Friday, July 31, 2020

காந்தியின் இறுதி நாட்களுடனான என் பயணம் - ஜூலை 27,1947. நாள் - 188

மெலிந்த உடல், ஆனால் அசைக்கவே முடியாத மன உறுதி கொண்டவர் தான் நம் காந்தியடிகள். சோகம் சூழ்ந்த இதயம், ஆனால் என்றும் மாறாத புன்சிரிப்புடன் எதையும் எதிர்கொள்ளும் பக்குவம். அவர் டெல்லியில் துப்புரவு குடியிருப்பில் தாக்கியிருந்தாலும் அவர் மனதெல்லாம் நவகாளியை சுற்றி வந்துகொண்டே இருந்தது. ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்கு முன்னமே அங்கு சென்று வர விரும்பினார். காஷ்மீர், பஞ்சாப் போன்ற இடங்களுக்கு செல்ல வேண்டும். அங்கு கடவுளின் பெயரால் மனிதர்களுக்கு மற்றவர்கள் செய்து வரும் கொடுமைகள் கணக்கிலடங்காதவை.

எங்கும் செல்லும் முன் அவர் லாகூர் சென்று வர வேண்டும் என்று விரும்பினார். தன் உயிருக்கு ஆபத்து என்று தெரிந்தும் இவ்வாறு படுகொலைகள் நடக்கும் இடங்களுக்கு சென்றால் சிறிதளவாவது மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அவர் நம்பினார். எந்த தலைவரும் இவ்வாறு யோசித்திருப்பார்களா என்று தோன்றவில்லை.

இறப்பில் அவர் மிகவும் தெளிவாக இருந்தார். ஒரு கடிதத்தில் "என்னுடைய பணிகள் தொடர்வது கடவுளுக்கு தேவை என்றால் 150 ஆண்டுகள் கூட அவர் என்னை வாழவைப்பார். எனது பணிகள் தேவைப் படவில்லை என்றால் இன்றே கூட அவர் என் உயிரைப் பறித்து விடுவார்" என்று எழுதினார்.

மாலை நடந்த பிரார்த்தனை கூட்டத்தில் வேலை நிறுத்தங்களைத் தவிர்க்குமாறு அவர் மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார். முக்கியமாக அரசு பணிகளில் வேலை செய்பவர்கள் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் சுயநலத்துக்காக செயல்படுவதை தவிர்க்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டார்.



சுதந்திரத்திற்கு பிறகு நாட்டின் முன்னேற்றம் அரசியல்வாதியால், நிர்வாகிகள் பொறுப்பு மட்டுமல்ல. ஒவ்வொருவரின் கடமை. ஒவ்வொரு குடிமகனும் "நாட்டைப் புதிய வழியில் கொண்டு செல்ல வேண்டும்" என்றும் அதற்கான செயல்பாடுகளையும் தெளிவாக விவாதித்தார்.

ஊழியர்கள் பெரும்படை ஒன்றை அமைக்க வேண்டும். அவர்கள் மக்களோடு மக்களாக கலந்து பழகி மக்களின் பிரச்சினைகள் என்ன என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இனி இந்த நாடு மக்களுக்கு சொந்தமானது என்றும், மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் தான் மந்திரிகள் என்பதும் அவர்களுக்கு உணர்த்த வேண்டும். மக்களுக்கு அநீதிகள் இழைக்கப் படுமானால் மக்கள் மந்திரிகளின் காதை பிடித்து திருகி அவர்களை பதவியிலிருந்து நீக்கலாம் என்பதையும் அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும்.

இத்தகைய ஆற்றல் மக்களிடம் உருவாக்கப்பட வேண்டும். மக்களை ஆள்வதற்கு மந்திரிகள் இல்லை. மக்களுக்கு பணியாற்றவே மந்திரிகள்  என்ற சிந்தனையை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார். அவர் மந்திரிகள் மக்களை அதிகாரம் செய்வது இன்னொரு மன்னராட்சியாகவோ, அதிகார ஆட்சியாகவோ மாறிவிடக் கூடும் என்று உள்ளுணர்வால் அறிந்திருந்தார் போலும்.

எவ்வளவு பெரிய நேர்மையான கனவு. சுதந்திரம் பெரும் முன்னரே அவர் நாட்டின் முன்னேற்றத்தை அடுத்த கட்டத்தை நோக்கி எடுத்துச் செல்ல தொடங்கி விட்டிருந்தார். அவர் என்றும் தற்காலிகமான தீர்வுகளை எடுக்காமல் எதிர்கால முன்னேற்றத்திற்காக சிந்தித்தார்.

"காங்கிரஸின் பயணத்திற்கு ஒரு புதிய திசை வழி அவசரமாக தேவைப்படுகிறது. பிரிட்டிஷாருக்கு எதிரான போராட்டம் பெரும் பயனை பெற்றுத் தந்தது. அதில் ஒற்றுமையுடன் ஒரு கருத்தை வலியுறுத்தி போராடினோம். அதே போல் இனிவரும் காலங்களிலும் நம் அனைவரின் குரல்களும் ஒன்றாகவே இருக்க வேண்டும். நம் நாட்டை வளங்கொழிக்கும் நாடாக மாற்றுவோம். ஒருவர் கூட பசி பட்டினி இல்லாமல் வாழ வேண்டும் என்ற நிலைமையை கொண்டு வர பாடுபட வேண்டும். நம் வாழ்க்கை முறை அமைதியானதாக, உயர்வானதாக, மகிழ்ச்சியானதாக ஆக்குவோம். இந்த லட்சியத்தை அடைய எத்தகைய தியாகத்தையும் செய்ய தயாராக இருக்க வேண்டும்." என்று கூறினார்.

அவர் சுதந்திர தினத்தை உண்ணாநோன்பு, பிரார்த்தனை, ஆழமான ஆத்ம சோதனை போன்றவற்றுடன் நடத்த வேண்டும் என்றே விரும்பினார். 

Thursday, July 30, 2020

காந்தியின் இறுதி நாட்களுடனான என் பயணம் - ஜூலை 26,1947. நாள் - 189

இன்றைய நாள் நல் துவக்கமாக இருந்தது. இந்தியா பாகிஸ்தான் ஆகிய இரண்டு அரசாங்கங்களின் பிரதிநிதிகளும் வெளியிட்டிருந்த அறிக்கை நாளிதழ்களில் வெளியாகியிருந்தன. இரண்டு நாட்டின் சிறுபான்மை மக்கள் அமைதியாகவும் சமஉரிமையுடன் வாழ்வதற்கு கூட்டறிக்கை உறுதி மொழியளித்திருந்தது. அதனைக்  மகிழ்ச்சி அடைந்த பாபுஜி "இந்த உறுதிமொழி செயல்படுத்தப் வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" என்று கூறினார்.

காங்கிரஸ் கட்சி அவர் வளர்த்த குழந்தை. அதன் எல்லா நிலைகளிலும் அவர் உடனிருக்கிறார். அதன் வளர்ச்சிக்கு உதவியிருக்கிறார்.பாசம் காட்ட வேண்டிய இடத்தில் பாசம் காட்டியும், கண்டிக்க வேண்டிய இடத்தில் கண்டித்தும்  அதன் தேவைக்கு ஏற்றபடி 30 ஆண்டு காலமாக அதை வழிநடத்துகிறார். காந்திஜி காங்கிரஸ் கட்சி எதிர்காலத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று கேட்ட கேள்விக்கு அவர் பின்வருமாறு பதிலளித்தார்.

காங்கிரஸ் கட்சி இரண்டு முக்கிய பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கருதினார். 1. வெள்ளைய அரசுக்கு எதிரான உறுதியான அஹிம்சை வழியிலான போராட்டம் நடத்துவதை அதன் முதல் கடமையாக கருத வேண்டும். ஆங்கிலேயர்கள் இந்த நாட்டை விட்டுச் செல்லும் வரை அதை தொடர்ந்து நடத்த வேண்டும். 2. மற்றொரு முக்கியமான கடமை சாதாரண மனிதனின் வாழ்க்கை நிலையை மேம்படுத்துவதே ஆக்கபூர்வமான சமூகப் பணியாகும். எப்பேர்ப்பட்ட சோதனைகள் வந்தாலும் இதனை தொடர்ந்து காங்கிரஸ் செய்ய வேண்டும் என்று அவர் விரும்பினார்.

வாழ வசதியின்றி தவிக்கும் கோடிக்கணக்கான மக்கள் மத்தியில் ஆற்றப்பட வேண்டியது சமூகப் பணியாகும். ஆனால் காங்கிரஸ் ஊழியர்களுக்கு சமூகப் பணியில் ஆர்வம் இல்லை என்று காந்திஜி வெளிப்படையாக ஒப்புக்கொண்டார். அந்நிய ஆட்சிக்கு எதிராக சத்யாகிரஹங்களில் ஈடுபடுவது போன்றவற்றில் இருந்த ஈர்ப்புத் தன்மை சமூகப் பணியில் இல்லை என்பதை அவர் தெளிவாக புரிந்து வைத்திருந்தார்.

