஒரு ஆக்க பூர்வ தீர்விற்கு அவர் கரம் பற்ற நினைக்க வைப்பதே மலப்பாய் உள்ளது. அதனால் தான் அவர் மஹாத்மா எனப்படுகிறார் என்றே நினைக்கிறேன்.

நம் வாழ்வில் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்க நமக்கு ஒரு சாட்சி தேவை படுகிறது. ஒரு உறவு, ஒரு செயல், ஒரு பணி என்று எதை எடுத்துக்கொண்டாலும் அதில் ஒரு சாட்சியைத் தேடுகிறோம். அந்த சாட்சி கண்முன்னே இருந்தால் நம்மில் ஒரு நம்பிக்கை அதை நோக்கி நகர்கிறது. அப்படியான சாட்சியைத் தான் நான் தேடிக்கொண்டிருந்தேன்.

ஆம் அறம், அன்பு, நேர்மை, சமத்துவம், செயல் தீவிரம், சுயநலமின்மை, எளிமை என அனைத்தையும் கொண்டு இப்பொழுதிருக்கும் இந்த சுயநல உலகில் வாழ முடியும் என்று வாழும் சாட்சிகளை கடந்த இரண்டு வருடங்களாக கண்டடைந்து கொண்டே வருகிறேன். இவை அனைத்தையும் கொண்ட வெவ்வேறு மனிதர்கள் அவர்களின் வெவ்வேறு உலகங்கள் என்று ஒருவருக்கு ஒருவர் எவ்வகையிலும் தொடர்பில்லாமல் இருந்தாலும் அவர்களை இணைக்கும் ஒன்று காந்தியம்.

இத்துனை மனிதர்களை இப்படி ஒன்று சேர்க்கும் அந்த ஒருவர் என்னுடைய சிறுவயதில் மிக மோசமான ஒருவராகத் தான் என்னை வந்தடைந்திருந்தார். ஆம், தேச பிதா ஒரு துரோகி. நமக்கு மிகப் பெரிய துரோகம் செய்துவிட்டார் என்று. எதையும் பெரிதாய் ஆராய்ந்து பார்க்கத் தெரியாத வயது. அப்படியே ஏற்றுக்கொண்டு பயணித்தேன். ஆனாலும் ஒரு சந்தேகம் தேசப்பிதா என்று சொல்லிவிட்டு திட்டுகிறார்களே என்று.

சுற்றம் என்றும் அவரை வசை பாடியது. காரணம் எதுவும் தெரியாமல் அவர் மீது பெரிய ஈர்ப்பு, ஈடுபாடு இல்லாமல் சிறிய வெறுப்புடன் தான் வளர்ந்தேன். அவரை பற்றி தெரிந்து கொள்ள பெரிய தேவை இல்லை காரணம் நான் ஓடிக்கொண்டிருந்தது ஒரு சாதாரண வாழ்வை வாழவே.

இன்றும் என் அலுவலக்தித்தில் அவரை வசைபாடும் பொழுது எதற்காக அவர் இவ்வளவு வெறுப்பை சுமக்கிறார் என்று தேடத் தோன்றியது. மற்றவர் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்ள நான் ஒன்றும் அந்த சிறுபிள்ளை இல்லையே. அவரை பற்றி அறிந்துகொள்ள ஆரம்பிக்கும் பொழுது தான் பிரமித்து போனேன். அவர் ஏன் இவ்வளவு வசைகளை சுமக்கிறார் என்று அப்பொழுது தான் புரிந்தது.

அவரை புரிந்து கொள்ள ஆரம்பித்த தருணத்தில் தான் குக்கூ பள்ளியை வந்தடைந்திருந்தேன். அவரின் செயல் விளைவை நேரடி சாட்சிகளாக காண ஆரம்பித்தேன். அவரை பற்றிய புரிதல் அங்கிருந்து தான் தொடங்கியது. அது இன்னும் நீளும் வெவ்வேறு கோணங்களில்.

அறம், அன்பு, நேர்மை, சமத்துவம், செயல் தீவிரம், சுயநலமின்மை, எளிமை என மேலே கூறிய அனைத்தையும் கொண்டு ஒரு மாற்றத்தை நோக்கி சென்றவர்களைத் தேடினால் அங்கே காந்தியும் அவரை பின்பற்றியவர்களையும் தவிர வேறு யாரும் தென்படவில்லை.



இன்று ஒரு பெரிய செயல் நோக்கி செல்ல மிகப் பெரிய வழிகாட்டிகளாக காந்திகள் தான் முன்னே நிற்கிறார்கள். அதனால் தான் அவரை பற்றி புரிந்துகொள்ள இப்பொழுது இன்னும் தீவிரமாய் முயற்சிக்கிறேன்.

காந்தியைப் பற்றிய என் முதல் புரிதல் -- காந்தியை புரிந்தவர்கள் அவரை போற்றவோ, பூஜை செய்யவோ, அவரை நிரூபிக்கவோ எந்த முயற்சியும் செய்ய மாட்டார்கள், அவர்களும் காந்தியாகவே மாறியிருப்பார்கள்.

என் புரிதல் தவறாக இருக்கும் பட்சத்தில் அதை சரியாக்கிக் கொள்ள தயங்க மாட்டேன், நம் பிதாவை போல.

Sunday, January 12, 2020

குழந்தைத் தேர்வுகள்

மூன்று ஐந்து எட்டாம் வகுப்புக்குகளுக்கு பொது தேர்வாம். கேட்டதிலிருந்து மிக பெரிய கோபமும், வருத்தமும் இருந்து கொண்டே இருக்கிறது.

