Saturday, August 15, 2020

காந்தியின் இறுதி நாட்களுடனான என் பயணம் - ஆகஸ்டு 12,1947. நாள் - 172

ரத்ததாலும் கண்ணீராலும் நிறைந்து மிகப் பெரிய சோகக் கடலாக காட்சியளித்தது கல்கத்தா. அத்துமீறிய வன்முறைகள் கட்டுக்கடங்காமல் தறிகெட்டு நடந்தேறியது. இவை அனைத்தும் நம்ப முடியாத ஒரு கூட்டு முயற்சிக்கு வழிவகுத்தன. இந்த கூட்டு முயற்சியில் முதல் உறுப்பினர் காந்திஜி. மற்றொருவர் எச்.எஸ்.சுராவர்தி. ஊறிப்போன ஒரு முஸ்லீம் லீகர். இரண்டு தேசக் கோரிக்கைத் தலைவரான முகமது அலி ஜின்னாவின் தீவிரமான சீடர்.

கல்கத்தாவில் வகுப்புவாத நோய் வேகமாக பரவி வந்த நேரத்தில் ஆகஸ்ட் 10 ஆம் தேதி சுராவர்தி உள்ளிட்ட முஸ்லீம் லீக் கட்சியினர் அனைவரும் கராச்சியில் இருந்தனர். பிரிட்டிஷ் அரசாங்கத்தால் அனுமதிக்கப் பட்டு இந்திய பிரிவினையை வைஸ்ராய் மவுண்ட்பேட்டன் வேகமாக செயல்படுத்தினார். பாகிஸ்தானுக்கு ஒரு தனி அரசியல் அமைப்புச் சட்ட அவை அமைக்கப் பட்டிருந்தது. சிந்து மாகாணத்தின் தலைநகரான கராச்சி தான் புதிய முஸ்லீம் தேசத்தின் தாற்காலிகத் தலைநகராகத் தீர்மானிக்கப் பட்டிருந்தது.

இந்தியப் பிரிவினையை எதிர்த்துப் போராடி வந்த காந்திஜிக்கு இது தாங்க முடியாத துயரத்தை அளித்தது. மகிழ்ச்சியும் ஆரவாரமும் பாராட்டுகளும் கொண்ட நிகழ்சசியில் கலந்து கொள்வதற்காகத் தான் சுராவர்தி கராச்சி சென்றிருந்தார். வங்காள மாகாணத்தின் முஸ்லீம் லீக் முதலமைச்சர் என்ற வகையில் கலந்து கொண்டு புதிய உறுப்பினர் பதிவேட்டில் கையெழுத்திட்டார்.

சுராவர்தி காந்திஜிக்கு நேர் எதிரானவர். ஆடைகளில், பழகுவதில், உணவுப் பழக்க வழக்கங்களில், வாழ்க்கை முறையில் என அனைத்திலும் இருவரும் நேர் எதிரானவர்கள். முன்பின் அறியாத ஒரு பரிசோதனை ஏற்பாட்டுக்கான முன்முயற்சியை முதலில் எடுத்தவர் காந்திஜிதான். தானும் சுராவர்தியும் பதட்டம் நிறைந்த கல்கத்தாவில் ஒரே வீட்டில் தங்குவதாகவும் இரண்டு நாள் கழித்து காந்திஜி நவகாளிக்கு புறப்படுவார் என்ற  செய்தியும் கராச்சியில் இருந்த சுராவர்தியை எட்டியது.

இரண்டே நாட்களில் அவசர அவசரமாக சுராவர்தி கல்கத்தாவிற்கு பறந்து வந்தார். ஆசிரமத்திற்கு வந்த சுராவர்தி காந்திஜியிடம் இன்னும் சிறிது காலம் கல்கத்தாவிலேயே தொடர்ந்து தங்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இவ்வாறு கேட்டவரிடம் காந்திஜி "என்னை நவகாளிக்கு செல்லாமல் தடுப்பதற்காகவே அங்கிருந்து விரைந்து வந்தீர்களா? அதுதான் உங்கள் நோக்கமா?" என்று கேள்வி எழுப்பினார். 

இந்த கேள்விக்குப்பின் ஒரு காரணம் இருந்தது. முஸ்லீம் லீகின் திட்டமிட்ட செயல்களால் தான் நவகாளியில் வன்முறை ஏற்பட்டிருந்தது. இந்த முக்கியத் திட்டத்தை செயல் படுத்துவதில் சுராவர்தி முக்கிய பங்காற்றியிருக்கிறார். பாகிஸ்தானில் சேரவிருந்த வங்காள பகுதிகளில் தீ வைப்பது, இந்துக்களை கொல்வது, கற்பழிப்பு, சூறையாடல், கட்டாய மதமாற்றம், இளம் இந்து பெண்களை முஸ்லிம்களுக்கு திருமணம் செய்து வைப்பது போன்ற நடவடிக்கைகள் நடைபெற்று வந்தன.