அதற்கு காரணம் சுதந்திர போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு புகழ் சேர்ப்பவையாக அவை இருந்தன. ஆனால் காந்திஜி இந்தியா விடுதலை பெற்றவுடன் அரசியலுக்கு அல்லாமல், ஆக்கப் பணிகளுக்கு மட்டுமே மிக உயர்ந்த முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று உறுதியாக கூறினார். அவருக்கு அன்றே தெரிந்திருந்தது ஆக்கப் பணிகள் மட்டுமே நாட்டை முன்னேற்றும். அரசியல் அல்ல என்று.



சமூகப் பணியை நிறைவேற்றுவதில் காந்திஜி பெரிய அளவில் நம்பிக்கை கொண்டிருந்தார். எழுத்தறிவித்தல், கல்வி கற்பித்தல், சுகாதாரம் மற்றும் ஆரோக்கியம், மக்கள் தங்கள் உரிமைகளை, கடமைகளை அறிந்து கொள்ளுதல் போன்றவை தொடர்ந்து நடைபெற வேண்டும் என்று காந்திஜி உறுதியாகவும், மிகச்சரியாகவும் நம்பி வந்தார். சுதந்திரத்தை வென்றெடுத்த காங்கிரஸ் கட்சி இதனைவிட வேறு என்ன பெரிய முக்கிய கடமையை எதிர்பார்க்க முடியும்? என்று அவர் கேள்வி எழுப்பினார்.

"காங்கிரஸ் தனது வலிமையைப் பாதுகாத்துக் கொள்ள விரும்பினால் ஆக்கத் திட்டங்களைத் தீவிரமாக மேற்கொள்ள வேண்டும்" என்று தனது கருத்தை மீண்டும் வலியுறுத்தினார்.

Wednesday, July 29, 2020

காந்தியின் இறுதி நாட்களுடனான என் பயணம் - ஜூலை 25,1947. நாள் - 190

மிகவும் மெலிந்த தேகமும், சுறுசுறுப்பான இதயமும் கொண்ட இந்த மனிதர் ஐரோப்பியா சாம்ராஜ்யங்களில் மிக வலுவுள்ள ஒரு தேசத்தையே நடுநடுங்கச் செய்தவர். ஆனால் அவர் மகிழ்ச்சியுடன் இல்லை. எதற்காக இவ்வளவு நாள் போராடினாரோ அது கிடைக்கும் தருவாயில் இருந்தாலும் அவரின் உள்ளத்தில் மகிழ்வுணர்ச்சி இல்லாமல் இருந்தது.

நன்றாக பழுத்த பழமாகத் தான் சுதந்திரம் கிடைக்க இருக்கிறது. ஆனால் அந்த பழத்தைக் கொண்ட மரம்  துண்டாக விழப் போவதை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இந்தியா இரண்டு தேசங்களாக பிளக்கப் படுவது மட்டுமல்ல, பிரிவினை படுகொலைகள் என்ற கொடுமை தீவிரமாகப் பரவி வந்ததும் அவரை நிலைகுலையைச் செய்திருந்தன.

இப்படிப் பட்ட தேசப்பிதாவை மத வெறியர் என்று கூறுவதைக் கூட கேட்டிருக்கிறேன். வகுப்புவாத அரசியல், வன்முறைகள் செய்பவர்கள் தான் அவரை பெரிதும் எதிர்த்தார்கள். அவர் நேர்மைக்காக உழைத்தவர். நேர்மையற்றவற்றை கேள்வி கேட்டுக்கொண்டே இருந்தார். அதனால் தான் அவர் மீது இத்துணை விமர்சனங்கள், கேலிகள், வெறுப்புகள்,  வசைகள் என்று அனைத்தையும் கொட்டித் தீர்க்கின்றனர். அதற்கு காரணம் அவர் உண்மையாக, உண்மைக்காக வாழ்பவர். அவரை கண்டு பயப்படுகிறவர்களே அவரை வசை பாடுகிறவர்கள் ஆகிறார்கள்.

வடகிழக்கில் உள்ள சில்ஹெட்டில் நடந்த வாக்கெடுப்பில் அப்பகுதி மக்கள் அதிகமாக பாகிஸ்தானுடன் சேர விரும்பியதால் அங்கு வன்முறை தலைவிரித்தாடியது. இதை கடித்ததில் படித்ததும் அவர் மனம் வெகுவாக தளர்ச்சி அடைந்தது. இது அவர் எழுதிய கடிதத்தில் வெளிப்பட்டது. ஆகஸ்ட் 15ஆம் தேதி கிடைக்கவிருக்கும் சுதந்திரத்தை பற்றி மிகவும் மகிழ்ச்சி அடைவதாக ஹரிப்ரசாத் தேசாய் என்பவர் கடிதம் எழுதியிருந்தார்.

அதற்கு காந்திஜி எதற்காக இவ்வளவு சந்தோசப்படுகிறோம், நாம் பூரண சுதந்திரம் அடையவில்லை. நாம் என்று வகுப்பு பிரிவினையற்று மக்கள் ஒற்றுமையுடனும், சகோதரத்துவத்துடனும் வாழ்கிறோமோ அன்றே நாம் உண்மையான சுதந்திரம் பெறுகிறோம் என்று பதில் எழுதினார்.



"நாம் துணிவுடன் செயல்பட்டு சிறுபான்மை மக்களிடம் அன்பு காட்டினால் அவர்கள் அதை நம்மிடம் திரும்பச் செய்வார்கள். கோடிக்கணக்கான சிறுபான்மை மக்களை நாம் அடிமை செய்ய முடியுமா? மற்றவர்களை அடிமைகளாக மாற்றும் எவரும் தாங்களே அடிமைகளாகி விடுவார்கள் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்" என்றார்.

சுதந்திர இந்தியாவின் மக்கள் இந்துஸ்தானி மொழியில் ஒன்றினைக்க பட வேண்டும் என்று விரும்பினார் பாபுஜி. சமஸ்கிருத மொழியின் தாக்கத்துடன் கூடிய இந்தி மொழி வடிவமோ, பாரசீகத் தன்மையுடன் கூடிய உறுதிமொழி வடிவமோ தேசிய மொழியாக இருப்பதை அவர் விரும்பவில்லை. தேவநாகரி வரிவடிவத்தை கொண்ட இந்தியை பரப்புவதில் அவருக்கு விருப்பமில்லாமல் இருக்கிறது. காந்தியடிகளுக்கு ஒரு இந்தியா ஒரு மொழி என்று  ஆசை ஆனால் அதை யாரும்  வலுக்கட்டாயமாக திணிக்கக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தார்.

இந்துக்கள் தங்கள் பசு மாடுகளை விற்பனை செய்கின்றனர். அது கசாப்பு கடைக்காரரிடமே சென்றடைகிறது. விற்பனை செய்துவிட்டு பின்னர் பசுவதை தடைச்சட்டம் வேண்டும் அன்று போலித்தனமான முறையில் அவர்கள் கோரிக்கை எழுப்புவதை தனது பிரார்த்தனை கூட்டத்தில் கண்டித்தார் காந்திஜி. 70 வருடங்களுக்கு பிறகும் கூட இந்துக்கள் இன்றும் பசுவதை சட்டத்தை வைத்து கலவரங்கள், கொலைகள் என்று நடந்த வண்ணம் இருக்கிறது. ஆனால் மாமிச ஏற்றுமதியில் நாம் தான் முதலிடம். பசுவதை என்பது சிறுபான்மையினரின் மீது தாக்குதல் நடத்த எடுத்துக் கொண்ட காரணமென்றே தோன்றுகிறது.

காந்திஜி தனது தோழரிடம் தனிப்பட்ட முறையில்: "நீங்கள் ஏன் இவ்வளவு உணர்ச்சி வசப்படுகிறீர்கள்? தேச சேவை புரிய விழையும் எவரும் உணர்ச்சி வசப்படக் கூடாது" என்று கூறினார். எவ்வளவு உண்மையான வாக்கியங்கள். 

Monday, July 27, 2020

காந்தியின் இறுதி நாட்களுடனான என் பயணம் - ஜூலை 24,1947. நாள் - 191

காந்திஜி டெல்லியில் துப்புரவு குடியிருப்பில் தங்கியிருந்தாலும் அவர் மனம் முழுதும் நவகாளிக்கும், பிஹாருக்கும் செல்ல வேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்தது. சபர்மதி ஆசிரமத்திற்கு வர வேண்டுமென்றும் தொடர்ந்து அழைப்புகள் வந்து கொண்டே இருந்தது. நேருவின், படேலின் வற்புறுத்தலால் தான் அவர் டெல்லியிலே தங்க வேண்டி வந்தது.

ஆகஸ்ட் 15 ம் தேதி நெருங்க நெருங்க நேருவுக்கும் படேலுக்கும் காந்திஜி அருகில் இருந்தால் தைரியமாக உணர்வார்கள் என்றும், அந்த மாபெரும் நாளில் அவர் டெல்லியில் இருக்க வேண்டும் என்றும் அவர்கள் இருவரும் விரும்பினார்.