கோபம் என்னவென்றால் அந்த குழந்தைகளை ஏன் இப்படி வதைக்கிறீர்கள் என்பதே. அவர்களுக்கு தேர்வு என்பதே கொடுமை. இதில் பொதுத்தேர்வு என்பது எவ்வளவு பெரிய வன்மம். இதற்காக அவர்கள் நம்மை மன்னிக்கவே மாட்டார்கள்.

வருத்தம் என்னவென்றால் இந்த தேர்வை ஆதரிப்பவர்களும் இருக்கிறார்கள் என்பதே. இன்று ஆதரிப்பவர்களுக்கு இந்த தேர்வுகள் இருந்திருந்தால் பாதி பேர்கூட தேர்ச்சி பெற்றிருக்க மாட்டார்கள். இதை ஆதரிப்பதற்கு அற்பத்தனமான காரணங்கள் வேறு.இப்பொழுது இருக்கும் குழந்தைகள் மிகவும் புத்திசாலிகள், திறமை மிகுந்தவர்கள், கைபேசியெல்லாம் அசால்ட்டாக பயன்படுத்தத் தெரிகிறது என்றெல்லாம் கூறுபவர்களுக்கு இப்பொழுது அவர்கள் இருக்கும் வேலையின் பொருட்டு ஒரு அடிப்படைத் தேர்வு வைத்தால் எல்லாம் தெறித்துவிடுவார்கள்.

இந்த தேர்வுகள் எதை நிரூபிக்க வைக்கப் படுகிறது. அந்த வயதில் தரம் பிரித்து எதை கண்டடைய போகிறீர்கள். இல்லை அந்த வயதில் உங்களால் தான் தரம் பிரிக்க இயலுமா? இந்த வயதில் தேர்வு வைத்து அவர்களுக்குள் மிகப் பெரிய தாழ்வு மனப்பான்மையோ, உயர்வு மனப்பான்மையையோ உருவாக்கப் போகிறீர்கள் தெரியுமா? இதனால் எத்தனை குழந்தைகளுடைய அடிப்படை கல்வி தடைபடும் என்றாவது தெரியுமா?



என்ன மாதிரியான சமூகத்திற்கு இது வித்திடும்? மதிப்பெண் பின்னாடி ஓடும் அடுத்த தலைமுறையை 7 வயதிலிருந்தே உருவாக்குவதற்கா? இந்த உலகில் எதை பற்றியும் கவனிக்காமல், வாழ்க்கையை அனுபவிக்கக் கூட நேரமில்லாமல், சிந்திக்க முடியாமல், பந்தயத்தில் ஓடிக் கொண்டே இருக்கவா? இப்படி அடுத்த தலைமுறை சிந்திக்காமல் வளர்த்தெடுத்தால் தான் எதுவும் கேள்வி கேட்க மாட்டார்கள் என்றா?

இவை எதுவும் இல்லாமல் தத்தி தத்தி மெதுவாக கல்வியின் பக்கம் காலெடுத்து வைக்கும் ஒரு சமூகத்தை பிடரியில் அடித்து நீயெல்லாம் படிக்கவே வரக்கூடாது என்று கூறவா? இப்பொழுது தான் படிப்பு, வேலை என்று அடித்தளத்திலிருந்து பெண்கள் வெளியே வரத்தொடங்கி இருக்கும் நிலையில், இந்தத் தேர்வுகள் அவர்களின் பள்ளி படிப்பிற்கு முற்றுப்புள்ளி வைத்து மீண்டும் அடுப்படிக்கே கொண்டு செல்லாது என்றாவது கூற முடியுமா?

உண்மையிலேயே இந்த தேர்வு முறை எப்படி ஒரு சமூக மாற்றத்திற்கு வித்திடும் என்று யாராவது விளக்க முடியுமா?

இப்பெல்லாம் யாருங்க ஸ்கூலுக்கு அனுப்பாம இருக்காங்க என்று கேட்பவர்களுக்கு இன்றும் பேருந்து போகாத ஊர், அடிப்படை வசதிகள் இல்லாத ஊர், ஓன்றாம் வகுப்பில் படிக்கும் குழந்தை தான் முதல் பள்ளி செல்லும் தலைமுறை என்று இன்றும் இருக்கிறது என்பதாவது தெரியுமா?

நாம் ஏன் இதை பற்றி வாய் திறக்காமல் போய்க்கொண்டிருக்கிறோம்? இதன் வீரியம் புரிந்த ஒரு சிலரே இதை எதிர்த்து கூட்டம் நடத்தி போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆனால் மற்றவர்கள்? இதை பற்றி யாராவது விவாதித்தோமா? நமக்கென்ன என்று 9 மணி நேர வேலைக்கு 12 மணி நேரத்துக்கும் மேலாக அடிமையாய் வேலை செய்துவிட்டு அமைதி காக்கிறோம்.

ஆனால் நமக்கு தெரியவில்லை வருங்கால சந்ததிக்கு நாம் மிகப் பெரிய துரோகம் செய்கிறோம் என்று. அவர்களின் வேலை நேரம் 12 மணி நேரமாக ஆக்கப்பட்டு அவர்கள் 16 மணி நேரம் வேலை பார்க்க வைக்கப் படுவார்கள். எல்லாம் கையை மீறிக் கொண்டு போன பின்பு நம்மை அவர்கள் மன்னிக்க மாட்டார்கள்.