பிரதமர் சுராவர்தியின் அரசு இதை கண்டும் காணாமலும் ஒதுங்கி வன்முறைக்கு வழிவகுத்தது. இந்த வன்முறை சூழலை கண்டு இந்துக்கள் வீடுகளை விட்டு வெளியேறி விடுவார்கள். இவ்வாறு அவர்கள் வெளியேறிவிட்டால் பாகிஸ்தானுக்காக ஒதுக்கப் பட்ட பகுதிகள் முஸ்லிம்கள் மட்டும் வாழும் தூய்மையான பகுதியாக மாறிவிடும். இதனை மனதில் வைத்து தான் நவகாளியில் இவ்வளவு வன்முறைகள் நடந்தேறியது.

கல்கத்தாவிலேயே தங்கி அங்கு அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்று சுராவர்தி வேண்டினார். இரண்டு விஷயங்களுக்கு பிரதமர் சுராவர்தி ஒப்புக்கொண்டால் அவரது வேண்டுகோளை ஏற்பேன் என்று காந்திஜி கூறினார். முதல் விஷயம் கல்கத்தாவில் அமைதியை நிலைநாட்டுவதற்கு தனது அனைத்து முயற்சிகளுக்கும் அவர் ஒத்துழைக்க வேண்டும். அதே நேரத்தில் நவகாளியில் எந்தவித அசம்பாவிதங்களும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்வதற்கு சுராவர்தியும் மற்ற முக்கிய முஸ்லீம் லீக் தலைவர்களும் முழுமையான உத்திரவாதத்தினை அளிக்க வேண்டும் என்று இரண்டாவது கோரிக்கையை வைத்தார்.

அதில் கலவரம் நிறைந்த கல்கத்தாவின் மையப் பகுதியில் ஒரே குடிசையில் இருவரும் எந்தவித போலீஸ் பாதுகாப்போ மற்ற பாதுகாப்போ இன்றி தங்க வேண்டும் என்பதும் அடக்கம். இவ்வாறு ஒரு தீர்வை, முயற்சியை எடுக்க அந்த மஹாத்மாவால் தான் முடிந்தது. அவரின் தைரியத்திற்கும் அன்பிற்கும் முன்னால் எந்தத் தடையும் விலகிவிடும். 

Friday, August 14, 2020

காந்தியின் இறுதி நாட்களுடனான என் பயணம் - ஆகஸ்டு 11,1947. நாள் - 173

மனிதனின் சமூகம் என்பது தனிநபர்களை உள்ளடக்கியது. அவர்களுக்கு பணிபுரிவதற்காகவே சமூகம் அமைக்கப்பட்டது. ஆனால் அது அதனை உருவாக்கியவனையே அழிக்கக்கூடிய ஒரு தன்மையைப் பெற முடியும். தனிப்பட்ட முறையில் ஒரு நபர் ஒரு செயலை செய்ய வேண்டாம் என்று நினைத்தாலும் சமூகம் செய்யும் நிர்பந்தத்தினால் அதை செய்ய வைக்க முடியும். அப்போது சேவகனாக செயல்பட வேண்டிய சமூகம் தன்னை உருவாக்கிய எஜமானனை விட பலமானதாக மாறிவிடும்.

சுயமாக செயல்படும் சமூகம் நல்லவைகளையே செய்கின்றன. ஆனால் மிகவும் பலம் வாய்ந்த ஒரு சமுதாயமே நியாயம் நேர்மை ஆகியவற்றை கடைபிடிக்காமல் தடம் புரண்டு போய்த் தனது சிறந்த மக்களைக் கூட வெறிபிடித்த மிருகமாய் மாற்றும் போது என்ன செய்வது? இதையெல்லாம் அறிந்து கொண்டதாலேயே காந்திஜி சிறந்த தலைவராய் முடிவெடுக்க முடிந்தது.

நவகாளியில் நடந்தது போலவே கல்கத்தாவிலும் நடக்குமோ என்ற அச்ச உணர்வு அவருக்கு ஏற்பட்டு இருந்தது. கல்கத்தாவில் தங்கியிருந்து பிரிவினைக் கலவரங்கள் நடைபெற்ற இடங்களை காந்திஜி பார்வையிட வேண்டுமென்று முஸ்லீம்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று அவர் செயல் படத் தொடங்கினார். முஸ்லீம் கொள்ளைக்காரர்களால் தங்கள் உயிருக்கும் உடமைக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக இந்து மதப் பிரிவைச் சேர்ந்த சில குழுக்கள் ஆத்திரத்துடன் காந்திஜியிடம் தெரிவித்திருந்தன. இந்தக் கூற்றை காந்திஜியால் நம்ப முடியவில்லை. 

