Saturday, April 20, 2019

குழந்தைகளும் தேர்தலும்

தேர்தலில் வாக்களிக்க ஒரு வாரம் முன்பே சொந்த ஊருக்கு வந்துவிட்டிருந்தேன். தேர்தலுக்கு முந்தைய நாள் பெங்களுருவில் இருந்து பயணம் செய்வது மிகக் கடினம். திருவிழா போல் பேருந்துகளில் கூட்டம் அலைமோதும் என்ற என் கணிப்பு மிகச் சரியாய் இருந்தது. இந்த அரசு உரிய ஏற்பாடு செய்திருக்கும் காலங்களிலேயே பேருந்து சிக்காமல் அல்லது நெரிசலில் அவதிபட வேண்டும்.

இம்முறை மிகவும் மோசம். பயணிகள் நெரிசல் தாங்காமல், பேருந்து கிடைக்காமல் பேருந்தின் கூரை மேல் பயணம் செய்திருப்பதை டிவியில் பார்த்து நொந்துகொண்டதை தவிர வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை. பவானியில் குடியேறியிருக்கிற வீட்டின் முதல் மாடியில் இரு பிள்ளைகளுடன் ஒரு குடும்பத்தார் வசிக்கிறார்கள். அதில் மூத்தவன் ஏழு வயது சிறுவன். இந்த நவீன கல்வி முறையில் சிக்கித்தவிக்கும் குழந்தை.

பள்ளிகள் முடிந்தாலும் பெற்றோர்களின் ஆர்வத்திற்காக அபாகஸ் பயிற்சி வகுப்பு, வரைதல் பயிற்சி வகுப்பு என அந்த குழந்தை ஓடிக் கொண்டிருக்கிறான். இரண்டு வாரங்களாக என்னால் அவனுடன் சிறிது நேரம் செலவிட முடிகிறது. அவனுக்கு அஞ்சாங்கல் (ஐந்து கல் விளையாட்டு), தாயக்கரம், பரமபதம் என்று நம் விளையாட்டுகளை சொல்லிக்கொடுத்தும் அவனுடன் விளையாடியும் வருகிறேன்.

அவன் அனைத்தையும் வெகு ஆர்வமாக கற்றுக்கொள்ள ஆரம்பித்தான். அவனுக்கு இந்த விளையாட்டுகள் மிகவும் பிடித்துப்போனது. ஆரம்பத்தில் அவனால் எந்த விளையாட்டிலும் தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தோற்றுவிட்டால் கோபம் கொண்டு கல்லைத்தூக்கி எறிவது, கீழே உருண்டு தரையை தட்டுவது என்று அவன் கோபத்தை காட்டினான். ஆனால் போகப் போக அவனுக்கு தோற்றாலும் அடுத்த முறை ஜெயிப்போம் என்ற என்ன வரத்தொடங்கியது. பரமபதத்தில் பாம்பு கடித்தால் என்ன, நான் ஏணி ஏறி சீக்கிரம் மேலே வந்துவிடுவேன் என்று சொல்கிற அளவுக்கு மாற்றம்.

எங்கள் குடியிருப்புக்கு வெளியே ஒரு வேம்பு வளரத் தொடங்கியிருக்கிறது. தினமும் அதற்கு தண்ணீர் விடுவதை பார்த்து விட்டு அவனும் தண்ணீர் விட ஆரம்பித்தான். சிறிது தள்ளியிருக்கும் ஓராண்டு வயதான மரத்திற்கு ஏன் தண்ணீர் விடுவதில்லை என்று கேட்டான். குழந்தைகள் நம்மை போன்று சுயநலவாதிகள் அல்ல என்பதை உரைக்கவைத்தான். அந்த மரம் நம் வீட்டிற்கு முன்னாடி இல்லை. பக்கத்து இடத்திற்கு அருகில் இருக்கிறது என்றேன். அவனோ "பரவால்ல அக்கா அது ரொம்ப தண்ணியில்லாம வாடியிருக்கு. அதுக்கும் ஊத்தலாமா?" என்றான்.

