Saturday, April 20, 2019

குழந்தைகளும் தேர்தலும்

தேர்தலில் வாக்களிக்க ஒரு வாரம் முன்பே சொந்த ஊருக்கு வந்துவிட்டிருந்தேன். தேர்தலுக்கு முந்தைய நாள் பெங்களுருவில் இருந்து பயணம் செய்வது மிகக் கடினம். திருவிழா போல் பேருந்துகளில் கூட்டம் அலைமோதும் என்ற என் கணிப்பு மிகச் சரியாய் இருந்தது. இந்த அரசு உரிய ஏற்பாடு செய்திருக்கும் காலங்களிலேயே பேருந்து சிக்காமல் அல்லது நெரிசலில் அவதிபட வேண்டும்.

இம்முறை மிகவும் மோசம். பயணிகள் நெரிசல் தாங்காமல், பேருந்து கிடைக்காமல் பேருந்தின் கூரை மேல் பயணம் செய்திருப்பதை டிவியில் பார்த்து நொந்துகொண்டதை தவிர வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை. பவானியில் குடியேறியிருக்கிற வீட்டின் முதல் மாடியில் இரு பிள்ளைகளுடன் ஒரு குடும்பத்தார் வசிக்கிறார்கள். அதில் மூத்தவன் ஏழு வயது சிறுவன். இந்த நவீன கல்வி முறையில் சிக்கித்தவிக்கும் குழந்தை.

பள்ளிகள் முடிந்தாலும் பெற்றோர்களின் ஆர்வத்திற்காக அபாகஸ் பயிற்சி வகுப்பு, வரைதல் பயிற்சி வகுப்பு என அந்த குழந்தை ஓடிக் கொண்டிருக்கிறான். இரண்டு வாரங்களாக என்னால் அவனுடன் சிறிது நேரம் செலவிட முடிகிறது. அவனுக்கு அஞ்சாங்கல் (ஐந்து கல் விளையாட்டு), தாயக்கரம், பரமபதம் என்று நம் விளையாட்டுகளை சொல்லிக்கொடுத்தும் அவனுடன் விளையாடியும் வருகிறேன்.

அவன் அனைத்தையும் வெகு ஆர்வமாக கற்றுக்கொள்ள ஆரம்பித்தான். அவனுக்கு இந்த விளையாட்டுகள் மிகவும் பிடித்துப்போனது. ஆரம்பத்தில் அவனால் எந்த விளையாட்டிலும் தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தோற்றுவிட்டால் கோபம் கொண்டு கல்லைத்தூக்கி எறிவது, கீழே உருண்டு தரையை தட்டுவது என்று அவன் கோபத்தை காட்டினான். ஆனால் போகப் போக அவனுக்கு தோற்றாலும் அடுத்த முறை ஜெயிப்போம் என்ற என்ன வரத்தொடங்கியது. பரமபதத்தில் பாம்பு கடித்தால் என்ன, நான் ஏணி ஏறி சீக்கிரம் மேலே வந்துவிடுவேன் என்று சொல்கிற அளவுக்கு மாற்றம்.

எங்கள் குடியிருப்புக்கு வெளியே ஒரு வேம்பு வளரத் தொடங்கியிருக்கிறது. தினமும் அதற்கு தண்ணீர் விடுவதை பார்த்து விட்டு அவனும் தண்ணீர் விட ஆரம்பித்தான். சிறிது தள்ளியிருக்கும் ஓராண்டு வயதான மரத்திற்கு ஏன் தண்ணீர் விடுவதில்லை என்று கேட்டான். குழந்தைகள் நம்மை போன்று சுயநலவாதிகள் அல்ல என்பதை உரைக்கவைத்தான். அந்த மரம் நம் வீட்டிற்கு முன்னாடி இல்லை. பக்கத்து இடத்திற்கு அருகில் இருக்கிறது என்றேன். அவனோ "பரவால்ல அக்கா அது ரொம்ப தண்ணியில்லாம வாடியிருக்கு. அதுக்கும் ஊத்தலாமா?" என்றான்.

 


மகிழ்ந்து அதை சுத்தம் செய்ய வேண்டும், நாளை செய்யலாம் என்றேன். அடுத்தநாள் அவன் வகுப்புகளில் இருந்து வந்தவுடன் முதல் வேலையாக இருவரும் அதை சுத்தம் செய்து தண்ணீர் விட்டோம். இனி அதை அவன் கவனித்துக்கொள்வான். குழந்தைகள் வெகுவிரைவாக இயற்கையோடு ஒன்றிவிடுகிறார்கள். அதன் முக்கியத்துவத்தை நாம் தான் அவர்களுக்கு கூறவேண்டும். நாம் செய்வதை பார்த்தாலே போதும். அவர்கள் செய்துவிடுவார்கள்.