வழக்கம் போல் அவருடைய வேலைகளை தொடர்ந்து தீவிரமாக செய்து வந்தார். அவர் படேலுக்கு எழுதிய கடிதத்தில் "காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்தவுடன் நான் கிளம்பிவிடுவேன். இப்போது நிகழ்வது எனக்கு பிடிக்கவில்லை. ஆகஸ்டு 15ஆம் தேதிக்கு முன்னமே முதலில் பிஹாருக்கும் பின்னர் நவகாளிக்கும் சென்றுவிட வேண்டும். இங்கேயே மேலும் என்னை கட்டிப் போட்டுவிடாதீர்கள். இதுவும் அவசர வேலைதான்." என்று எழுதினர்.

ஆம் எதற்காக போராடினாரோ அது கிடைக்கும் தருவாயிலும் கூட அவர் பிரச்சினை மிகுந்த இடத்தில் களப்பணியாற்றவே விருப்பியிருக்கிறார். காந்தி ஒரு புகழ் பைத்தியம். அவர் பேர் தான் எல்லா இடத்திலும் வர வேண்டும் என்று நினைத்தார். அதனால் அவர் எல்லா இடத்திலும் தன்னை முன்னிலைப் படுத்திக் கொண்டார் என்று என் அலுவலகத்தில் கூட வேலை செய்பவர் சொல்லிக் கேட்டிருக்கிறேன்.

அப்படி அவர் முன்னிலைப் படுத்த நினைத்திருந்தால் அவர் டெல்லியிலேயே இருக்க விரும்பியிருப்பார். அவர் என்றும் மக்களோடு மக்களாக இருந்து தொண்டு செய்வதையே விரும்பினார். அவர் தன்னை முன்னிலை படுத்த என்றும் எண்ணியதில்லை. அவரின் சிந்தனை முழுவதும் மக்களின் வாழ்வை எப்படி வன்முறை இல்லாமல் உயர்த்தலாம் என்பதில் மேலோங்கி இருந்தது. அவர் என்றும் மக்கள் ஒற்றுமையுடன், இன மத ஜாதி பாகுபாடு இல்லாமல் வாழவேண்டும் என்பதே.


அவர் இன்றைய நாள் ஒரு கடிதத்தில் "உண்மையை உணர்ந்து கொள்வது என்பதன் பொருள், அனைத்து மனித உயிர்களும் ஒன்றுதான் என்று புரிந்து கொள்வதாகும். நமது அனைத்து உறுப்புகளும் ஓர் உடலை சேர்ந்தது என்பதை போல அனைத்து மதங்களும் ஒன்று என்பதைப் புரிந்து கொள்வதாகும்." என்று அனைத்து மத மக்களும் இந்த நாட்டின் உறுப்புகள் என்று எழுதியிருந்தார்.

மேலும் அவரின் எண்ணம் "இந்தியாவும் பாகிஸ்தானும் நட்புடன் செயல்பட்டால் ஒரு மகத்தான தேசமாக இயங்க முடியும்" என்று இருந்தது. அவர் என்றும் இரு நாட்டையும் சகோதர நாடாகவே உளமார எண்ணினார்.

Sunday, July 26, 2020

காந்தியின் இறுதி நாட்களுடனான என் பயணம் - ஜூலை 23,1947. நாள் - 192

இருள் விலகாத காலைப் பொழுதில் அந்த 78 வயது இளைஞர் எப்பொழுதும் போல சுறுசுறுப்புடன்  வேலைகளைத் தொடங்கினார். காலை சரியாக 4.15 மணிக்கு கடிதங்கள் எழுதத் தொடங்கிவிட்டார். தனது பேத்தியான மீராவின் கடித்ததிற்கு பதில் எழுதுவதில் தானும் ஒரு குழந்தையாய் மாறி அவளுடைய பருவத்திற்கே சென்று கடிதம் எழுதினார். 60 வயதை குறைத்துக் கொண்டு அவளின் இடத்தில் இருந்து அவள் முறையிட்டிருந்த நிகழ்வுக்கு பதில் எழுதுகிறார்.

அவருடைய அறிவுரைகள் அவர் பேத்திக்கு மட்டுமல்ல இவ்வுலகின் அனைவருக்கும் தான். "சீதா, ஏன் அவ்வளவு சீக்கிரத்தில் மனதளர்ந்து போகிறாய்? உனது சுயமரியாதையை எவரும் காயப்படுத்தி விடவில்லை. நீ அமைதியுடன் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். உனது உடல் வலிமையை வளர்த்துக்கொள். எல்லா விதிகளையும் கவனத்துடன் பின்பற்று. தொடர்ந்து கடிதம் எழுது." என்று அவளை வலிமை பெற வைக்கிறார்.

நல்ல வாழ்க்கை என்பதை சிறந்த முறையில் வாழ்ந்து காட்டி வருபவர் அல்லவா? நவகாளியில் பிரிவினை வன்முறைக்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு கூட துணை நிற்கும் பொழுதும் சரி, லண்டனுக்கு பிரிட்டிஷ் அரசரை சந்திக்க தன்னுடைய கிராமவாசி உடையில் சென்றபோதும் சரி, தண்டி மண்ணில் ஒரு நியாயமற்ற சட்டத்தை மீறும்போதும் சரி எல்லோருக்கும் முன்னோடியாக வாழ்ந்து காட்டியவர் அவர்.

"உன் உடல்நலத்தை வலிமையுடன் பராமரித்துக்கொள். மனதை தெளிவாக வைத்திரு. உணர்ச்சி வசப்படாதே. கட்டுப்பாட்டுடன் செயல்படு. மற்றவர்கள் சொல்வதைப் பற்றியெல்லாம் கவலைப் படாமல் எது சரியானதோ அதன்படி நடந்துகொள். அதுதான் சரியான கட்டுப்பாடு மிக்க வாழ்க்கையின் ரகசியம். கட்டுப்பாட்டுடன் செயல்பட முடியாதவர்கள் இறுதியில் உபயோகமற்றவர்களாக மாறி விடுகிறார்கள்."

இந்திய இளைஞர்கள் சரியான பாதையில் சென்று தங்களை வளர்த்து கொள்ள வேண்டும் என்று அவர் விரும்பினார். இளைஞர்கள் தாய் நாட்டிற்கும் உலகத்துக்கும் சேவை செய்ய வேண்டும் என்பதே அவர் விருப்பமாக இருந்தது. அதற்கான முறையான, தரமான கல்வியை அவர்கள் பெற வேண்டுமென்று எண்ணினார். அது யாருடைய கடமை என்பதில் தெளிவாக இருந்தார்.

மக்களே முன்வந்து ஒன்றுபட்டு ஒரு இயக்கத்தை ஆரம்பிக்க வேண்டும். இந்தியாவின் கல்வித் தேவையை அந்த இயக்கம் பார்த்துக் கொள்ள வேண்டும். அதுமட்டுமல்லாமல் அரசாங்கம் கோடிக்கணக்கான ரூபாய்களை செலவு செய்து பல்கலை கழகங்கள், கல்விச் சாலைகள் அமைக்க வேண்டும். உலகத் தரமான பல்கலைக்கழங்கள் இந்தியாவில் நிருவப் பட வேண்டும் என்றார்.



காந்தியின் கருத்தியல் எல்லாவற்றிலும் உண்டு. அதில் கல்விக்கான அவரின் கருத்து முக்கியமானதாக எனக்கு தோன்றுகிறது. நாம் மேற்கத்திய கல்வி முறையை அச்சு பிசகாமல் இந்தியாவில் பின்தொடருகிறோம். ஆனால் அந்த கல்வி முறை நம் மண்ணிற்கு ஒத்து வராது. இம்மண்ணிற்கான கல்வி முறையை நாம் கண்டடைய வேண்டும் என்று காந்தி கூறினார்.

அதில் ஆராய்ந்து உருவாக்கியது தான் நையித்தாலிம் பள்ளி. நையித்தாலிம் கல்வி முறை தான் நாம் பின்பற்ற வேண்டிய ஒன்றாக எனக்குத் தோன்றுகிறது. அதாவது செயல் முறைக் கல்வி. இந்த முறை கல்வி, யாரிடமும் நம்மை அடிமை படுத்தாமல், இன்னொருவரின் கீழ் வேலை செய்யும் அடிமை வேலையிலிருந்து சொந்த தொழில் அல்லது வேலை போன்றவற்றை அடிப்படையிலே கற்றுக் கொடுத்துவிடும்.

ஆம் பயன்படாத பாடத்தை 20 வருடமாக கற்று இன்னொருவரின் மூளையில் உதிக்கும் எண்ணங்களுக்கு எடுபிடி வேலை செய்துகொண்டிருக்கிறோம். இந்தியாவின் தொழில் பின்புலத்தைப் பார்த்தாலே நம் கல்வியின் தரம் தெரிந்துவிடும். ஆம் இன்று மேலோங்கி இருக்கும் புதிய தொழில்நுட்ப நிறுவனங்களில் நாம் வேலை செய்கிறோமே தவிர நம்மால் புதிய கண்டுபிடிப்புகளையோ, ஆராய்ச்சிகளையோ உலக அளவில் செய்ய முடியவில்லை என்பதே நிதர்சனம்.