ஏற்கனவே 10, 11 மற்றும் 12 வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு வைத்து அந்த மாணவர்களை கொடுமை படுத்துவது போதாதா? அதுவும் தனியார் பள்ளிகள் நரகத்தை விட கொடுமையானவை. 10 அடி தூரத்தில் பள்ளியிருந்தாலும் விடுதியில் தான் சேர்க்க வேண்டும் என்று கட்டாயப் படுத்தி சேர்க்க வைப்பார்கள். அந்த விடுதிக்கு சிறைச்சாலை எவ்வளவோ தேவலாம் என்று தோன்றும் அளவுக்கு கொடுமையை அனுபவிப்பார்கள். நான்கு மணி நேரம் தான் தூங்குவதற்கு அனுமதிப்பார்கள். மீதி நேரமெல்லாம் படிப்பு, படிப்பு என்று உளவியல் ரீதியாக பெரும் பாதிப்பை அடைவதை யாராவது மறுக்க முடியுமா?



நன்றாக படிப்பவர்களின் திறன் கூட இந்த அழுத்தத்தில் குறைந்து விடுவது தான் உண்மை. இல்லையென்று யாராவது சொல்லுங்கள் பார்க்கலாம்.

நன்றாக உன்னித்துப் பாருங்கள், இந்த மாதிரி மதிப்பெண் பின்னாடி துரத்தி வளர்க்கப்பட்ட தலைமுறை இன்று சமூகத்தில் எப்படி வாழ்கிறார்கள் என்று. அவர்களுக்கு என்று பெரும் கனவுகள் இருப்பதில்லை. அப்படி
கனவுகள் இருந்தால் அது பொருள் சேர்ப்பதை நோக்கியே இருக்கும். மாதம் ஒரு லட்சம் சம்பாதித்தாலும், தான் சந்தோசமாக இல்லை என்று தான் கூறுவார்கள். சமூக அக்கறை இல்லாமலே இருப்பார்கள். அப்படி சமூக அக்கறை இருந்தால் அது பெயர் புகழுக்காக இருக்கிறது.

நான் 6, 7 மற்றும் 8ஆம் வகுப்பில் மூன்று பாடப் பிரிவுகளில் ஒரு முறை கூட 35 மதிப்பெண்கள் பெற்று ரேங்க் வாங்கியது இல்லை. ஆம், காலாண்டு, அரையாண்டு மற்றும் முழாண்டுத் தேர்வு எதிலும் கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் தேர்ச்சி பெற்றதே இல்லை. ஒன்பதாம் வகுப்பில் இருந்து தான் எப்படி படிக்க வேண்டும், தேர்வுக்கு எப்படி படிக்க வேண்டும் என்றே தெரிந்து கொண்டு அதுவும் 35 லிருந்து 40 க்குள் பெற்று தேர்ச்சி பெறுவேன். இன்று என்னால் ஒரு பெரிய நிறுவனத்தில் வேலையில் சேர முடியவில்லையா என்ன?

ஒரு வேலை ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பில் பொதுத் தேர்வு வைத்து நான் தோற்றிருந்தால் என்ன நடந்திருக்கும். பன்னிரெண்டாம் வகுப்பு முடித்தவுடன் தையல் வகுப்பில் சேர்க்கிறேன் என்று சொன்ன என் தந்தை பத்து வயதிலேயே தையல் பள்ளியில் சேர்த்து விட்டிருப்பார். பதினெட்டு வயதில் பேசி அப்பாவுக்கு புரிய வைத்ததை பத்து வயதில் செய்திருக்க முடியாமல் இன்று என் வாழ்க்கை திசை மாறியிருக்கும். என் குடும்பம் இன்றும் அடி மட்டத்தில் தவித்துக் கொண்டிருந்திருக்கும்.

மதிப்பெண் குறைவால் குழந்தைகள் சந்திக்க நேரிடும் அவமானங்கள் அதிகமாக இருக்கும். தன் சொந்த வீட்டிலேயே ஒப்பிட்டு பேசுவது மிக அதிகமாகும். இதனால் ஒப்பிட்டு பேசப்படும் நண்பன் மீது கூட ஒரு வெறுப்பு உருவாகும். நானே இதை அனுபவித்துள்ளேன். பத்தாம் வகுப்பில் என்னை விட அதிகமாக மதிப்பெண் எடுத்த நண்பர்கள், உறவின் சகோதர, சகோதரிகள் மீது ஏனோ புரியாத வெறுப்பு உருவானது. அவர்களிடம் பேசும்போது என்றும் ஒரு தாழ்வு மனப்பான்மை இருந்து கொண்டே இருந்தது நான் வேலைக்கு சென்று சேரும் வரை. இது ஒரு வெறுப்பு சமூகத்தை உருவாக்காதா?

செல்போன் பயன்படுத்தத் தெரிகிறது, துரு துருவென்று இருக்கிறார்கள், அவர்களுக்கு தேர்வு வைத்தால் அவர்கள் திறமை மேம்படும் என்று சொல்பவர்களை பார்த்தால் சிரிப்பு தான் வருகிறது. குழந்தைகள் எல்லாவற்றிலும் ஆர்வம் உள்ளவர்கள். அவர்களுக்கு எல்லாமே புதிது. அதனால் அனைத்தையும் அவர்கள் ஆராய்ந்து கொண்டே இருப்பார்கள். புதியதாய் இருக்கும் ஒவ்வொன்றையும் சோதனை செய்துகொண்டே இருப்பார்கள். அதை வைத்து தேர்வு வைக்க வேண்டும் என்று சொல்வது வேடிக்கையாய் இல்லையா?