 


மகிழ்ந்து அதை சுத்தம் செய்ய வேண்டும், நாளை செய்யலாம் என்றேன். அடுத்தநாள் அவன் வகுப்புகளில் இருந்து வந்தவுடன் முதல் வேலையாக இருவரும் அதை சுத்தம் செய்து தண்ணீர் விட்டோம். இனி அதை அவன் கவனித்துக்கொள்வான். குழந்தைகள் வெகுவிரைவாக இயற்கையோடு ஒன்றிவிடுகிறார்கள். அதன் முக்கியத்துவத்தை நாம் தான் அவர்களுக்கு கூறவேண்டும். நாம் செய்வதை பார்த்தாலே போதும். அவர்கள் செய்துவிடுவார்கள்.

அவன் அம்மாயிக்கு மிகுந்த மகிழ்ச்சி. "நாலு செவுத்தைத் தாண்டி எங்கையும் போக மாட்டான். இப்போ வெளிய வந்து வெளையாடுறான்" என்றார்.

அடுத்த நாள் ஓட்டு போட சொந்த ஊரிற்கு சென்றிருந்தேன். வாக்குச்சாவடியில் ஏழு மணிக்கே பெரிய வரிசை. எங்கள் ஊர்த் திருவிழா போல அத்துனைபேரை பார்க்க முடிந்தது. வரிசையில் எனக்கு பின்னால் ஊரின் சொத்து பத்து நிறைய உள்ள ஒரு குடும்பத்தின் அம்மாவும் மகளும் வந்து நின்றார்கள். அந்த அம்மா வந்தவுடன் ஆண்கள் வரிசையில் நிர்ப்பவரில் ஒருவரை அழைத்து வெளியே காவலாளியுடன் நிற்கும் இளைஞர் யார் என்று அதிகாரத் தொனியில் கேட்டார்.

ஏதோ பெரிய பிரச்சனை மாதிரி பேச ஆரம்பித்தார். காவலாளி அவர்களின் வாகனத்தை தூரமாக நிறுத்த சொல்லிவிட்டாராம். காவலாளியை திட்டமுடியவில்லை. அதனால் அவர்கூட நின்றிருந்த எங்கள் ஊர் இளைஞரை மிரட்டுவதைபோல் திட்டிக்கொண்டிருந்தார். இதில் பெண்கள் உரிமை வரை பேசிக்கொண்டிருந்தார். சிறிய பிரச்சனை, இதை பிரச்சனை என்றுகூட கூற முடியாது. எவ்வளவு மன அழுத்தம். ஆண்ட, ஆள்கின்ற பரம்பரையல்லவா, சும்மா விட்டுவிட முடியுமா. பொரிந்துதள்ளிக் கொண்டிருந்தார். ஒருவழியாக ஓட்டு போட்டாகிவிட்டது.

ஐந்து மரக்கன்றுகளை எடுத்துக்கொண்டு சித்தி வீட்டிற்கு சென்றோம். நான் ரசித்து, ருசித்து வாழ்ந்த வீடு, தோட்டம், கரடு என எனக்கு மிகவும் பிடத்த இடம் என் சித்தி வீடு. இப்பொழுது பார்த்தால் காய்ந்து நீரில்லாமல், விவசாயம் செய்யாமல் எல்லாமும் கருகி நின்றது. பாறை அருகில் ஒரு பாழி(பாறைகளுக்கிடையில் நீர் ஊரும் குளம்) இருக்கும். என்றும் வற்றாத அதுவும் காய்ந்து கிடந்தது.

சித்திரை காற்று வீசத்தொடங்கியதும் வானம் கருக்கிக்கொண்டு வந்தது. ஆனால் மழை வராமல் புழுதிக்காற்று வீசியது. எங்கே மழை வராமல் போய்விடுமோ என்று வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். இன்றும் மனதில் குழந்தையாகவே இருக்கும் என் மாமன் மகள் என்னருகில் வந்து அக்கா மழை வந்தால் ஜாலியாக ஆடலாம்ல என்றாள். சரி கண்ணைமூடி வானத்துக்கிட்ட மழை வேணும்னு கேளு என்றேன்.

அவள் கைகூப்பி வானத்தைப்பார்த்து முதலில் கெஞ்சலாகவும் பிறகு கொஞ்சலாகவும் மழையை வேண்டினாள். "ப்ளீஸ் மரங்க, நாய், மாடெல்லாம் பாவம். கொஞ்சம் மழையே வந்துட்டு போ. என் செல்லம்ல, தங்கம்ல. இங்க வந்துட்டு போவேன். வராம போகாத செல்லக்குட்டி" என்றாள். நான் சிரித்துவிட்டேன். அவளுக்காக அந்த மழை அங்கு வந்துவிட்டுப் போனது.