ஏன்னென்றால் நாம் சிந்திக்கும் திறன் இக்கல்வியால் இழந்து விட்டோம். இதை அன்றே கணித்தார் காந்தி. அதனால் தான் செயல்முறைக் கல்வியை அவர் பரப்ப வேண்டும் என்று எண்ணினார். உலக அளவில் மக்கள் தொகையில் இரண்டாம் இடமான இந்தியாவில் எத்துனை கண்டுபிடிப்புகள் உலக அளவில் இருக்கின்றது என்பதற்கு பதிலே நாம் மாற்றுக் கல்வியில் காந்தியை பின்பற்ற தவறிவிட்டோம் என்பதையே காட்டுகிறது.

Friday, July 24, 2020

காந்தியின் இறுதி நாட்களுடனான என் பயணம் - ஜூலை 22,1947. நாள் - 193

இன்றைய தினத்தில் காந்திஜி மிகவும் மகிழ்ந்து ஒரு கடிதம் எழுதினார். இந்தியாவில் அப்பொழுது பல இடங்களில் மன்னராட்சி நடைபெற்று வந்தது. அதில் விஜய நகர பேரரசு முக்கியமான ஒன்று. அந்நிலத்தின் மன்னரான விஜயாவுக்கு ஆங்கிலேய அரசு சர் பட்டத்தை வழங்கி கவுரவப் படுத்தியிருந்தது.

ஒரு மாத காலத்தில் சுதந்திரம் கிடைத்துவிடும் என்ற நிலை இருந்தது. பிரிட்டிஷ் சக்ரவர்த்தி அளித்த கவுரவ சர் பட்டத்தை விஜயநகர பேரரசர் துறப்பதாக அறிவித்திருந்தார். அரசரின் இந்த முடிவை காந்திஜி வரவேற்று அவருக்கு மகிழ்ச்சியாய் ஒரு கடிதம் எழுதினார்.

அன்றைய தேச பக்தி என்பது சுயநலமற்றதாய் இருந்தது. இன்று இருக்கும் நாட்டை ஆள்பவர்கள் வெவ்வேறு நாடுகளில் சென்று தனது அதிகாரத்தை பயன்படுத்தி பல பட்டங்கள், பாராட்டுகள் வாங்கி குவித்துக்கொண்டு தேசபக்தியை பற்றி மேடைக்கு மேடை பேசித் தீர்க்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள் காந்தியத்தையும் காந்தியையும் வெறுப்புடனே தான் அணுகமுடியும். ஏனென்றால் காந்தி இத்தகைய பொய்களுக்கு எதிரானவர்.

காந்தியை வெறுப்பவர்கள் அவரைப்பற்றி அறியாதவர்கள், வாசிக்காதவர்கள். அவரின் சுயத்தை, நேர்மையை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள். காந்தி தன்னை பொதுவெளியில் பொதுமைப் படுத்திக்கொண்டவர். அவரை தூற்றுபவர்களில் தூய்மையற்ற ரகசியங்கள் ஒளிந்திருக்கும்.

ஜே.சி.குமரப்பா லண்டனிலிருந்து எழுதிய கடிதத்தை படித்துவிட்டு அதற்கு பாபுஜி பதில் கடிதம் எழுதினர். லண்டனில் தாராளமயமாய் பொருட்கள் கிடைப்பதிலிருந்து மாறி ரேஷன் மூலம் கிடைக்கப் பெறுவதைப் பற்றி கூறியிருந்தார். அதில் முக்கியமாக அனைத்து மக்களும் பயன்பெற வேண்டும் என்று சுயகட்டுப்பாட்டுடன் ஒத்துழைக்கின்றனர். தான் ஒருவர் மட்டும் வாழ்ந்தால் போதும் என்னும் எண்ணம் இல்லாமல் இருப்பது அவருக்கு மகிழ்ச்சி அளித்தது. அவர்களைப் போல் இந்திய மக்கள் இல்லையென்பதில் குமரப்பா வருத்தப்பட்டிருந்தார்.

பாபுஜி அதற்கு பதிலளித்து அவர் இங்குள்ள நிலை பயங்கரமாக இருக்கிறது என்று குறிப்பிட்டிருந்தார். அன்று அவர் பிரிட்டிஸ்காரர்கள் சிறிது காலத்தில் வெளியேறுவதைப் பற்றி பேசினார். "ஒன்றை நான் இங்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன். ஆங்கிலேயர்கள் வெளியேறுவதால் அவர்கள் நமக்கு சலுகை அளிக்கவில்லை. அவர்கள் நாட்டில் ஏற்படுத்தியிருக்கிற சூழல்களால் தவிர்க்க முடியாமல் வெளியேற வேண்டிய நிலைமை. 150 ஆண்டுகால ஆட்சியில் அவர்கள் இந்தியாவை சீரழித்துவிட்டனர். அதே நேரத்தில் அவர்களிடம் கற்பதற்கு நமக்கு நிறைய உள்ளது." என்று கூறினார்.

அதுமட்டுமல்லாமல் அவர் ஆங்கிலேயர்களை புகழ்ந்து பேசுவதாக குற்றம் கூறியவர்களுக்கு தாம் எப்போதும் தேவைக்கு அதிகமாக புகழ்ந்து பேசியது கிடையாது என்று பதிலளித்தார். இந்தியத் தலைவர்கள் தான் மவுண்ட்பேட்டன் பிரபுவை இந்திய அரசின் கவர்னராக நீடிக்குமாறு கேட்டுள்ளதை நினைவு படுத்தினார்.



காந்தியை கேள்வி கேட்பவர்களிடம் தொடர்ந்து பதில் அளித்துக்கொண்டே இருந்தார். அவர் என்றும் கேள்விகளுக்கு பின்வாங்கியதில்லை. இன்றைய ஆட்சியாளர்கள், தலைவர்கள் போல் அவர் அமைதி காத்ததில்லை. எல்லா மக்களுடனும் தொடர்ந்து உரையாடிக்கொண்டே இருந்தார். அவரிடம் எதிர்வினை ஆற்றுபவர்களிடமும் தொடர்ந்து பேசினார். அனைத்து உரையாடல்களையும் மறைவின்றி தான் உரையாடினார்.

யாரின் கேள்விகளுக்கும், எதிர்வினைக்கும் அவர் பயப்படவில்லை. காரணம் அவரிடம் உண்மை இருந்தது.

காந்தியின் இறுதி நாட்களுடனான என் பயணம் - ஜூலை 21,1947. நாள் - 194

வெப்பம் வாட்டியெடுக்கும் இந்தியாவின் தலைநகரில் இளைஞர்கள் கூட சோர்ந்து போகும் அளவிற்கு  அதன் தாக்கம் மிக அதிகமாக இருந்தது. ஆனால் நம் பாபுஜி மிகவும் சுறுசுறுப்புடன் தனது 78 வயதிலும் இயங்கிக் கொண்டிருந்தார். அதிகாலையிலேயே எழுந்து தனது கடமைகளை தொடங்கி விடுவார்.

எந்த வயதிலும் சுறுசுறுப்பாக, உடல்பலத்துடன் இருப்பதற்கு நம் வாழ்வில் ஒரு தீவிரமான லட்சியம் தேவை. ஆம் உடல் ஆரோக்கியம் வெறும் உடல் சார்ந்தது மட்டுமல்ல. அது மனம் சார்ந்ததும் கூட. மனதில் ஒரு பெரிய லட்சியத்தை வைத்துக்கொண்டு இயங்கினால் நாம் என்றும் களைப்படைய மாட்டோம். இதை என் கண்கூடாக கண்டிருக்கிறேன்.

ஆம், என் வாழ்வில் நான் நேரில் சந்தித்து உரையாடிய அந்த ஆத்மா தனது 90 வயதிலும் சுறுசுறுப்பாக இயங்கி கொண்டிருக்கும் கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் தான். இந்த புனித ஆத்மா இப்பொழுதும் ஒரு லட்சியத்தை வைத்துக் கொண்டு அதற்காக சுழன்றுகொண்டு இருக்கிறார். தனது 90 வயதில் வீடில்லாதவர்களுக்கு வீடு கட்டிக்கொடுப்பதுவே அவரின் கனவு. இந்த வயதிலும் அவரை இயங்க வைப்பது அவரது கனவு லட்சியம் தான். அவர் தனது பள்ளி பருவத்திலிருந்தே காந்தியத்தை கை பிடித்தவர். நான் நேரில் சந்தித்த சாட்சி.

கனவு, லட்சியம் இல்லாதவர்கள் ஒரு கட்டத்தில் வாழ்க்கையை வெறுக்க ஆரம்பித்துவிடுவார்கள். அத்துனை உறவுகள் உடனிருந்தாலும் ஒரு வெறுமை அவர்களிடம் மிஞ்சும். தனது வாழ்வில் ஒவ்வொரு செயலிலும் நிறைவற்றவர்களாய் புலம்பிக் கொண்டு மீதி வாழ்க்கையை முடிப்பார்கள். ஆனால் கனவு லட்சியத்துக்காக வாழ்பவர்களிடம் நீங்கள் ஒரு நிறைவை காணலாம்.

அவர்களிடம் பொருள் சார்ந்து எதுவுமே இல்லாமல் இருந்தாலும் கூட மன சோர்வு இருக்காது. இயங்கிக் கொண்டே இருப்பார்கள். அவர்களிடம் வாழ்க்கை குறித்த நன்றியுணர்வே மிஞ்சும்.