அப்படிப்பட்ட குழந்தைகளுக்கு செயல் முறை கல்வி அளித்தால் ஒழிய ஒரு நல்ல சமூகத்தை உருவாக்க முடியாது. செயல்முறைக் கல்வி சிந்திக்க கற்றுக்கொடுக்கும். கற்பனைத் திறனை வளர்த்தெடுக்கும். மதிப்பெண் மட்டுமே குறியாக வளரும் தலைமுறை அடுத்தவர்களிடம் அடிமையாகவே வேலை பார்ப்பதற்காக உருவாக்கப் படும் தலைமுறை. தனக்கென சொந்த கருத்து இல்லாமல், அறிவார்ந்த செயல்பாடுகளில் ஈடுபட முடியாமல் அடிமைச் சமூகமாகவே வளர்ந்து வாழ்ந்து இறக்கும்.

குழந்தைகளை குழந்தைகளாய் இருக்க விடுங்கள்.

Saturday, January 11, 2020

கனவை நோக்கி பறக்கும் சுஜிக்கு

சிறுவயதில் ஒவ்வொருவருக்கும் ஒரு கனவு இருந்திருக்கும். நான் இப்படி ஆகப் போகிறேன், நான் அப்படி ஆகப் போகிறேன் என்று. காலப்போக்கில் குடும்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப அந்த கனவுகள் காற்றில் பறந்திருந்தாலும் மனதில் எங்கோ ஒரு மூலையில் ஒட்டிக் கொண்டிருக்கும். எனக்கும் கூட அப்படி ஒரு கனவு இருந்திருக்கிறது. பைலட் வேலைக்கு செல்ல வேண்டுமென்பது. அப்பா லாரி ஓட்டினால் நாம் விமானம் ஓட்டுவோம் என்று.  இன்று வரை இது ரகசிய கனவு தான்.

இது போல் ஒவ்வொருவருக்கும் ஒரு கனவு இருந்திருக்கும். எவ்வளவு விதமான கனவுகள் இருந்தாலும் படித்தவர்கள் அதிகமாக விழுவது மென்பொருள் துறையில் தான். இங்கே மட்டும் விழுந்து விட்டால் வெளியே செல்வது கடினம். எல்லா வகையான வசதிகளையும் கொடுத்து இதிலிருந்து மீளமுடியாதவாறு பார்த்துக் கொள்ளும். வெளியில் செல்வதை பற்றி பாதுகாப்பற்ற ஒரு சிந்தனையை கொடுத்துவிடும்.

ஆனால் இந்த எட்டு வருட சொகுசான/பாதுகாப்பான வேலையை விட்டு விட்டு தன் கனவைத் துரத்தி பறக்கிறாள் என் தோழி. அவள் வேலையை ராஜினாமா செய்துவிட்டு தன் சிறுவயது கனவான கலெக்டர் கனவை நோக்கி பயணிக்கிறாள். மிகப் பெரிய துணிச்சலான முதல் அடியை எடுத்து வைத்திருக்கிறாள்.

இதுவரை தன் குடும்பத்திற்காக தன் கனவை ஓரம் கட்டிவைத்துவிட்டு எட்டு வருடம் உழைத்திருக்கிறாள். பெண்களுக்கு அதிக கட்டுப்பாடுகள் இருக்கும். அதிலும் அப்பா இல்லாத பெண்களுக்கு இன்னும் இரண்டு மடங்கு இருக்கும். ஆண் இல்லாத வீட்டில் சிறிய விடயம் என்றால் கூட பெரிதாய் பேசித் தீர்த்துவிடுவார்கள். அதற்கு பயந்து எல்லா அம்மாக்களும் அளவில்லா கட்டுப்பாடுகளை தனக்கும், தன் பிள்ளைகளுக்கும் விதித்திருப்பார்கள்.

அவளை இப்படியான கட்டுப்பாடுகளுடன் வேலைக்கு செல்லும் பெண்ணாகத் தான் அறிமுகம் கிடைத்தது. விடுதியில் ஒரே அறை. ஆரம்பத்தில் எனக்கும் அவளுக்கும் துளியும் ஒத்துவராது. நிறைய சண்டையிட்டிருக்கிறோம். ஆனால் ஏனோ அவளை பிடித்துப் போனது. தான் உண்டு தன் வேலை உண்டு என்றிருந்தவள். அவள் வெளியே செல்வது மிக அரிது. நான் உள்ளே இருப்பது மிக அரிது. இருவரும் நேர் எதிர்.

ஆனால் ஒரு வருடத்திற்கு பிறகு இருவரும் சேர்ந்து சுற்றாத இடமில்லை. செய்யாத சேவைகள் இல்லை. அலுவலகத்தில் கூட சேர்ந்தே சுற்றினோம். அனைவருக்கும் எங்களை சேர்ந்தே தான் தெரியும். தனியாய் இருவரும் வீடு எடுத்து, சமைத்து, மலையேற்றங்களுக்கு சென்று, பயணங்கள் மேற்கொண்டு, அலுவலகத்திலும்/வெளியிலும் நிறைய சமூக பணியாற்றி இப்படி எங்களுக்கான அனுபவங்கள் கணக்கற்றவை.

அவளுடைய கனவைப் பற்றியும் அறிந்திருக்கிறேன். பள்ளியிலும், பழ்கலைக்கழகத்திலும், அலுவலகத்திலும்   தங்க மங்கையான அவளின் கனவு வீணாகிறதே என்றுகூட தோன்றும். ஆனால் அவளின் மொத்த குடும்பமும் அவள் உழைப்பில் இருக்கிறது. அண்ணனிடமிருந்து சரியான ஆதரவு இல்லாததால் தன் கனவை மூட்டை கட்டி வைத்து விட்டு இந்த மென்பொருள் துறையில் குப்பை கொட்டினாள்.