இந்த குழந்தைகளை போலவே இருந்துவிடலாம் என்றே தோன்றியது. எவ்வளவு மகிழ்ச்சியான உலகம் அவர்களுடையது. எந்த வன்மமும், பொறாமையும் இல்லாத உலகு.

 


மிக மகிழ்ச்சியாக ஐந்து மரக்கன்றுகளையும் நட்டுவிட்டு வீடு திரும்பினோம். ஒரு நாட்டு கொய்யா, மூன்று எழுமிச்சை மற்றும் ஒரு  விடாம்பழம் என தேர்தலன்றே நட்டாயிற்று. ஐந்து வருடங்களுக்கு பிறகு அடுத்த தேர்தலில் இரண்டின்(மரக்கன்றுகள், ஒட்டு பெற்ற வாக்காளர்) பங்களிப்பையும் பார்ப்போம்.

Saturday, April 13, 2019

கனவும் கல்விக் கடனும்

அரசு பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்புவரை படித்து முடித்து, என் வாழ்வை எப்படி தொடர்வது என்று குழம்பி இருந்த தருணம். பதினைந்து வருடங்களுக்கு முன்பெல்லாம் கல்லூரியில் படிப்பதென்பது பெரும் கனவாகவே இருந்தது. அதுவும் பெண்களுக்கு எட்டாக் கனி. கீழ் தட்டு குடும்பத்தில் பிறந்திருந்தால் இன்னும் மோசம். எங்கள் பகுதியில் பெரும் பணக்காரர்கள், நிறைய தோட்டம், சொத்து வைத்திருப்பவர்கள், அரசாங்க வேளையில் இருப்பவர்கள், நிலையான சம்பளம் வாங்குபவர்கள், தொழிலதிபர்கள் போன்றவர்களின் பிள்ளைகள் மட்டுமே பள்ளியைத் தாண்டி கல்லூரி படிப்பிற்கு செல்வார்கள்.

பெரிய பெரிய கனவுகல் இருந்தாலும் ஒரு முக்கிய தீர்மானத்தை எடுத்திருந்தேன். என்னவென்றால் எங்கள் ஊரில் எனக்கு முன்பு இருந்த அக்காங்களை போல் பள்ளிக்கு பிறகு திருமணம் செய்துகொண்டு கையில் ஒரு குழந்தையுடனும், இடுப்பில் ஒரு குழந்தையுடனும் என் ஊருக்கு வந்து போக கூடாது என்பது தான். என் சொந்த காலில் நிற்க வேண்டும். இங்கு உள்ள பெண்களுக்கு கனவு காண கற்றுக்கொடுக்க வேண்டும். அதற்காக நான் என் வாழ்வை மாற்றி அமைக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.

என் அப்பாவோ, பள்ளி படிப்பு முடிந்தது இனி இரண்டு வருடம் தையல் கற்றுக்கொண்டு வேலை செய். அப்புறம் திருமணம் செய்து வைக்கிறேன் என்று என்னிடம் பொறுமையாக பேசினார். அவர் என்ன செய்ய முடியும். இதுதான் ஆண்டாண்டு காலமாக வழக்கில் இருந்து வருகிறது. அதுவும் பொருளாதார பின்புலம் இல்லாதவர். வீட்டில் உணவுக்கு பிரச்சனையில்லை அனால் பெரிதாய் எதுவும் செலவு செய்ய முடியாத சூழல்.

அழுது புரண்டு, சாப்பிடாமல் இருந்து, உறவினர் அண்ணன்களையெல்லாம் உதவிக்கு அழைத்து அப்பாவை சம்மதிக்க வைத்து இளங்கலை கணிதத்தில் விவேகானந்தா மகளிர் கல்லூரியில் சேர்ந்தேன். 3 வருடத்திற்கு முப்பத்தி ஆறாயிரம் செலவு ஆனது. பெரும் தொகை தான். இதற்காக அப்பா வெளி மாநிலங்களுக்கு லாரி ஓட்டச் சென்றார். செலவு தாங்காமல் என் தங்கையும்  அரசு பள்ளியில் சேர்க்கப்பட்டாள்.