அவன் அம்மாயிக்கு மிகுந்த மகிழ்ச்சி. "நாலு செவுத்தைத் தாண்டி எங்கையும் போக மாட்டான். இப்போ வெளிய வந்து வெளையாடுறான்" என்றார்.

அடுத்த நாள் ஓட்டு போட சொந்த ஊரிற்கு சென்றிருந்தேன். வாக்குச்சாவடியில் ஏழு மணிக்கே பெரிய வரிசை. எங்கள் ஊர்த் திருவிழா போல அத்துனைபேரை பார்க்க முடிந்தது. வரிசையில் எனக்கு பின்னால் ஊரின் சொத்து பத்து நிறைய உள்ள ஒரு குடும்பத்தின் அம்மாவும் மகளும் வந்து நின்றார்கள். அந்த அம்மா வந்தவுடன் ஆண்கள் வரிசையில் நிர்ப்பவரில் ஒருவரை அழைத்து வெளியே காவலாளியுடன் நிற்கும் இளைஞர் யார் என்று அதிகாரத் தொனியில் கேட்டார்.

ஏதோ பெரிய பிரச்சனை மாதிரி பேச ஆரம்பித்தார். காவலாளி அவர்களின் வாகனத்தை தூரமாக நிறுத்த சொல்லிவிட்டாராம். காவலாளியை திட்டமுடியவில்லை. அதனால் அவர்கூட நின்றிருந்த எங்கள் ஊர் இளைஞரை மிரட்டுவதைபோல் திட்டிக்கொண்டிருந்தார். இதில் பெண்கள் உரிமை வரை பேசிக்கொண்டிருந்தார். சிறிய பிரச்சனை, இதை பிரச்சனை என்றுகூட கூற முடியாது. எவ்வளவு மன அழுத்தம். ஆண்ட, ஆள்கின்ற பரம்பரையல்லவா, சும்மா விட்டுவிட முடியுமா. பொரிந்துதள்ளிக் கொண்டிருந்தார். ஒருவழியாக ஓட்டு போட்டாகிவிட்டது.

ஐந்து மரக்கன்றுகளை எடுத்துக்கொண்டு சித்தி வீட்டிற்கு சென்றோம். நான் ரசித்து, ருசித்து வாழ்ந்த வீடு, தோட்டம், கரடு என எனக்கு மிகவும் பிடத்த இடம் என் சித்தி வீடு. இப்பொழுது பார்த்தால் காய்ந்து நீரில்லாமல், விவசாயம் செய்யாமல் எல்லாமும் கருகி நின்றது. பாறை அருகில் ஒரு பாழி(பாறைகளுக்கிடையில் நீர் ஊரும் குளம்) இருக்கும். என்றும் வற்றாத அதுவும் காய்ந்து கிடந்தது.

சித்திரை காற்று வீசத்தொடங்கியதும் வானம் கருக்கிக்கொண்டு வந்தது. ஆனால் மழை வராமல் புழுதிக்காற்று வீசியது. எங்கே மழை வராமல் போய்விடுமோ என்று வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். இன்றும் மனதில் குழந்தையாகவே இருக்கும் என் மாமன் மகள் என்னருகில் வந்து அக்கா மழை வந்தால் ஜாலியாக ஆடலாம்ல என்றாள். சரி கண்ணைமூடி வானத்துக்கிட்ட மழை வேணும்னு கேளு என்றேன்.

அவள் கைகூப்பி வானத்தைப்பார்த்து முதலில் கெஞ்சலாகவும் பிறகு கொஞ்சலாகவும் மழையை வேண்டினாள். "ப்ளீஸ் மரங்க, நாய், மாடெல்லாம் பாவம். கொஞ்சம் மழையே வந்துட்டு போ. என் செல்லம்ல, தங்கம்ல. இங்க வந்துட்டு போவேன். வராம போகாத செல்லக்குட்டி" என்றாள். நான் சிரித்துவிட்டேன். அவளுக்காக அந்த மழை அங்கு வந்துவிட்டுப் போனது.

இந்த குழந்தைகளை போலவே இருந்துவிடலாம் என்றே தோன்றியது. எவ்வளவு மகிழ்ச்சியான உலகம் அவர்களுடையது. எந்த வன்மமும், பொறாமையும் இல்லாத உலகு.

 


மிக மகிழ்ச்சியாக ஐந்து மரக்கன்றுகளையும் நட்டுவிட்டு வீடு திரும்பினோம். ஒரு நாட்டு கொய்யா, மூன்று எழுமிச்சை மற்றும் ஒரு  விடாம்பழம் என தேர்தலன்றே நட்டாயிற்று. ஐந்து வருடங்களுக்கு பிறகு அடுத்த தேர்தலில் இரண்டின்(மரக்கன்றுகள், ஒட்டு பெற்ற வாக்காளர்) பங்களிப்பையும் பார்ப்போம்.

No comments:

Post a Comment