ஆனால் இன்று வேலையை விட்டு விட்டு படிக்கிறாள். அவளுடனும், அவள் கனவுடனும் இன்று துணை நிற்பது அவள் வாழ்க்கைத் துணை. ஆம், அவளை காதலிக்கும் அந்த மேன்மையான துணை அவள் கனவையும் சேர்த்து காதலிக்கிறது. அவள் சுமைகளை தான் ஏற்றுக்கொண்டு அவளை பறக்கச் செய்கிறது. அவளுடைய நம்பிக்கைக்கான அந்த துணையை நான் வணங்குகிறேன்.

ஒவ்வொரு பெண்களும், ஆண்களும் இது போன்ற ஆதரவை பெற்றோரிடம் தான் எதிர்பார்ப்பார்கள். அவர்களிடம் கிடைக்காத ஆதரவு வாழ்க்கைத் துணையிடம் கிடைக்கும்போது அனைத்து கனவுகளும் நிறைவேறும். தன்னுடன் சேர்த்து தன் கனவையும் நேசிக்கும் வாழ்க்கைத் துணையை கண்டடைவது வரம். அவ்வாறு ஒரு துணை கிடைத்தால் அவர்களை எதற்காகவும் தொலைத்து விடாதீர்கள்.



கனவை நோக்கி பயணிக்கும் என்னுயிர் தோழி சுஜிக்கும் அவள் கனவை நனவாக்கும் ஆனந்திற்கும் என் வாழ்த்துக்கள். அவள் கனவு நனவாக நம் பிரார்த்தனைகள்.

இது போல் உங்கள் கனவுகள் என்ன? உங்கள் துணையின்/பிள்ளைகளின் கனவுகள் என்ன? பகிர்ந்துகொள்ளுங்களேன்.

Thursday, January 9, 2020

கோபம் வருகிறதே

வாழ்வை ஒவ்வொரு நொடியும் சந்தோசமாகவும், மக்களுடன் கூடி கொண்டாட்டமாகவும், தினம்தினம் திருவிழா போல வாழ வேண்டும் என்பது என் கனவு. சத்தம் போட்டு சிரிப்பதற்கு கூட கட்டுப்பாடுகள் இருந்தால் அதை உடைத்தெறியவே நான் ஆசை படுகிறேன். அறத்தை மீறாத, கட்டுப்பாடுகளற்ற வாழ்வையே தேடுகிறேன்.

எல்லோர் போலவும் வேலை, நல்ல சம்பளம், தொந்தரவு இல்லாத குடும்பம், பிரச்சனை இல்லாத வாழ்க்கை, நினைக்கும் போது ஓய்வு, எதிர்காலத்தை பற்றிய பயமின்மை, நல்ல பொருளாதார சூழ்நிலை என்று ஒரு சாதாரண வாழ்க்கை போய்க்கொண்டிருந்தாலும் என்னால் தொடர்ந்து இதில் பயணிக்க முடியவில்லை.

பணம் செய்து, சொத்து சேர்த்து, அதை பெருமையாய் காட்டிக் கொண்டு திரிவதில் ஏனோ மனம் நாடவில்லை. இந்த சராசரி வாழ்க்கையை தொடர்வது தினம் தினம் ஒரு போராட்டமாய் இருக்கிறது. மனதிற்கு ஒவ்வாத ஒன்றை என்னை சுற்றியிருக்கும் மக்களின் வாய்ச்சொல்லுக்காக செய்ய நரகமாய் இருக்கிறது.

இதை செய்வதில் என்ன கடினம். நிம்மதியான வாழ்க்கை தானே. எல்லோரும் இது போலத் தானே வாழ்கிறார்கள் என்று கேட்கலாம். ஆனால் என்னால் அவ்வாறு கடந்து போக முடியவில்லையே. ஒரு தவறை அறம் மீறலை பார்க்கும்போது கோபம் வருகிறதே.

பிறந்ததிலிருந்து பார்த்து வளர்ந்த ஊரின் நுழைவாயிலில் காலம் காலமாக இருந்த மரத்தை வளர்ச்சியின் காரணமாக வெட்டும்போதும், ஏன் நாம் நட்டு வைத்த மரத்தை வீட்டின்/கடையின் முன் மரம் ஆகாது என்று குழந்தையை போன்ற மரக்கன்றை இரவோடு இரவாக பிடுங்கி எரிந்து மண் போட்டு மூடிவிடும் மூடத்தனத்தைப் பார்த்தால் கோபம் வருகிறதே.

பேருந்தில் இருக்கை இருந்தாலும் அமராமல் நின்ற பாட்டியிடம் உட்கார சொன்னால், அவர்கள் பக்கத்தில் நாங்கள் உட்காரக்கூடாது என்று சொல்லும் பாட்டியை முறைத்தபடியே இருக்கையில் அமர்ந்திருக்கும் அந்த நடுத்தர வயது  பெண்மணி, அந்த பாட்டி உட்கார்ந்துவிட கூடாது என்று முறைப்பதை பார்த்தால் கோபம் வருகிறதே.