மூன்று வருடம் முடித்து முதுகலை கணிப்பொறியில் விண்ணப்பித்தேன். அப்பாவோ கணிதம் ஆசிரியர் பயிற்சிக்கு சேர்ந்துகொள், அது தான் பெண்களுக்கான வேலை என்றார். அதுவும் மூன்று வருடம் முதுகலை கணிப்பொறி பயில பணம் இல்லை என்றார். அண்ணா பழ்கலைக்கழகத்தின் கீழ் வரும் கல்லூரியில் படித்தால் பெரிய செலவு செய்ய வேண்டி வரும். கிட்டத்தட்ட பொறியியல் படிப்பிற்கு நிகராக லட்சங்களில் செலவு ஆகும். நுழைவுத் தேர்வில் தனியார் கல்லூரியே கிடைத்திருந்தது.

அப்பொழுதிருந்த காங்கிரஸ் அரசு கல்விக்கடன் திட்டத்தை அறிமுகம் செய்து கல்வி கடன் கொடுத்து வந்தது. தமிழ்நாட்டில் அது நல்ல முறையில் செயல்படுத்தப்பட்டிருந்தது.  கல்விக்கடனை எப்படியும் பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையில் துணிந்து கல்லூரியில் சேர்ந்தேன். அரசு வங்கிகள் கையை விரித்திருந்தாலும், தனியார் வங்கிகள் உதவின. வங்கி மேலாளர் எங்கள் வீட்டிற்கு வந்து எங்கள் குடிசை வீட்டையும், கால்நடைகளின் சாலையையும் பார்த்துவிட்டு என் தங்கையிடம் மதிப்பெண்னை  மட்டும் கேட்டுவிட்டு வேறெதுவும் கேட்காமல் கடனை வழங்கினார்.

என் வாழ்வில் முக்கியத் திருப்பம் இந்த கல்வி கடனாலேயே நிகழ்ந்தது. குடும்ப பின்னணியை பார்த்து அவர் எந்த கேள்வியும் கேட்காமல் கல்விக்கடன் கொடுத்தார். அவருக்கு நிச்சயம் தெரிந்திருக்கும், இந்த கல்விக்கடனால் ஒரு தலைமுறையின் வாழ்வே மாறும் என்று. நான் மட்டுமல்ல என் தங்கையும் கல்விக்கடன் மூலம் தான் பொறியியல் படித்து முடித்தாள். இருவரும் படித்து முடித்து மென்பொருள் நிறுவனத்தில் சேர்ந்து இன்று அந்த கல்விக்கடனையும் கட்டி முடித்தாயிற்று. என் தந்தைக்கும் பணி ஓய்வு கொடுத்தாயிற்று. கல்விக்கடன் இல்லையென்றால் எங்களின் நிலமை?

படித்து முடித்து 6 மாதங்களில் வேலை தேடி அலைந்திருக்கிறேன். வேலை கிடைக்கும் வரையோ அல்லது கிடைத்த பின்னோ கடனை கேட்டு வந்து யாரும் வாசலில் நிற்கவில்லை. இதுவே நான் வட்டிக்கு கடன் வாங்கியிருந்தாலும், அடகு வைக்க என்னென்ன கேட்டிருப்பார்கள். அடகு வைக்க எதுவும் இல்லை என்பதால் கடன் கிடைத்திருந்திருக்காது. அடகு இல்லாமல் கடன் கொடுத்திருந்தாலும், வேலைக்கு செல்வதற்குள் என்னென்ன பேச்சுக்கள், தொந்தரவுகள், வட்டியின் உச்சம் என்று எத்துனை அல்லல் பட்டிருக்க வேண்டும்.

நான் மட்டுமல்ல எல்லா கீழ்த்தட்டு மக்களின் குடும்பங்களின் ஒரு தலைமுறை வாழ்வை மாற்றியதே இந்த திட்டம் தான். என் வகுப்பில் படித்தவர்களில் முதல் தலைமுறை பட்டதாரியான 70 சதவீதம் பேர் கல்விக்கடன் மூலம் வந்தவர்களே. கூலித் தொழிலாளர்களின் பிள்ளைகள் முதல் வருமானம் இல்லாதவர்களின் பிள்ளைகள் வரை இன்று பயன்பெற்றிருப்பதை நான் நேரடியாக பார்த்திருக்கிறேன்.

