Saturday, June 15, 2019

சு. ரா. ஜெயமோகன் ஆசானுடனான நாட்கள்

ஒரு வாரமாக என் நாட்கள் சு ரா வுடனும் ஜெயமோகன் ஆசானுடனும் மெதுவாக மென்மையாக அமைதியாக நகர்கிறது. ஆம் சு ரா பற்றிய நினைவுகளை ஜெயமோகன் ஆசான் பகிர்ந்த "சுந்தர ராமசாமி நினைவின் நதியில்" என்ற புத்தகத்தின் வாயிலாக இருவருடனும் பயணிக்கிறேன். எழுதும்போது கூட ஜெயமோகன் என்ற பெயரை மட்டும் குறிப்பிடுவது அவரை மரியாதையின்றி சொல்வதாவே எனக்கு படுகிறது.அதனால் அவரை இங்கே ஆசான் என்றே குறிப்பிட போகிறேன். ஆசான் என்று குறிப்பிடுவதையே மிக நெருக்கமாக உணர்கிறேன்.

சு. ரா அய்யாவை பற்றி நான் பெரிதும் அறிந்ததில்லை. அவரின் ஜே ஜே சில குறிப்புகளை என் அண்ணன் கல்லூரி காலத்திலேயே பரிசாக கொடுத்து அறிமுகம் செய்துவைத்தார். ஆனால் என்னால் அவரின் எழுத்துக்களை உள்வாங்க முடியவில்லை. கடந்த வருடம் தான் "ஒரு புளியமரத்தின் கதை" மூலமாக அவரின் எழுத்தை தொட முயற்சித்து தொடர்கிறேன்.



சு ரா வை அறிமுகம் செய்து வைத்த அதே அண்ணன் தான் ஆசானையும் அறிமுகம் செய்து வைத்தார். "அறம்" புத்தகத்தை பரிசாக கொடுத்து என்னை வேறு எழுத்து உலகத்திற்கு செல்ல வழிகாட்டினார். ஆசானின் எழுத்துக்களை வெகு விரைவாக உள்வாங்கத் தொடங்கிய பின்னர் தான் ஹரூக்கி முரக்காமி, அயன் ரேண்ட், சிட்னி ஷெல்டன், அமிஷ் போன்றவர்களின் ஆங்கில எழுத்துக்களில் உலாத்திக்கொண்டிருந்த நான் தமிழ் புத்தகங்களுக்குத் திரும்பினேன்.

ஆசானின் எழுத்தில் கருத்தில் ஒவ்வொரு புத்தகத்திலும் விழுந்து எழ முடியாமல் அலுவலகத்தை சுற்றி சுற்றி நடந்திருக்கிறேன். வேலை செய்ய வேண்டும் என்ற நினைப்பே வராது. அறத்தில் ஒவ்வொரு கதையும் என்னை உருக்கியெடுத்தது. அறம் மிக உணர்ச்சிப்பூர்வமாக என்னை ஆட்டிப் படைத்தது. அவரின் எழுத்துக்கள் எளிதாகவும் இல்லை கடினமாகவும் இல்லை. அதில் சிக்கித் தவித்து வெளிவர முடியாமல் அவரின் வேறெந்த புத்தகத்தையும் சில நாட்கள் தொடவே இல்லை.

மிக வீரியமான ஒன்றை உடலில் செலுத்திவிட்டு அதன் விளைவுகளை எதிர்கொள்ள முடியாமல் மிக லேசான ஒன்றைத் தேடி உள்ளே செலுத்துவதை போல ஆசானின் எழுத்துக்களின் வீரியத்தைத் தாங்காமல் ஜெயகாந்தனையும், எஸ். ரா வையும் படித்து ஆசுவாசப்படுத்திக் கொண்டேன். அதன் பின் தான் கி.ரா வை கண்டடைந்தேன். இன்றும் ஆசானின் புத்தகத்திற்கு பிறகு வாசிக்க ஒரு கி.ரா புத்தகம் இருக்கும். இல்லையென்றால் அந்த எழுத்துக்களில் இருந்து மீள முடியாமல் தவிப்பேன்.