காந்திஜி தெரிந்தவர், தெரியாதவர் என்று அனைவருக்கும் பதில் கடிதம் எழுதி அனுப்பினார். தினமும் குறைந்தது 1000 முதல் 2000 வரையிலான, சில நாட்கள் இன்னும் அதிகமாகக் கூட சொற்கள் எழுதிக்கொண்டே இருந்திருக்கிறார்.



இந்த நாளில் அவர் நவகாளிக்கு செல்வது பற்றி கடிதம் எழுதினர். நவகாளியில் வேறெங்கும் நடக்காத அளவில் கொலைகள், கற்பழிப்புகள், கலவரங்கள் மதத்தின் பெயரால் நடந்தேறியது. காந்திஜி அங்கு சென்று மனிதத்தை பரப்பும் முயற்சியில் பெரிதும் ஈடுபட்டார். நவகாளி யாத்திரை புத்தகத்தில் நீங்கள் விரிவாக அறிந்து கொள்ளலாம்.

காந்திஜி எப்பொழுதும் ஒரு திறந்த புத்தகமாகவே இருந்தார். எந்தவொரு மனிதனும் தனது தோல்விகளை ஒப்புக்கொள்வது கடினம். ஆனால் அவர் தனது தோல்விகளைப் பற்றிய ஆழமான கருத்துக்களை ஒளிவு மறைவின்றி ஏற்கனவே எழுதியிருந்த மற்றொரு கடிதத்தில் இவ்வாறு எழுதியிருந்தார். "நான் குறைகளற்றவன் என்று என்றுமே நினைத்ததில்லை. ஆனால் தோல்விகளை கண்டு துவண்டு போவதில்லை. ஏனென்றால் என்னைத் திருத்திக் கொள்வதையே நான் விரும்புகிறேன்."

Wednesday, July 22, 2020

காந்தியின் இறுதி நாட்களுடனான என் பயணம் - ஜூலை 20,1947. நாள் - 195

இன்றைய நாள் பல சோக நிகழ்வுகள் காந்திஜிக்கு காத்திருந்தது. எந்தவொரு நிலையிலும் அவர் கருணை நிறைந்த ஒளி தோன்ற வேண்டும் என்று பிரார்த்தனை செய்தார்.

பர்மாவின் விடுதலைக்காக போராடிய அவரது நண்பர்கள் ரங்கூனில் படுகொலை செய்யப்பட்டது அவரை வெகுவாக அழுத்தியது. பர்மாவுக்கு மட்டுமல்ல உலகத்துக்கே  மோசமான நிகழ்வு இது. இது போன்ற வெறித்தனமான வன்முறைகள் தவிக்கப் படவில்லையென்றால் மனித இனத்தின் எதிர்காலம் மோசமாகும் என்று அவர் வருத்தப் பட்டார்.

இதிலிருந்து இந்தியா பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும், இந்த மாதிரியான ரத்த வெறி கொண்ட தாக்குதல்கள் அரசியல் காரணங்களுக்காவே நடக்கின்றன என்றார். இது நிறுத்தப்பட வேண்டும் என்றும் கூறினார். "இக் கொலைகளை செய்தவர்கள் மனந்திருந்துவதற்கு இறைவன் அருள் புரியட்டும்" என்று கூறுவதிலிருந்து அவர் தீமை செய்தவரைக்கூட வெறுப்பதில்லை.

மாறாக அவர்கள் மனம் திருந்த வேண்டும் என்ற எண்ணம் யாருக்கு வரும். வேறு யாராக இருந்தாலும் வன்மத்தை தான் வெளிப்படுத்தியிருக்க முடியும்."உலகிற்கு இன்று தேவைப்படுவது கத்தியும், துப்பாக்கியும் அல்ல. நியாயங்களை புரிந்து கொள்வதற்கு ஏற்ற உண்மையான மனமாற்றமே." என்ற உண்மையை அவர் அறிந்திருந்தார்.

ஒரு நாட்டில் மிகப் பெரிய மாற்றம் போரின் மூலமோ, அடக்குமுறைகள் மூலமோ நடந்துவிடாது. அப்படி நடந்தாலும் அது வெகுகாலம் நிலைத்து நிற்காது. இதில் உயிர்பலிகள் அதிகமாக கொடுக்க வேண்டியிருக்கும். ஒட்டுமொத்த மக்களின் புரிந்துணர்வால் வரும் எழுச்சியினால் தான் நிலைத்த மாற்றம் உருவாகும். அதுவே மனித இனத்திற்கு நன்மை விளைவிக்கும். இது தான் காந்தியின் புரிந்துணர்வு. இதை தான் அந்த மகாத்மா இந்திய சுதந்திர போராட்டத்தில் கையாண்டார்.

அஹிம்சையை விடுத்து ஆயுதங்கள் ஏந்தியிருந்தால் நாம் அழிக்கப்பட்டிருப்போம். ஈழம் போல. உயிர்பலி வெகு குறைவாக சுதந்திரம் பெற்றது அஹிம்சையில் தான். அவருடைய ஒவ்வொரு போராட்ட முறைகளும் ஆயுதங்களை விடவும் வீரியமானது. அஹிம்சையில் போராட மிக அதிக வலிமை வேண்டும்.



ஒருவர் நம்மை எதிரியாய் பாவிக்கும்பொழுதும், நம்மை அடிமையாய் நடுத்துபவர்களை எதிர்த்து போராடும்பொழுதும் நாம் சிறிதும் மனம் கலங்காது அவர்களுடனேயே துளியும் வெறுப்பில்லாமல் உரையாட வேண்டும். நம் மீது வெறுப்பு கக்கினாலும் அவர்களுக்காக சேர்த்தே போராடுவது காந்தியத்தில் தான் சாத்தியம் என்பேன்.

Tuesday, July 21, 2020

காந்தியின் இறுதி நாட்களுடனான என் பயணம் - ஜூலை 19,1947. நாள் - 196

இன்றைய தினம் உலகத்தில் பல்வேரு முக்கிய நிகழ்வுகள் நடந்தாலும் காந்திஜி எப்பொழுதும் போல இரவு நெடுநேரம் தொடரும் வேலைகளை ஆரம்பித்தார். பிரார்த்தனை மற்றும் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டார். வழக்கம் போல் மலையென குவிந்து கிடைக்கும் கடிதங்களை, தந்திகளை படித்து பதில் அனுப்பும் வேலையை செய்யத் தொடங்கினார்.

அன்று வந்த தந்திகளில் முக்கியமான ஒன்று இந்தியாவின் தேசிய மொழியாக இந்தியை அரசியல் அமைப்புச் சட்ட அவையில் காங்கிரஸ் ஏற்றுக் கொண்டதற்கு அவர் பெரிதும் வருந்தினார். அதற்கு இணையாக உருது வரி வடிவத்தையும் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

அவர் காங்கிரஸ் கட்சியில் பதவியை பிடிக்க ஏற்பட்டு இருக்கும் பைத்தியகாரத் தனமான வெறி குறித்து செயற்குழு உறுப்பினர்கள் அதிர்ச்சியானதை அன்றைய மாலை பிரார்த்தனையில் முன்வைத்தார். மக்கள் சேவைக்காக உருவாக்கப்பட்ட அமைப்பில் இவ்வாறு நடப்பது சேவைக்கான வீழ்ச்சியாகவே பார்த்தார் காந்தி. அரசு பணிகளில் நுழைபவர்களும், தலைவர்களும் நாம் இந்த நாட்டிற்கும், மக்களுக்கும் உன்னத பணிகளை செய்கிறோம் என்ற உணர்வுடன் சேவையாக, கடமையாக செய்ய வேண்டும் என்றார்.

நம் நாட்டில் இன்று நடக்கும் அத்துனை பிரச்சினைகளையும் அவர் அன்றே விவாதித்துள்ளார் என்பது தான் வியப்பிற்குரியது. ஏறத்தாழ 100 ஆண்டுகள் ஆகப் போகிறது. அவர் நம் எல்லாத் தலைமுறைக்கும் சேர்த்து தான் சிந்தித்துள்ளார். எல்லா சிக்கல்களுக்கும் அவர் அன்றே தீர்வுகளை ஆராய்ந்து தேடியிருக்கிறார்.



அன்றே பசுவதைக்கு தடை சட்டம் கேட்டு இந்துக்கள் முறையிட்டுள்ளனர். ஆனால் இவ்வாறு கோரிக்கை வைத்துள்ள இந்துக்களை பார்த்து காந்தியடிகள் "பசுவதை வேண்டாம் என்று கூறும் பல இந்துக்கள் தன் பசுக்களை பட்டினி போடுகிறார்கள். அவற்றை துன்புறுத்துகிறார்கள். பால் வற்றிய பசுக்களை, காளை கன்றுகளை கசாப்புக்கு விற்கிறார்கள். இப்படி பசுவிற்கு எதிராக செயல் புரிந்துவிட்டு மதத்திற்காக சட்டம் இயற்ற கேட்பது மோசமானது" இவ்வாறு கேள்விகளை மாலை பிரார்த்தனையில் எழுப்பினார்.