உறவினர்களில் எத்துனை பேர் எங்களை ஏளனமாகவும் இலக்காரமாகவும் பார்த்தார்கள் பேசினார்கள் என்று எனக்குத் தெரியும். பணத்தை வைத்தே உறவுகளின் முக்கியத்துவம் பார்க்கப்பட்டது. இதையும் தாண்டி யாரும் உதவி செய்யவில்லை, செய்யவும் மாட்டார்கள். இன்று நிலைமை வேறு. மொத்தமாக ஒரு தலைமுறையின் வாழ்வே மாறிப்போயிருக்கிறது.

நல்ல வேலை அப்பொழுது மட்டும் மத்திய அரசாங்கம் இந்த திட்டத்திற்கு பதிலாக ஒரு சிலையை கட்டியிருந்திருந்தால் அந்த சுற்றுலா தளத்தில் என் பிள்ளைகள் டீ,  வடை விற்று பிழைத்துக் கொண்டிருந்திருப்பார்களோ என்னவோ.

ஒரு அரசோ/கட்சியோ இது போன்ற அடித்தட்டு மக்களின் வாழ்வை முன்னேற்றும் திட்டத்தை வகுத்து அதை சரியான முறையில் செயல்படுத்துவார்களேயானால் அவர்களுக்கு துணிந்து வாக்களிக்கலாம்.

Wednesday, April 10, 2019

முதல் மழை

கடந்த சில மாதங்களாக உடல் நிலை சரியில்லாத காரணத்தால் சொந்த ஊரிற்கு சென்றிருந்தேன். உடல் நலமின்றி போவதற்கு முக்கிய காரணம் ஓய்வு இல்லாமல் இருப்பதே. கூடவே இந்த வெய்யில் வேறு. சிறிது ஓய்வும் வீட்டு சாப்பாடும் தேவைப்பட்டது.வீட்டிலிருந்தபடியே அலுவலக வேலையை செய்தேன். வீட்டில் நல்ல ஓய்வு. ஆனால் வெய்யில் கொழுத்தியெடுத்தது. பெங்களூருவில் இருந்ததை விட குறைவுதான் என்று தோன்றியது.

10 நாட்கள் வீட்டிலிருந்து சுகபோக வாழ்க்கை வாழ்ந்துவிட்டு கடந்த ஞாயிறு அன்று சுமார் 3 மணி வாக்கில் பெங்களூரு கிளம்பினேன். வீட்டில் இருந்தவரை வெய்யிலின் தாக்கம் தெரியவில்லை. பவானியில் பேருந்து ஏறி சேலம் டிக்கெட் வாங்கி இருக்கையில் அமர்ந்தேன். ஜன்னலிருந்து வந்த காற்று அனல் அடித்தது. அந்த அனலின் வெப்பத்தைத் தாங்க முடியாமல் உடல் எரியத் தொடங்கியது. ஜன்னலை மூடினால் வேர்த்துக் கொட்டுகிறது.

நான் கல்லூரியில் படிக்கும் காலத்தில் இதே சாலையில் தான் கல்லூரி பேருந்தில் தினமும் சுமார் 3 மணி நேரம் பயணம் செய்திருக்கிறேன். அப்பொழுதெல்லாம் இப்படி எரிந்ததில்லை. சாலையின் இரு பக்கங்களும் புளிய மரங்களால் நிரம்பி இருக்கும். உச்சி வெய்யிலில் பயணித்தால் கூட குளிர்ந்த காற்றே வீசும். உடலுக்கும் மனதுக்கும் கண்களுக்கும் இதமாக இருக்கும்.

ஆனால் இன்று மரங்களை கண்ணில் பார்க்கவே முடியவில்லை. சாலை விரிவாக்கத்தில் அத்துனை மரங்களையும் வெட்டி வீழ்த்தியாகிற்று. நெடுஞ்சாலை அமைத்து கட்டணம் எல்லாம் வசூலிக்கிறார்கள். ஆனால் வெட்டப்பட்ட மரங்களுக்கு பதிலாக மரக்கன்றுகளை நடவேயில்லை. ஐந்தாறு கிலோமீட்டர்க்கு ஒரு முறை சில மரங்களை கண்ணில் பார்க்க முடிகிறது(அதுவும் சேலம் பெங்களூரு சாலையில் தான்). பவானி சேலம் சாலையில் இன்னும் மோசம்.