ஆசானின் காடு புத்தகம் தொடங்கி ஏனோ அதை எதிர்கொள்ளும் மனநிலை இல்லாமல் 40 பக்கங்களில் நிறுத்தி வைத்திருக்கிறேன். முகங்களின் தேசம் புத்தகத்தில் முதல் 6 பயணக் கட்டுரைகளை வாசித்துவிட்டு எங்கே நானும் ஊர் சுற்ற கிளம்பிவிடுவேனோ என்றே தோன்றியது. நான் நிறைய இடங்களை, மக்களை பார்க்க ஏற்கனவே நிறைய சுற்றியிருக்கிறேன். இந்த புத்தகம் அந்த தாகத்தை இன்னும் அதிகப்படுத்தியது.

புறப்பாடு பற்றித் தனியாக எழுத நிறைய இருக்கிறது. அதில் வரும் ஓவ்வொரு மனிதரையும் அவ்வளவு உள்வாங்கியிருக்கிறேன். ஆசான் மிக நெருக்கமானது புறப்பாடு புத்தகத்தில் தான். அவரின் ஒவ்வொரு புத்தகம் பற்றியும் தனித் தனியாக எழுத வேண்டும். யூடூபில் அவரின் பேச்சுக்கள் அனைத்தையும் கேட்டாகிவிட்டது. இப்பொழுது அதிகமாக அவரின் கட்டுரைகளுடன்.

கடந்த வருடம் அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது கோவை விஷ்ணுபுரம் விழாவில் தான். அவரை நேரில் பார்த்தபோது பேச்சும் வரவில்லை மூச்சும் வரவில்லை. இவ்வளவு நாட்கள் என் நினைவிலும் புத்தகங்களிலும் வாழ்ந்தவரை ரத்தமும் சதையுமாக கண்ணாடியுடன் நேரில் நிற்பதை பார்த்து சில கணங்கள் செயலிழந்து நின்றேன். ஸ்டாலின் அண்ணா ஆசானிடம் என்னை அறிமுகம் செய்யும்பொழுது கூட என்னால் பேச முடியவில்லை.



அந்த கண்கள் என்னை உற்று நோக்கியது. என் கண்ணை ஏன் அவ்வளவு அழுத்தமாக பார்த்தார் என்று தெரியவில்லை. இல்லை எனக்குத் தான் அப்படி தோன்றியதா என்றும் தெரியவில்லை. அந்த ஒரு நாள் முழுவதும் அவரை தூரத்திலிருந்து பார்த்துக்கொண்டு மட்டும் இருந்தேன். அவர் இருக்கும் இடம் தேடிச்சென்று சிறு தொலைவில் நின்று பார்த்துக்கொண்டே இருந்தேன். அந்த விழாவில் யார் பேசியதும் என் காதில் ஏறவில்லை.

வாழ்வில் எந்தவொரு மனிதரை சந்தித்ததற்காகவும் இவ்வளவு நெகிழ்ச்சியடைந்ததுமில்லை. இனி யாரும் என்னை இவ்வளவு பாதிப்பார்கள் என்றும் தோன்றவில்லை.

ஆசானின் கண்களின் வழியே சு. ரா வுடன் பயணிக்கிறேன். மெதுவாக கால்நடையாகத் தான் செல்கிறோம். அவர் ஆசானின் ஆசான். தன் ஆசானின் வீட்டிலிருந்து அவருடன் நடந்த உரையாடல்கள், நிகழ்வுகள், நேர்மறை விவாதங்கள், என நானும் அவர்களுடன் அந்த வீட்டில் ஒரு ஓரத்தில் யாரும் அறியாமல் அமர்ந்து அனைத்தையும் கேட்டுக்கொண்டும் பார்த்துக்கொண்டும் அப்படியே என் அலுவலகத்தில் ஜாவாவில் குறியீடுகளை எழுதிக்கொண்டும் பயணிக்கிறேன்.

இது மரியாதையா பக்தியா என்று பிரித்துப்பார்க்க தோன்றவில்லை. பிரித்துப் பார்க்க முயலவும் இல்லை.