இன்றும் திருமண சடங்கில் தனது பேரப்பிள்ளைகளின் வயதுமிக்க மணமக்களின் காலில் செருப்பு மாட்டி அவர்களின் காலில் விழுந்து வணங்கும் 60, 70 வயதுமிக்க தாத்தாவையும், அவரின் மனைவியையும் பெருமையுடன் பார்க்கும் படித்த மணமக்களும், சுற்றியிருக்கும் உறவினர்களும் சம்பிரதாயம் என்று சொல்லி மார் தட்டும்போது கோபம் வருகிறதே.

படித்த நல்ல அறிவு கொண்ட, வளர்ந்த சமூகத்தில் வளர்ந்து இருக்கும் இளைஞர்கள் கூட தன் சொந்த சாதியில் உள்ள அறமற்ற செயல்களை கூறினால் ஏற்க முடியாமல், சாதி ஆதரவு செய்து சண்டை போடுவதை பார்க்க அருவருப்பாகவும் கோபமும் வருகிறதே.

ஆற்றில் வெள்ளம் வருவதை பயன்படுத்தி வெள்ளத்தில் மாநகரத்தின் மொத்த கழிவுகளையும் கொட்டும்
ஒரு மாநகராட்சியின்  நடத்தையும், அதே போன்று தன் தொழிற்சாலை கழிவுகளை ஆற்றில் திறந்துவிடும் நாட்டின் தூணாய் இருக்கும் தொழிலதிபர்களையும், சொல்லப்போனால் இன்று நாடே அவர்கள் கையில் இருப்பதை பார்க்கும்போது கோபம் வருகிறதே.

சிறிய அளவிலிருந்து வெளியே வந்து பெரிய அளவில் என்ன நடக்கிறது என்று பார்த்தால் குடியுரிமை கேட்டு சிறிதும் மனிதம் இன்றி மக்களை துரத்துவதை பார்ப்பதற்கும், அப்படி துரத்துவதை சரியென்றும், "அவர்கள் 200 ஆண்டுகளுக்கு முன் நமக்கு என்ன செய்திருக்கிறார்கள் என்று தெரியுமா" என்று வன்மத்தை மனதில் கொண்டு வாதிடும் தெரிந்த முகங்களை பார்க்கையில் கோபம் வருகிறதே.

கல்லூரியில் புகுந்து மாணவர்களை, பெண்கள் என்றுகூட பார்க்காமல் அடித்து வன்முறை செய்தவர்களை  எதுவும் செய்யாமல் கடக்கும் அரசும்,  அதைப் பற்றி சிறிதும் கவலை கொள்ளாமல் கடக்கும் நாமும், நாளைக்கு இது தான் நமக்கும் நடக்கும் என்பது தெரியாமல் இருப்பவர்களையும், மதம், இனம், மொழி, சாதி, உயர்வு, தாழ்வு என்று மக்களை சாக்கடையில் தள்ளி பிரித்தாளும் சூழ்ச்சி செய்பவர்களையும், அது புரியாமல் சிறு பொது அறிவில்லாமல் உரையாடும் மக்களை பார்க்க கோபம் வருகிறதே. இன்னும் ஆயிரமாயிரம் கோபங்கள்.


இப்படி வெறும் கோபம் மட்டும் படாமல் அதற்கான தீர்வை நோக்கி அடியெடுத்து வைப்பதே வருங்காலத்தில் இன்னொரு பெண் என்னை போன்று கோபப்படாமல் இருப்பதற்கு தீர்வு. இது போன்ற அனைத்திற்குமான தீர்வாய் ஒன்று வேண்டும். அதற்கான செயலை புரிதலுடன் தொடங்க வேண்டும். அந்த தீர்வை மேற்கொண்டு வெற்றியடைந்த ஒருவரின் வழிகாட்டுதலை கரம்பற்றிக் கொள்ள வேண்டும்.

அந்த புரிதலுக்கான தொடக்கத்துடன் அடுத்த பதிவில்.

Tuesday, January 7, 2020

எங்கள் கட்டுப்பாடு எங்களிடம் இல்லை

கடந்த 2, 3 நாட்களாக ஏனோ ஒரு மாதிரியான மனநிலை. உற்சாகமிழந்து, மிகவும் வெறுப்பாக  இருந்தது. இந்த மனநிலை அடிக்கடி வரக்கூடியது தான். மாதம் ஒரு முறை நான்கு ஐந்து நாட்கள் அல்லது ஒரு வாரம் கூட இந்த மனநிலை இருக்கும்.

சில நேரங்களில் காரணமில்லாமல் அழுகையாய் வந்தது. கண்மூடித்தனமான கோபம். எல்லோர் மீதும் எரிச்சல், வெறுப்பு, ஏமாற்றம்  என்று காரணமில்லாமல் நம்மிடம் நெருக்கமாய் இருப்பவர்கள் மீது கூட திட்டி தீர்க்க தோன்றுகிறது. வாழ்வே முடிந்து போய்விட்டதாய் தோன்றுகிற மனநிலை.

உணர முடியாத பதட்டம், தேவையில்லாத பயம், எண்ணக்குலைவு என்று என்னை ஆட்டிப் படைக்கிறது. எதிலும் நாட்டமில்லை. பிடித்த புத்தகங்களைக் கூட தொட முடியவில்லை. பிடித்த படங்களை இரண்டு நிமிடம் கூட பார்க்கத் முடியவில்லை.  இதை யாரிடம் என்னவென்று சொல்லி புரிய வைப்பது அல்லது ஒரு தீர்வு கேட்பது என்று தேடிக்கொண்டிருந்தேன்.