அவர் பேசி 73 ஆண்டுகள் ஆகியும் இன்றும் இந்த பசுவதை சிக்கல் நீடித்துக் கொண்டே இருக்கிறது. அதுவும் இன்று அரசாங்கமே இதை பெரிதுபடுத்தி மத சார்புடன் பாராபட்சமாக  நடந்துகொள்கிறது. பசுவதையை வைத்து இன்று எத்துனை கலவரங்கள், உயிரிழப்புகள் நடந்தவண்ணம் உள்ளது. அதை இன்றைய அரசே ஊக்குவிக்கிறது என்பது தான் வேதனைக்குரியது.

காந்திஜி ஜாதி மதம் சாராமல் என்றும் நடுநிலைமையுடனே தான் ஒவ்வொரு பிரச்சனைகளையும் அணுகினார். அவர் மனிதத்தையும், அறத்தையும் கொண்டே செயல்பட்டார். சகிப்புத் தன்மையும், சரியான புரிதலும் சேவை செய்ய தேவை என்று கூறினார்.

"மகத்தான செயல்களைச் செய்ய முயலும் அனைவருக்கும் எல்லையற்ற பொறுமை தேவைப்படுகிறது"  - காந்திஜி

Monday, July 20, 2020

காந்தியின் இறுதி நாட்களுடனான என் பயணம் - ஜூலை 18,1947. நாள் - 197

திண்ணைப் பள்ளிக்கு சென்று வர ஆரம்பித்ததிலிருந்து நிறைய சிறுவர்களை நண்பர்களாய் கிடைக்கப் பெற்றேன். தியா தினமும் திண்ணைப் பள்ளிக்கு தவறாமல் வந்துவிடுவாள். காலையில் குக்கூவிற்கும் தவறாமல் வந்துவிடுவாள். ஒரு நாள் ஆமை ஒன்றை கொண்டு வந்து மீன் தொட்டியில் விட்டு அழகு பார்த்தாள்.

கொஞ்சம் அல்ல மிகுந்த சேட்டைக்காரி. ஒரு நாள் அவள் சேட்டையை தாங்காமல் மற்ற சிறுமிகள் புகார் சொல்ல இல்லை என்று வெகுவாக சாதித்தாள். மற்றொரு நாள் அவள் மற்றவர்களுக்கு செய்யும் தொந்தரவை நானே நேரில் பார்த்தேன். கூப்பிட்டு கண்டித்து அனுப்பினேன். அவளுக்கு நான் கண்டித்தது பிடிக்கவில்லை. சிறிது நேரத்தில் என்னிடம் வந்து அவள் மீன் தொட்டியில் விட்ட ஆமை வேண்டும் என்று நச்சரிக்கத் தொடங்கினாள்.

சரளமாக காரணங்களை அடுக்கிக் கொண்டே சென்றாள். அவ்வளவும் பொய்கள். மிச்சமான பிடிவாதம். அன்றிலிருந்து திண்ணைப் பள்ளிக்கு வருவதில்லை. அவள் அம்மா எண்னிடம் வருத்தப் பட்டு அவள் அதிகமாக பொய் பேசுவதையும், என்ன செய்வதென்று தெரியவில்லை என்றும் வருத்தப்பட்டார். பிறகு ஓரிரு நாட்கள் அவள் வரும்போதெல்லாம் பொய் சொல்லக்கூடாது என்று கூறுவேன்.

அவளும் சரி என்று சொல்லிச் செல்வாள். ஆனால் அதை ஒருபோதும் பின்பற்றியது இல்லை. தினம் தினம் புகார்கள் வரும். அவளும் அதை சமாளிக்க பொய்களாக அடுக்குவாள். ஆனாலும் என்னால் அவளை வெறுக்கவோ ஒதுக்கவோ முடிவதில்லை. அவளும் எனக்கு மற்ற சிறுவர்கள் போலத் தான். எந்த வேறுபாடும் இல்லை.

ஒவ்வொருமுறையும் அவள் பொய் சொல்ல மாட்டேன் என்று உறுதியளிப்பவளை அவள் அம்மாவும் நானும் இன்று வரை நம்புகிறோம். தினமும் அவளிடம் பொய் சொல்லக்கூடாது என்று கூறிக்கொண்டே  இருக்கிறோம்.

சீக்கியர்கள் சிலர் காந்திஜியை சந்தித்து முஸ்லீம்களுக்கு ஆதரவாக காந்திஜி பேசுவதை எதிர்த்து கருத்து தெரிவித்தனர். தேசிய உணர்வுள்ள முஸ்லீம்கள் என்று காந்தி குறிப்பிடுவதை அவர்கள் கண்டித்தனர். "இன்னும் அவர்களை ஏன் நம்புகிறீர்கள்?" என்று கேட்டனர். அவர்கள் மற்றவர்களுக்கு செய்யும் அநியாயங்களை காந்திஜி அறிவாரா? என்ற கேள்விகள் வந்துகொண்டே இருந்தது.

காந்திஜி அதற்கு அவர்கள் மற்றவர்களை ஈவு இரக்கமின்றி நடத்தப்படுகின்றனர் என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் அதற்காக பழிவாங்கும் எண்ணம் மிகுந்த அவமானத்தை ஏற்படுத்துகிறது.
கண்ணுக்கு கண் என்ற பழிவாங்கும் சண்டையில் என்ன லாபம்?



காந்திஜி முஸ்லீம்களையும் இந்துக்களையும் தன் சொந்த பிள்ளைகளாகத் தான் பார்த்தார். தியாவை அவள் அம்மா பார்த்தது போல். அதுமட்டுமல்லாமல் அவர்கள் இந்தியாவுக்கு உண்மையாக இருப்போம் என்று கூறும்போது அவர்களை நம்பத்தான் வேண்டும் என்றும் அதுவே அவர்கள் திருந்துவதற்கு வாய்ப்பாக கூட அமையலாம் என்றும் கூறியிருக்கிறார். காந்திஜிக்கு தியாவின் தாயின் மனசு தான்.

இன்றைய தினத்தில் டெல்லி மாநாட்டிற்காக வந்த மாநில பிரதமர்கள் காந்திஜியை துப்புரவு தொழிலாளர்கள் குடியிருப்பில் சென்று சந்தித்தார்கள். பாபுஜி அவர்களிடம் மக்களுக்கு நன்மை செய்யும் வகையில் அரசாங்கம் நடத்துவதற்காக என்ன செய்துள்ளீர்/செய்யப்போகிறீர்கள் என்று கேட்டு தெரிந்து கொண்டார். அவர் அரசியல் அற உணர்வுடனும், தூய்மையான நடத்தையுடனும் செய்ய வேண்டும் என்றே விரும்பினார்.

"பெண்கள் கடவுளால் ஆசீர்வதிக்கப் பட்டவர்கள். உலகப் பெண்கள் ஒன்றுபட்டால் அணுகுண்டையே சாதாரண பந்தைப் போல காலால் உதைத்து தள்ளும் அளவு வீரம் செறிந்த அஹிம்சா முறையை வெளிக்காட்ட முடியும். பெண்களின் அந்த ஆற்றல் உறங்கிக் கொண்டிருக்கிறது." என்று காந்தியடிகள் சீனப் பெண்களுக்காக இன்று ஒரு அறிக்கை அவர்களின் மகிமையை வெளியிட்டார்.

அவர் வகுப்புவாத பிரிவினையை தீவிரமாக எதிர்த்தார். நாம் சார்ந்துள்ள மதம் எதுவாக இருந்தாலும் நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற ஒற்றுமையுடன் வாழ வேண்டும். அப்போதுதான் நாம் நமது சுதந்திரத்தை நாம் பாதுகாக்க முடியும் என்று கூறினார் காந்திஜி.

இன்று மதத்தின் பெயரால் நடக்கும் வன்முறைகளை அவர் உயிரோடிருந்திருந்தால் மீண்டுமொரு சத்தியாகிரகம் நடத்தியிருப்பார். அது அவர் போராடிப் பெற்றுத் தந்த இன்று இருக்கும் சுதந்திர ஜனநாயக அரசாங்கத்திற்கு எதிராக இருந்திருக்கும். ஏனெனில் அவர் மனிதமும் அறமும் தான் நாட்டின் தூண்களாக இருக்க வேண்டுமென்று விரும்பினார்.

Sunday, July 19, 2020

காந்தியின் இறுதி நாட்களுடனான என் பயணம் - ஜூலை 17,1947. நாள் - 198

மிகுந்த வெப்பம் நிறைந்த கோடை காலத்தில் காந்திஜி அதிகாலைக்கும் முன்னரே எழுந்து விடுவார். அதுவும் டெல்லியில் வெய்யில் சுட்டெரிக்கும். காந்தி அவர்கள் அதிகாலை நான்கு மணிக்கே எழுந்து வேலைகளை ஆரம்பித்துவிடுவார்.

முதலில் பிரார்த்தனை. அது முடிந்ததும் மற்ற வேலைகளில் பாதியை சூரிய உதயத்துக்கு முன்னமே முடித்து விடுவார். காந்திஜி வெறும் சுதந்திர போராட்டம், அஹிம்சை, அரசியல் மட்டுமல்லாமல் உடல் சார்ந்தும், மனம் சார்ந்தும் நாம் கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தைப் பற்றியும் எழுதியுள்ளார்.