Thursday, June 13, 2019

வியாழன் விரதம்

இன்று வியாழக்கிழமை. சாய்பாபாவிற்காக விரதம் இருக்க உகந்த நாள். இன்று ஒரு நாள் ஒரு வேலை உணவு மட்டுமே எடுக்கலாம். அது எப்போது வேண்டுமானாலும் எடுக்கலாம். நான் பொதுவாக இரவு உணவு மட்டும் எடுத்துக்கொள்வேன். இந்த சாய்பாபா விரதம் பற்றி சுமார் 10 வருடங்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் பெரிதும் அறியப்படாமல் இருந்தது. ஆனால் இப்பொழுது அநேகமாக அறுபது சதவீதம் பேர் முக்கியமாக பெண்கள் சாய்பாபாவை வழிபடுகிறார்கள்  என்றே தோன்றுகிறது.

எங்கள் ஊரிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் ஊராட்சி கோட்டை மலை அடிவாரத்தில் ஒரு மாந்தோப்பின் முடிவில் என்றும் அமர்ந்திருப்பார் ஒரு சாய்பாபா. அன்று அவரை பெரிதாய் யாரும் கண்டுகொண்டதில்லை. அனால் இப்பொழுதெல்லாம் பெரும் கூட்டம் வரிசை கட்டி நிற்கிறது என்று அப்பா கூறினார்.

எனக்கு இந்த மனித பிறவியில் கடவுள் அவதாரம் என்று கூறுபவர்கள் மீது எந்த நம்பிக்கையும் இல்லை. ஆனால் இந்த சாய்பாபா நம்பிக்கை எப்படி வந்ததென்றால் சென்னையில் வேலையில் சேர்ந்து ஒரு வருடம் ஆகியிருந்தது. மூன்று மாதம் பயிற்சி அதன் பிறகு வேலை. ஐ டி துறையில் மென்பொருள் சேவை நிறுவனமாக இருந்தால் அவ்வளவு எளிதில் புதிதாக வந்தவர்களுக்கு வேலை கொடுக்க மாட்டார்கள். பெஞ்ச் பீரியட் என்று சொல்லி வேலை இல்லாமல் தினமும் அலுவலகம் சென்று வர வேண்டும்.

புதிதாக வந்தவர்களுக்கு வேலை தெரியாது என்று சொல்லி எந்த ப்ராஜெக்ட்டிலும் எடுக்க மாட்டார்கள். யாரும் வேலை கொடுக்காததால் எங்களுக்கும் வேலை தெரியாது. எனக்கும் ஒரு வருடம் வேலை இல்லாமல் அலுவலகம் சென்று வருவது வெறுத்துப்போனது. சும்மா உட்கார்ந்து சம்பளம் வாங்க கை கூசவில்லை. ஆனால் எதுவும் கற்றுக்கொள்ளாமல் இருப்பது ஒருவித பயத்தை அளித்தது. மிக நெருக்கடியான சூழல். பெங்களூரு வந்த நண்பர்களுக்கு ப்ராஜெக்ட் கிடைத்தது என்றும், இங்கே  வாய்ப்பு இருப்பதாகவும் கூறினார்கள்.

ஆனால் என்னை பெங்களூரு அனுப்ப ஒரு சதவீதம் கூட வாய்ப்பு இல்லை. அப்பொழுது அலுவலகத்தில் வேலை செய்யும் தம்பி ஒருவன் வியாழன் அன்று அவன் வழக்கமாக செல்லும் சாய்பாபா கோவிலுக்கு செல்லும்போது என்னையும்  அழைத்து சென்றான். நான் நம்பிக்கையில்லை என்றேன். அவன் நடக்காத ஒரு விசையத்தை நடக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய். அது நடந்தால் நம்பு என்றான். சரி என்று நானும், காசா பணமா வேண்டி வைப்போம் என்று பெங்களூருவில் ப்ராஜெக்ட் கிடைக்க வேண்டும் என்று நினைத்து வைத்துக்கொண்டேன்.