எதிர்மறை எண்ணங்கள் அதிகமாக ஓடிக்கொண்டே இருந்தது. இது எதனால் என்பது புரியும். ஆனால் ஏன் என்று தான் புரியவில்லை. ஆம் இது மாதவிடாயினால் தான். ஒரு வாரம் முன்பே இந்த மனநிலை வந்து விடுகிறது. இதை வெகு சிலரே புரிந்துகொள்கிறார்கள். பெண்கள் என்றும் ஒரு மனநிலையில் இருப்பதில்லை என்பது இதனால் தான்.

நேற்று நான் ஒரு விடயத்தை சரி என்று பேசியிருப்பேன். அதையே இன்று தவறு என்று பேசும் அளவிற்கு என் மனநிலை மாறியிருக்கும். அவ்வளவு மோசமான மனநிலையில் இருக்கும் நேரம் இது. இதை பற்றி முத்துவிடம் தான் பேசிக் கொண்டிருந்தேன். அவர் எனக்கு ஒரு விளக்கப்படம் அனுப்பி வைத்தார்.

அதை இங்கே பதிவிடுகிறேன். பொதுவாக ஆண்களின் மனநிலை என்றும் ஒரே அளவில் இருக்கும். அதாவது 100 ல் இருக்கும். எல்லா நாட்களிலும் அவர்களால் ஒரே மனநிலையில் இருக்க முடியும். குழப்பங்கள் இல்லாமல் தெளிவாக யோசிக்க முடியும். பயம், எரிச்சல், கோவம், வெறுப்பு என்று எதுவும் காரணமில்லாமல் வராது. அதனால் அவர்களால் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்க முடியும்.


ஆனால் இந்த படத்தில் இருப்பது பெண்களின் மனநிலைக்கான விளக்கப் படம். கீழே இருக்கும் ஒன்று என்பது மாதவிடாயின் முதல் நாள். முதல் நாளிலிருந்து 14 நாட்கள் வரை ஆற்றல் ஏறுமுகமாக இருக்கும். அதாவது நேர்மறை எண்ணங்களால் சூழ்ந்திருப்போம். சொல்ல போனால் ஆண்களை விட அதிக ஆற்றல் 10 ஆம் நாளிலிருந்து 18 ஆம் நாள் வரை இருக்கும். 300 வரை இருக்கும். ஆண்களை விட இரண்டு மடங்கு அதிகம்.

அதன் பிறகு அது குறைந்து 22 ஆம் நாள் எதிர்மறை மனநிலைக்கு தள்ளப்படுவோம். -100 அதாவது ஆண்களை விட 2 மடங்கு கீழே சென்றிருப்போம். இந்த நாட்களில் தான் வாழ்க்கையின் வெறுப்பின் உச்சத்தில் இருப்போம். 3 லிருந்து 6 நாட்கள் வரை இந்த மனநிலை இருக்கும். அதன் பிறகு மீண்டும் ஒரு ஏற்றம் 150 வரை. பின் இறக்கம்.

இப்போது தெரிகிறதா உங்களால் ஏன் பெண்களை புரிந்துகொள்ள முடியவில்லை என்று. ஏன்னென்றால் எங்களிடமே எங்கள் கட்டுப்பாடு இல்லை. ஆண்கள் என்ன செய்வார்கள். இதற்கு தீர்வு இருக்கிறதா என்று தேட வேண்டும்.

இது அனைத்து பெண்களுக்கும் பொருந்தும். வீட்டில் உள்ளவர்கள், நண்பர்கள் புரிந்து நடந்து கொண்டால் பல பிரச்சனைகளை தவிர்க்கலாம். இது பெண்களின் மாதவிடாய் காலம் மட்டும் அல்ல, ஆண்களுக்கும் தான்.

Sunday, January 5, 2020

பெண்கள் அரசியல்

கடந்த வாரம் வரை உள்ளாட்சி தேர்தல் நடந்து வந்த நிலையில் அதன் முடிவுகளை பார்த்துக் கொண்டிருந்தேன். வேட்பாளர்களின் பெயர்களில் பெரும்பாலும் பெண்கள் பெயரையே அதிகமாக கேள்விப்பட்டேன். சரி இந்த தேர்தலில் பெண்களின் இட ஒதுக்கீடு எவ்வளவு என்று தேடினால் 50 சதவீதம்.

2016 ஆம் ஆண்டு 33 சதவீதமாக இருந்த பெண்களுக்கான இட ஒதுக்கீடு 50 சதவீதமாக மாற்றப்பட்டுள்ளது. இதையே இப்பொழுதுதான் நான் தெரிந்து கொள்கிறேன். சரி நல்லது தானே பெண்களுக்கு அதிக இட ஒதுக்கீடு.

அட போங்கப்பா. என்ன தான் அதிக இடத்தை பெண்களுக்கு கொடுத்தாலும், அந்த பதவியில் இருந்து ஆள்பவர்கள் ஆண்கள் தான். 90 சதவீத பெண் வெற்றியாளர்களை வைத்து அங்கே ஆள்வது அந்த பெண்ணின் கணவனோ, தந்தையோ,  அண்ணன்/தம்பிகளோ வாகத் தான் இருப்பார்கள். இது தான் நிதர்சனம்.

இங்கே ஆண்களால் தான் எல்லா காரியங்களையும் செய்து முடிக்க முடியும் என்ற நம்பிக்கை வேரூன்றி கிடக்கிறது. அதனால் தான் எந்த பெண் வேட்பாளர்களின் பின்னால் வலுவான ஆண்கள் இருக்கிறார்களோ அவர்களுக்கு வெற்றி அதிகமாக இருக்கிறது. வலுவான ஆண்கள் பின்னணி இல்லாத பெண்கள் சுலபமாக தோற்கடிக்கப் படுகிறார்கள். வார்டு கவுன்சிலர் போட்டி வரை இது தான் நிலை.