அவர் தான் பின்பற்றும் ஒவ்வொரு செயலையும் பல முயற்சிகள் செய்து ஆராய்ந்த பின்னரே அவர் அதை பின்பற்றுவார். எதில் தவறு இருந்தாலும் தவறை திருத்திக் கொள்வது அவர் வழக்கம். பின்பற்றும் ஒரு செயல் தவறாக இருந்தால் அதிலிருந்து தயங்காமல் பின்வாங்கி மீண்டும் சரியான பாதையை நோக்கி செல்வதே காந்தியத்தில் எனக்கு மிகவும் பிடித்த ஒன்றாகும்.

அதிகாலை எழுவதை அவர் தொடர்ந்து செய்து வந்தார். பிரார்த்தனை முடிந்தவுடன் எழுத ஆரம்பிப்பார். காந்தி எழுத்து மூலம் மக்களிடம் தொடர்ந்து உரையாடிக்கொண்டே இருந்தார். நாம் எதைப் பற்றி எடுத்தாலும் காந்தி அதைப் பற்றி புத்தகம் எழுதியிருப்பார்.



தனக்கு வரும் கடிதங்களுக்கு தவறாமல் அவரே பதில் எழுதுவார். அத்துனை பெரிய மாமனிதர் ஒவ்வொருவரின் கடிதங்களையும் மதித்து பதில் எழுதுவது அவ்வளவு எளிதல்ல. நம்மை நான்கு பேர் புகழ்ந்துவிட்டாலே தலைக்கணமோ, ஏதோ ஒன்று சிறிதாய் எட்டிப் பார்த்துவிடும். ஒரு புள்ளி அளவாவது அலட்சியம் வந்து விடும். சிறிதளவும் அகச்செருக்கு இல்லாமல் வாழ்ந்தவர் தான் மஹாத்மா.

ஒரு நாடு மட்டுமல்லாமல் உலகம் முழுதும் புகழ் பெற்றவர், என்றும் ஒரே மாதிரி தான் கடைசி வரை நடந்து கொண்டிருக்கிறார். அவரைப் பற்றி தவறாக பேசுபவர்களால் இப்படி ஒன்றை வாழ்வில் யோசிக்க முடியுமா என்ற கேள்வி என்னிடம் தோன்றுகிறது.

காந்தியின் இறுதி நாட்களுடனான என் பயணம் - ஜூலை 16,1947. நாள் - 199

இந்த நாளில் இந்தியாவின் முக்கிய தலைவர்களான ராஜேந்திர பிரசாத், ராககோபாலாச்சாரி, பி.ஜி.கெர், மற்றும் நம் நாட்டில் 300 கோடி செலவு செய்து சிலை வைத்துள்ள சர்தார் வல்லபாய் பட்டேலும் காந்தியை சந்தித்து பேசியிருக்கிறார்கள்.

காந்திஜி காலையும், மாலையும் பிரார்த்தனை கூட்டத்தில் தவறாமல் கலந்துகொள்பவராக இருந்திருக்கிறார். அவருக்கு பிரார்த்தனையில் மிகப்பெரிய நம்பிக்கையும் தீவிரமும் இருந்திருக்கிறது. பிரார்த்தனை என்றும் நமக்கு நம்பிக்கை கொடுக்கக் கூடியது. மாபெரும் செயல் செய்ய நிச்சயம் மிகப்பெரிய நம்பிக்கையும் மன உறுதியும் தேவை. அதை அவர் பிரார்த்தனை மூலமே பெறுகிறார் என்றே தோன்றுகிறது.

இந்த நாளில் அவர் பிரார்த்தனையில் கவிஞர் கபீரின் பாடல்களை பாடினார். அப்பாடல்களில் இவ்வாழ்வில் அழியக்கூடிய உடல் பற்றி பெருமைப் பட ஒன்றுமில்லை என்பது உண்மை. ஆனால் இந்த புற உலகில் எந்த உடலும் நிலைத்திருப்பதில்லை. இறந்த பிறகும் நிலைத்திருக்க நல்ல காரியங்களை இந்த உலகிற்கு செய்ய வேண்டும் என்றே அனைவருக்கும் கூறினார்.

முன்பிருப்பதை விட ஒரு படி மேலே வளமானதாக இந்த உலகை உயர்த்த வேண்டும் என்பதே அவரின் வேண்டுகோளாய் இருந்தது.

இன்றும் காந்தியத்தை பின்பற்றுபவர்களின் செயல்தன்மை அவ்வண்ணமே இருக்கிறது. காந்தியை பின்பற்றுபவர்கள் மிகப்பெரிய மாற்றத்தை மிக எளிமையாக செய்தபடியே உள்ளனர். கோபிச்செட்டிபாளையத்தில் வாழ்ந்து இறந்த காந்தியத்தை பின்பற்றிய லட்ச்சுமண அய்யர் அவரின் வரலாற்றை புத்தகமாக வெளியில் கொண்டுவர அவரைப் பற்றி தகவல்கள் கேட்டிருந்தோம்.

எத்துனையோ மக்கள் அவ்வளவு நினைவுகளை வைத்துள்ளனர். அவர் உடல் தான் அழிந்தது. ஆனால் அவர் வாழ்கிறார். காந்தியின் ஒரு சொல்லுக்காக தலீத் சமூக முன்னேற்றத்திற்காக பாடுபட்டவர். இறந்த பின்னும் அவரால் வாழ்வு பெற்ற சமூகத்தில் வாழ்ந்துகொண்டு தான் இருக்கிறார்.

இப்படி மிகப்பெரிய மனித முன்னேற்றத்திற்காக உழைத்த அந்த மாபெரும் தலைவரை "அவர் ஒரு சுயநலவாதி" என்றே நான் கேட்டிருக்கிறேன். "காந்தி சரியான சுயநலவாதி. அவர் தன் பெயர் தான் எல்லா இடத்திலும் வரவேண்டும் என்று எண்ணுகிறார்" என்று என்னிடமே கூறியிருக்கிறார்கள்.



இப்படி சமூகத்திற்காக வேலை செய்யும், செய்யச் சொல்லும் ஒருவர் எப்படி சுயநலவாதியாக இருந்திருக்க முடியும். அவர் தொடர்ந்து நாட்டிற்காக வேலை செய்வதால் அவரை மக்களே முதன்மை படுத்தியிருக்கிறார்கள்.

ஆனால் இந்த மாதிரி பேச்சுக்களை அவர் பொருட்படுத்தியிருக்க மாட்டார். அகமறிந்து வேலை செய்பவர்கள் அவதூறுகளை கண்டுகொள்வதே இல்லை. பயணித்துக் கொண்டே இருப்பார்கள்.

Friday, July 17, 2020

காந்தியின் இறுதி நாட்களுடனான என் பயணம் - ஜூலை 15,1947. நாள் - 200

இந்த புத்தகத்தில் முதல் நாளான அவரின் கடைசி 200ஆம் நாள் காந்திஜியை பற்றி நான் தெரிந்துகொண்ட முதல் தகவலே என்னை ஆச்சரியப் படுத்தியது. ஆம் இந்த நாளில் அவர் டெல்லியில் துப்புரவு பணியாளர்கள் குடியிருப்பில் தங்கி இருந்திருக்கிறார். ஜூன் 25ஆம் தேதி முதல் அங்கு தங்கியிருக்கிறார்.

சென்ற மாதம் திண்ணைப் பள்ளியில் மாணவர்களுக்கு காந்தியைப் பற்றி கட்டுரை எழுதி வரச் சொல்லியிருந்தேன். எழுதி வந்தவர்கள் அதை படித்துக் காட்டவும் வேண்டும். அதில் ஒரு மாணவன் பத்து பக்கக் கட்டுரை எழுதி வந்து வாசித்துக் காட்டினான்.

நீங்கள் அவரை மகாத்மா என்று சொல்கிறீர்கள், ஆனால் அவர் தான் ஜாதியை ஊக்குவித்தவர் என்று கூறினான். அப்பொழுது அவனிடம் நான் அவர் துப்புரவு பணியாளர்களுடன் தங்கியிருந்ததைப் பற்றிக் கூறி "ஜாதியை ஊக்குவிக்கும் ஒரு மனிதர் எப்படி துப்புரவாளர்களுடன் தங்கியிருந்திருப்பார்?" என்று கேட்டேன்.

அவருக்கு இருந்த செல்வாக்கிற்கு பெரிய பெரிய இடங்களில் தங்கி இருந்திருக்கலாம்.ஆனால் அவர் ஏன் துப்புரவு தொழிலாளர்கள் குடியிருப்பில் தாங்கினார் என்று கேட்டதற்கு அவனிடம் பதில் இல்லை. அவனுக்கு பள்ளியில் யாரோ அப்படி கூறியிருக்கிறார்கள். என்னைப் போலவே அவனும் நம்பியிருக்கிறான்.



அவர் ஜாதி, மதம் பிரிவினைகளுக்கு எதிரானவர் என்பதற்கு இதைவிட எடுத்துக்காட்டாய் வாழ முடியாது என்றே நினைக்கிறேன். காந்திஜி வெறும் வாய் சொல் சொல்பவரல்ல. செயல் மூலமும், வாழ்ந்து காட்டுவதன் மூலமாகவும் தான் அவர் சேவையை கற்றுக் கொடுத்திருக்கிறார்.