பாருங்கள் ஒரு வாரத்தில் ப்ராஜெக்ட் கிடைத்தது. இடமாற்றமும் கிடைத்தது. இது சாய்பாபா அருள் தானா என்று யோசித்துக்கொண்டிருந்தேன். மறுபடியும் ஒரு சோதனை வைப்போம் என்று இன்போசிஸ் நிறுவன நேர்முக தேர்வை முடித்துவிட்டு சாய்பாபாவிடம் சொல்லிவைத்தேன். அவர் இப்போதும் நீ நம்பித்தான் ஆக வேண்டும் என்றார். நான் முடியாது என்று இன்னொன்றை வேண்டினேன். என் அண்ணனுக்கு திருமணம் நடக்க வேண்டும் என்று தான். ஒரே வாரத்தில் அதையும் செய்தார்.

சரி இப்படி நம்பிக்கை இல்லை இல்லை என்று  சொல்லிச் சொல்லி எல்லா காரியத்தையும் நிறைவேற்றிக்கொள்ளலாம் என்று திட்டம் போட்டு ஒவ்வொன்றாய் அவரிடம் சொன்னால், என்னை ஏமாற்றுகிறாயா என்று இனி ஒன்றும் செய்து தர மாட்டேன் என்று சொல்லி கோபித்து கொண்டார் போல. இப்பொழுதெல்லாம் என்ன வேண்டினாலும் நடக்க மேட்டேங்குதே என்று தான் இந்த விரதம்.

இப்படி ஒரு கடவுள் இருக்கிறாரா இல்லையா என்று தெரியாமல் நாம் அனைவரும் நம் சுயநலத்திற்காக விரதம் இருக்க, வடக்கில் துறவிகள் கங்கையை  காப்பாற்ற உண்ணா நோன்பிருந்து உயிர் துறக்கிறார்கள். அதில் முக்கியமானவரின் நினைவுதினம் இன்று. ஆம் நீரின் தூய்மைக்காக போராடி உயிர் துறந்தவர் தான் நிகமானந்தா எனும் துறவி. ஒரு நாள் இரண்டு நாள் இல்லை. 114 நாட்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தார்.



                                             இளம் துறவி ஆத்மபோதானந்

அவர் மட்டுமல்ல அவரை போன்று அடுத்தடுத்து துறவிகள் அந்த உண்ணா நோன்பினை தொடர்ந்தனர். இறுதியாக நோன்பிருந்த இளம் துறவி ஆத்மபோதானந் 194 நாட்கள் வரை கங்கைக்காக விரதம் இருந்து அரசு வேண்டுகோளை ஏற்றதனால் விரதத்தை கடந்த மே மாதம் முடித்துக்கொண்டார். இப்படி இயற்கைக்காக நோன்பு இருப்பவர்களை வணங்கலாம். வழிபடலாம். தவறே இல்லை. ஏனோ என் விரதத்தைப் பார்த்து நானே சிரித்துக்கொள்கிறேன்.

இன்று வறண்ட தமிழகம் முழுவதும் மழை பெய்தது என்றறிந்தேன். ஆம் இன்று நிகமானந்தா உண்ணா நோன்பிருந்து உயிர் துறந்த நாள். இயற்கை அன்னை அவள் அஞ்சலியை செலுத்திவிட்டாள்.

Wednesday, June 12, 2019

தினம் தினம்

தினமும் எழுத வேண்டும் என்று இரண்டு வருடங்களுக்கு முன்னமே முடிவு செய்து எழுத ஆரம்பித்தேன். ஆனால் என்னால் தொடர்ந்து எழுத முடியவில்லை. பல காரணங்கள் கூறலாம். சோம்பேறித்தனம், சுய ஒழுக்கமின்மை, அதிகமான கவனச்சிதறல் என்று ஏகப்பட்டதை சொல்லலாம். ஆனால் காரணங்கள் வெறும் காரணங்களே.