முக நூலில் பார்க்கிறேன். ஒரு 21 வயது இளம் பெண் பஞ்சாயத்து தலைவர் போட்டியில் வென்று விட்டார் என்று அனைவரும் பெருமையாக பகிர்கிறார்கள். நன்றாக பார்த்தால், அந்த பெண்ணின் பின்னால் வலுவான அரசியல் அல்லது குடும்ப பின்னணி இருக்கும். அங்கே அவளின் பதவியில் ஆளப்போவது ஒரு ஆண் தான். இதில் பெருமை கொள்ள என்ன இருக்கிறது.

பெண் வேட்பாளர்களாக நிறுத்தப்படுவதே அவர்களின் கணவன் அல்லது தந்தை ஏற்கனவே அரசியலில் இருப்பவர்கள் அல்லது தேர்தலில் நின்றவர்களாகத் தான் இருப்பார்கள். பெண்கள் தொகுதியாக மாற்றப் பட்டால் உடனே தன் குடும்பத்தில் உள்ள பெண்களை நிற்க வைத்துவிடுவார்கள்.

அதையும் மீறி ஒரு பெண் தானாக முன்வந்து தேர்தலில் நின்றால், அவர்கள் சுலபமாக தோற்கடிக்கப்படுவார்கள். தன்னை ஆள பெண்களை அனுமதிக்கும் அகங்காரமற்ற ஆண்கள் மிக குறைவு தான். தன்னை போன்ற ஒரு பெண் தன்னை ஆள்வதை ஆதரிக்கும் பொறாமையற்ற பெண்களும் மிக மிகக் குறைவு தான். நம்மூரில் ஆண்களை எதிர்ப்பதற்கு மட்டும் தான் பெண்ணியம்.


ஆண்களுக்கு தாங்கள் சரி சமம் என்று சண்டை போட்டு தன் சக்தியை வீணடிக்காமல்,  ஆக்கும் திறன் கொண்ட தன்னால் அனைத்தும் சாத்தியம் என்று பெண்கள் உணர்வதே மிகப்பெரிய ஆக்கம்.

Thursday, January 2, 2020

புத்தாண்டு வந்தாச்சு

நேற்று புத்தாண்டு தொடங்கியாயிற்று. இந்த வருடம் புத்தாண்டு தொடங்கும்போது பயணத்தில் இருந்தேன். எல்லா ஆர்ப்பாட்டங்களையும், கொண்டாட்டங்களையும் பார்த்து  சலித்துப் போயிருக்கிறேன். ஆனால் மற்றவர்களை உற்ச்சாகமாக பார்க்க நன்றாக இருந்தது.

எல்லா நாட்களை போல் இதுவும் ஒரு சாதாரண நாள் தான். எனக்கு வழக்கம் போல் அலுவலகம், வேலை, வாசிப்பு என்று சென்றது.

ஆனால் இந்த வருடம் மிக அற்புதமாய் இருக்கும் என்று உறுதியாக சொல்ல முடியும். ஏனென்றால் வாழ்வின் அர்த்தத்தை உணர்ந்து வந்துகொண்டு இருக்கிறேன். வாழ்தல் இனிது என்றும் அது எதில் உள்ளது என்று அர்த்தம் கொள்ளப் பெறுகிறேன்.

ஆம், இதுவரை ஒரு இலக்கை அடைவது, கனவை அடைவதுதான் மகிழ்ச்சி என்று புரிந்திருந்தேன். அது போலவே தான் ஓடி ஓடி ஒரு கனவை அடைவதும், குறிக்கோளை முன் வைத்து ஓடுவதும்  என்று வாழ்வின் மகிழ்ச்சிக்காக அலைந்து கொண்டிருந்தேன். வாழ்க்கைக்கான தேடல் மட்டும் இருந்து கொண்டே இருந்தது. ஆனால் வாழ்வு அதல்ல, மகிழ்ச்சி அதல்ல என்று இப்பொழுது என் தேடலுக்கான விடை கிடக்கிறது.

வாழ்வு வாழ்தலில் இருக்கிறது. ஒரு குறிக்கோளை அடைவது வாழ்தல் அல்ல. ஒரு குறிக்கோளை நோக்கி செல்லும் பயணம் தான் வாழ்தல். அந்த பயணத்தை ஒவ்வொரு நொடியும் மகிழ்வுடனும், அன்புடனும், அர்ப்பணிப்புடனும் கடக்க வேண்டும். ஒவ்வொரு கணத்தையும் வாழ வேண்டும்.


நம் குறிக்கோள் அடுத்தவர்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்துவதாய் இருந்தால் அதன் பயணம் இன்னும் அற்புதமாய் இருக்கும்.

இரவு 12.30 மணிக்கு பேருந்து ஒரு தேநீர் கடையில் நின்றது. அங்கே அந்த நேரத்தில் வேலை செய்யும் இரு சிறுவர்கள் புத்தாண்டு வாழ்த்தை புன்னைகையுடன் உற்ச்சாகமாக கூறினார்கள். அவர்களின் அந்த சிரிப்பும், சந்தோஷமும் தான் எனக்கான வாழ்த்தாக இருந்தது. 

இந்த வருடம் மிக அற்புதமாய் இருக்கும்.
எல்லாம் செயல் கூடும்!!