நட்டு வைத்திருக்கும் சில மரங்களும் நம் நாட்டு வகை மரங்கள் அல்லாமல் இருப்பதால் இந்த வெய்யில் தாங்க முடியாமல் கருகுகிறது. ஐந்து ஆறடி வளர்ந்த மரங்கள் கூட கருகியிருப்பதை பார்க்கும்பொழுது கண்ணில் ரத்தம் வருகிறது.

இதையெல்லாம் தாண்டி சேலம் தர்மபுரி நெடுஞ்சாலையில் தொப்பூர் வனப்பகுதியை கடந்து சென்றது பேருந்து. என்னால் வெப்பத்தின் தாக்குதலை எதிர்கொள்ள முடியவில்லை. அப்பொழுதுஅந்த வனப்பகுதியை பார்த்துக் கொண்டே சென்றேன். பச்சை என்பது துளிகூட கண்ணில் படவில்லை. காய்ந்து கருகி வெந்து கொண்டிருந்தது.

அந்த வனத்தில் வாழும் உயிரினங்களின் நிலைமையை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. ஒவ்வொன்றும் தண்ணீருக்கும், உணவுக்கும் என்ன பாடுபடுகிறதோ அந்த கருகுகிற காட்டில். இது போன்று எல்லா காடுகளிலும் எந்த பழங்களும் கிடைக்காமல் அலையும் பறவைகளும், எந்த பச்சை மரமும் உண்ண கிடைக்காமல் திரியும் யானைகளும், மேய புல் கிடைக்காமல் கதறும் மான்களும் மற்ற எல்லா உயிர்களும் என்ன பாவம் செய்தன.

 

நினைத்து பார்க்க முடியாமல் கண்ணில் கண்ணீர் கொட்டியது. அந்த நேரத்தில் என்னால் கொடுக்க முடிந்தது அதுவே. சிறிது நேரம் அசைவற்று உட்கார்ந்திருந்தேன். பின் அந்த கண்ணீருடனே ஒரு பிரார்த்தனையை வைத்தேன். சிவா அண்ணாவும் முத்துவும் எப்பொழுதுமே கூறுவார்கள் மனதார பிரார்த்தனையை வைத்துவிட்டு நம் அடுத்த வேலையை பார்க்க  வேண்டும் என்றும், அது கட்டாயம் நிறைவேறும் என்றும் அதை இந்த இயற்கை நிறைவேற்றும் என்றும்.

ஆம் என் பிரார்த்தனையை இந்த இயற்கை ஏற்றுக்கொண்டது. திங்கள் மாலை ஒரு உழவு மழை பெய்தது. என்னால் நம்பவே முடியவில்லை. வருடத்தின் முதல் மழை. ஆனந்தத்துடனும், நன்றியுடனும் என் கண்கள் மீண்டும் நனைந்தன. செவ்வாய் மாலையிலும் சிறிது மழை பெய்தது. பிரார்த்தனையினால் தானா என்று தெரியாது. ஆனால் மழைபெய்தது. ஒருத்தியின் கண்ணீருக்கே செவி சாய்க்கும் இயற்கையிடம் அனைவரும் மழை வேண்டி பிரார்த்தனை செய்வோம். காடுகளின் அனலை தணிக்க வேண்டுவோம்.

நாம் செய்த தவற்றிற்கு நாம் தான் பிராயச்சித்தம் தேட வேண்டும். காடுகளை அழித்து, மரங்களை வெட்டி, மலைகளை குடைந்து நமக்கான அழிவை மட்டுமல்லாமல் அனைத்து உயிரினங்களுக்கும் கொடூரமான அழிவை கொடுக்கிறோம். முடிந்தவரை ஒரு மரமாவது நடுங்கள். அதில் பழுக்கும் பழத்தை ஒரு பறவை சாப்பிட்டால்கூட நீங்கள் இயற்கையிடம் மன்னிப்பு பெற்றவர்களாவீர்கள்.

இயற்கை தான் கடவுள்.