சரி தொடர்ந்து எழுத ஊக்கம் தேவைப்பட்டதால் வலைப்பதிவைத் தொடங்கி எழுதிப் பார்த்தேன். ஆடிக்கொருவாட்டி அம்மாவாசைக்கு ஒருவாட்டின்னு எழுதுனா எப்படினு என்மேலேயே எனக்கு கடுப்பாகிவிட்டது. இருந்தாலும் ஒவ்வொரு முறையும் விடாமல் ஆரம்பிக்கிறேன். முயற்சிக்காமல் இருப்பது தான் தவறு.



பிடித்ததை செய்துகொண்டே இருக்க வேண்டும். அதில் எவ்வளவு பிழை இருந்தாலும் செய்ய வேண்டும். எனக்கு இருக்கும் இன்னொரு பிரச்சனை, ஒரு செயலை பிழை இல்லாமல் மிக நேர்த்தியாக, மிக பூர்ணத்துவத்துடன் செய்ய வேண்டும். அதாவது ஆங்கிலத்தில் பெர்பெக்ஷன்(Perfection)  என்பார்களே அப்படி இருக்க வேண்டும். இல்லையென்றால் அந்த செயலை செய்யவேண்டியதில்லை என்று நினைப்பவள்.

நான் மட்டுமல்ல முக்கால்வாசி பெண்கள் அப்படித்தான். எங்கள் வீட்டிலேயே எடுத்துக்கொள்ளலாம். என் அம்மா பாத்திரம் கழுவி முடித்தபிறகு அதை நேர்த்தியாக அடுக்கி வைப்பார்கள். அதே போல நான் கழுவும் போதும் நேர்த்தியாக அடுக்கி வைக்க வேண்டும். இல்லையென்றால் அதற்க்கு ஒரு திட்டு விழும். ஒருவேளை அவர்களுக்கு திருப்தி இல்லையென்றால் அவர்களே அதை சரி செய்துவிட்டு தான் செல்வார்கள். அடுத்தமுறை அந்த வேலையை செய்ய சொல்லமாட்டார்கள்.

சரியாக ஒரு வேலையை செய்வது என்பது பெண்கள் அகராதியில், அவர்களுக்கு தெரிந்த மாதிரி செய்வதே. அவர்கள்(பெண்கள்) செய்வதை போல் செய்யாமல் மாற்றி செய்தால் அது தவறுதான். அந்த வேலையை இன்னும் எளிமையாக செய்தாலும் தவறு தவறு தான். சொல்வதை அப்படியே ஈயடித்தான் காப்பி போல செய்தாலும் பெண்களுக்கு திருப்தி இருக்காது. இதனால் தான் ஆண்கள் தான் எவ்வளவு உதவி செய்தாலும் தன் மனைவியை திருப்தி செய்யமுடியவில்லை என்று புலம்புகிறார்கள். பெண்களை திருப்தி செய்வது அவ்வளவு எளிதில்லை.

எதை வாங்கிக் கொடுத்து வியப்பூட்ட செய்தாலும், அவர்கள் இன்னும் கொஞ்சம் சிறந்ததாக வாங்கியிருக்கலாம் என்று சொல்லவோ மனதில் நினைக்கவோ செய்வார்கள். தானே வாங்கியிருந்தால் இன்னும் சிறந்ததை தேர்வு செய்திருப்பேன் என்று எண்ணுவார்கள். ஏனெனில் பெண்களுக்கு தன்னால் தான் சிறப்பாக செய்ய முடியும் என்று எப்பொழுதுமே ஒரு எண்ணம் இருக்கும்.

அப்படித்தான் நானும் சிறப்பாக எழுத வேண்டும் என்று நினைத்து நினைத்து எழுவதே இல்லை. இனி ஒரு முடிவு. ரொம்ப மொக்கையாக இருந்தாலும் பரவாயில்லை எழுதவேண்டும் என்று. பார்ப்போம் இது எவ்வளவு நாள் என்று.

(பி.கு : ஆண்கள் எவ்வளவு தவறாக ஒரு வேலையை செய்தாலும் வெளியே மட்டுமே பெண்கள் திட்டுவார்கள். உள்ளூர அந்த வேலையை ரசிப்பார்கள்.)