ஜாதிகள் இல்லை என்று முழங்கிக்கொண்டு, தாழ்த்தப்பட்ட ஜாதியினர் வீட்டுக்கு சென்று உணவு உண்கிறோம் என்று(பெரிய கடைகளில் இருந்து உணவு கொண்டு சென்று) நாடகம் நடத்தும் இன்றைய வளர்ந்த இருபதாம் நூற்றாண்டு தலைவர்கள் போல் அல்லாமல் அந்த காலத்திலேயே அவர் பாகுபாடின்றி வாழ்ந்தது தான் அவர் நமக்கு கற்றுக்கொடுக்கும் பாடம்.

அவர் அன்றைய பிரார்த்தனையில் மதத்தால் ஏற்படும் பிரிவினைகளை பற்றி பேசியுள்ளார். முதல் குடியரசு தலைவரான ராஜேந்திர பிரசாத் தனது அரசியல் பயிற்சிக்காக காந்திஜியை பார்க்க வந்திருக்கிறார். பெரும் தலைவர்கள் என்று இன்றும் கூறும் அனைவருக்கும் காந்திஜி தான் குருவாக இருந்திருக்கிறார்.

காந்திஜியின் இறுதி 200 நாட்கள்

கடந்த இரண்டு நாட்களாக ஏனோ காந்திஜியின் நினைவும், குறிப்பாக காந்திஜியின் இறுதி 200 நாட்கள் புத்தகமும் நினைவிற்கு அதிகமாக வந்து வந்து சென்றது. புத்தகத்தை ஏனோ எடுத்து புரட்டிப் பார்க்க வேண்டும் என்று உள்ளுணர்வில் தோன்றிக் கொண்டே இருந்தது. அது ஜூலை 15ஆம் தேதிக்காக தான்.

இந்த புத்தகத்தை 2019ல் குக்கூ காட்டுபள்ளி நூலகத்திலிருந்து எடுத்துச் சென்றிருந்தேன். ஒரு மனிதனின் அதுவும் மிகப் பெரிய செயலாற்றிய ஒரு மாபெரும் தலைவரின் கடைசி 200 நாட்கள் அன்றாட வாழ்க்கை எப்படி இருந்தது என்று தெரிந்து கொள்ள மிகப் பெரிய ஆர்வம் இருந்தது.

காந்தியைப் பற்றி அதிகமான எதிர்மறை எண்ணங்களுடன் வளர்ந்த எனக்கு காந்தியத்தில் பெரிய ஈடுபாடு இல்லாமல் இருந்தது. காந்தியைப் பற்றி அறிந்த கொள்ள எந்த முயற்சியும் எடுத்ததில்லை. ஆனால் "இன்றைய காந்திகள்" புத்தகத்தை வாசித்து சாட்சியங்களை அறிந்த பிறகே நான் காந்தியை அறியத் தொடங்கினேன்.

அதன் பிறகு தான் இந்த புத்தகத்தை வாசிக்க வேண்டும் என்று எடுத்து வந்தேன். வாசிக்கத் தொடங்கிய பிறகு தான் அவருடைய கடைசி 200 நாட்கள் பற்றி எனக்கு புரிந்த வகையில் தினமும் எழுத வேண்டும் என்று தோன்றியது. நான் அறிகின்ற காந்தியை என்னை போல் வெறுத்தவர்களும், வெறுப்பவர்களும் அறிய வேண்டும் என்று தோன்றியது.

காந்தியை அறிந்தால் நாம் வெறும் வாய் போராளிகளாகவும், முகநூல் வாட்ஸாப் போராளிகளாகவும் இல்லாமல் உண்மையான மாற்றத்திற்காக செயல்படும் செயல்வீரர்களாக மாற்றம் அடைவோம் என்பதே நான் உணர்ந்தது.

அவருடைய கடைசி 200வது நாள் ஜூலை 15, 1947ல் தொடங்குகிறது. நான் தினமும் அவருடைய நாள் எப்படி இருந்தது, அதில் நான் அடைந்தது, கற்றது, புரிந்தது என்ன என்பதை பகிர வேண்டும் என்று கடந்த வருடம்
நவம்பரில் முடிவு செய்தேன். அதுவும் ஜூலை 15ல் இருந்தே தொடங்க வேண்டும் என்று காத்திருந்தேன்.



இந்த சூழலில் தேதியை மறந்துவிட்டிருக்கிறேன். இதனால் தான் இரண்டு நாட்களாக உள்ளுணர்வு வேலை செய்து எனக்கு அதை நியாபகப் படுத்தியிருக்கிறது. உள்ளுணர்வை கொண்டு செய்யும் எந்த செயலும் நமக்கான செயலாக, நம் ஆன்மாவிற்கான செயலாக இருக்கும். இனி தினமும் காந்தியின் கடைசி 200 நாட்களுடன் நாமும் 200 நாட்கள் பயணிப்போம்.

இன்றைய காந்திகள்

என் முதல் உரை
ஐந்தாம் வகுப்பு படிக்கும்போதிருந்து புத்தகம் வாசிக்கும் பழக்கம் உருவானது. அப்பொழுதெல்லாம் ராஜேஷ்குமார் நாவல்கள், கண்மணி, விகடன், குங்குமம் போன்ற இதழ்கள் வழியாகத் தான் வாசிப்பைத் தொடங்கினேன். பிறகு என் அண்ணனின் வழிகாட்டுதலின் மூலம் நல்ல புத்தகங்களை கண்டடைந்தேன்.
வாசிப்பு என்னை தனித்துக் காட்டியது. புத்தகங்கள் என் வாழ்க்கையை சீராக்கியது என்றே சொல்ல வேண்டும். வேலையில் சேர்ந்த பிறகு மிகப் பெரிய போராளி ஆனேன். ஆம் முகநூல் போராளி. முகநூலில் அதிகம் கத்திக் கொண்டிருந்தேன். பெரிய மாற்றம் வேண்டும் என்று தோன்றியதே தவிர அதை எப்படி கொண்டுவருவது என்று சற்றும் அறியாமலிருந்தேன்.
பள்ளி காலம் தொட்டே காந்தி அனைவருக்கும் அறிமுகமானவர். ஆனால் காலம் செல்லச் செல்ல அவரை பற்றிய அவதூறுகள் தான் என்னை அதிகம் வந்தடைந்தது. அதனால் அவர் மீது பெரும் வெறுப்பும், ஈர்ப்புமற்று அவரை ஒதுக்கியே வைத்திருந்தேன் என்று கூட சொல்லலாம். குக்கூ நண்பர்களை சந்தித்த பிறகு தான் உண்மையான காந்தி பற்றி அறியத் தொடங்கினேன்.
அதன் பிறகு தான் காந்தியை பற்றியும் அவரின் நூல்களையும் வாசிக்க ஆரம்பித்தேன். சொற்களை விட சாட்சியங்கள் தான் அதிகம் பேசும். ஆம் காந்தியை பற்றி எளிதாகவும், அவரின் செயல் விளைவுகளைக் கண்கூடாகவும் அறிய இன்றைய காந்திகள் புத்தகமே எனக்கு கிடைத்த வரம் என்று கூறுவேன். இன்றைய காந்திகள் புத்தகத்தில் வரும் அனைவரும் காந்தியத்தின் சாட்சிகள்.
இப்புத்தகத்தில் வரும் ஒவ்வொருவரின் வாழ்வும், அவர்களால் ஏற்பட்ட சமூக மாற்றத்தையும், அதன் பலனையும் வாசிக்கும்பொழுது நாமே அந்த நபராக மாறிவிடுவதை காணலாம். இவ்வளவு வாழும் சாட்சியங்களை நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார் இப்புத்தகத்தை எழுதிய பாலா அண்ணா. இப்புத்தகம் எனக்குள் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஒவ்வொரு நாளும் ஏற்படுத்துகிறது.
ஆம் இந்த நோயச்ச காலத்தில் தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகள் வைத்து நடத்திக் கொண்டிருக்கையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு என்னால் முடிந்த நேரத்தை செலவிடலாம் என்று தினமும் மாலை 5 மணியிலிருந்து 8 மணி வரை புலியானுர் கிராம குழந்தைகளுடன் உரையாடுகிறேன். காந்தி கூறியது போல நாம் சமூக மாற்றத்தை விரும்பினால் அடித்தட்டு மக்களிடம் சென்று அவர்களுடன் இருந்து வேலை செய்ய வேண்டும் என்பது எவ்வளவு பெரிய உண்மை என்பதை உணர்கிறேன்.
உங்களை மாற்றிய ஒரு புத்தகம் எது என்று கேட்டால் யோசிக்காமல் இப்புத்தகத்தை கூறுவேன். வெறும் முகநூல் போராளியாக மட்டும் இருந்த என்னை, எண்ணத்தை எங்கு எப்படி செயலாக மாற்ற வேண்டும் என்ற தெளிவையும், அறிவையும் கொடுத்தது இப்புத்தகம். தினமும் மாலை 5 மணிக்காக ஏங்கித் தவிக்ககிற மனதையும், அவர்களுக்காக ஓடுகிற சக்தியையும் எனக்கு இன்றைய காந்திகள் புத்தகம் மூலமே கிடைத்தது.