"கல்கத்தாவில் 23 சதவீதம் பேர் முஸ்லீம்கள் என்று அறிகிறேன். அப்படியென்றால் சிறுபான்மை மக்கள் எப்படி பெருபான்மை மக்களை துன்புறுத்த முடியும். அரசாங்கத்தின் ஒத்துழைப்பின் மூலமோ அல்லது திறமையற்ற அரசாங்கத்தாலோ தான் இது நடை பெறுகிறது " என்று நேற்றைய பிரார்த்தனை கூட்டத்தில் பேசினார் காந்திஜி.

இன்றைய தினம் திங்கட்கிழமை. மௌன விரத நாள். வழக்கமாக எழுதும் அளவை விட இன்று அதிகமாகவே அவர் எழுதித் தள்ளினார். கல்கத்தாவில் கலவரம் பாதித்த பகுதிகளைத் தானே நேரில் சென்று பார்த்து வந்தார் காந்திஜி. அவருடன் மேற்கு வங்காள முதல்வர் டாக்டர். பி.சி.கோஷ், மேயர் எஸ்.சி ரே சவுத்ரி, போலீஸ் கமிஷனர் எஸ்.என்.சாட்டர்ஜி, கல்கத்தாவின் முன்னாள் மேயர் எஸ்.முகமது உஸ்மான் ஆகியோரும் சென்றிருந்தனர். 

மாலை 4 மணிக்கு சோடேபூர் ஆசிரமத்திலிருந்து கிளம்பிய அந்த குழு பைக்பாரா, சித்பூர், பெல்காட்சியா, மானிக்டோல், நார்கல்டங்காய் பெலியகட்டா, என்டாளி, டங்ரா மற்றும் ராஜாபஜார்  இடங்களுக்கு சென்றிருந்தனர். பல இடங்களில் வன்முறையின் போது கடப்பாரை கோடாலி பயன்படுத்தி வீடுகளை இடித்து மிஞ்சியிருந்த சுவர்களைத் தான் காண முடிந்தது. சண்டை சச்சரவுகள் அற்ற வீடுகள் கூட வன்முறையால் தீயில் கருகி விட்டிருந்தது.

சில இடங்களில் எந்த இடிபாடுகள் இல்லாமல் இருந்தாலும் அங்கு யாரும் வசிக்கவில்லை. பயத்தால் மக்கள் வெளியேறி இருந்தனர். சிறிது நம்பிக்கை இருக்கும் மக்கள் காந்திஜியை வரவேற்று வாழ்த்தொலிகளை முழங்கினர். மகாத்மா கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது. இன்றைய நாள் மௌனவிரத நாள். அவர் பேச இனி என்ன இருக்கிறது. இது போன்ற மனிதத் தன்மையற்ற செயலைக் கண்ட அவருக்கு கண்களிலும், நெஞ்சிலும் நீர் வடிந்தது.    

மனிதத்தை மனிதன் இழக்கும்போது அதை துணிந்து எதிர்த்து மனிதத்தை நிலைநாட்டுவதே மஹாத்மா. 21 ஆம் நூற்றாண்டிலும் நாம் இந்த மதப் பிரிவினைக்கு எதிராக காந்திஜியுடன் கை கோர்த்து நின்று மனிதத்தை காக்க வேண்டும். அவரின் கைகளை இருக்கமாக பற்றிக் கொண்டு சாதி, மத வன்முறையை அவர் வழியிலேயே மனஉறுதியுடன் எதிர்த்து நின்று மனிதத்தை நிலைநாட்டுவோம்.

காந்தியின் இறுதி நாட்களுடனான என் பயணம் - ஆகஸ்டு 10,1947. நாள் - 174

கல்கத்தா என்றாலே பல உன்னதமான இனிமையான நினைவுகளை கொடுக்கும் இடமாக இருந்தது. ராமகிருஷ்ணரின் பேலூர் மடம், குருதேவ் ரவீந்திரநாத் தாகூரின் கனவுக் கல்விக் கூடமான விஸ்வபாரதி பல்கலைக்கழகம், ஹூக்ளி ஆறு, கபீர் உலவிய நிலம், வங்காள மாகாணம் என்று புகழ்ப் பெற்றிருந்த பாரம்பரியம் கொண்டது என்று பல உயர்ந்த நினைவுகளைத் தான் தன் நினைவில் கொண்டிருந்தார் காந்திஜி.

ஆனால் இன்று  மோசமான பயங்கர தீய சக்திகள் திடீரென்று நாட்டைத் துண்டாடப் புறப்பட்டுவிட்டன. சிறிதும் மனிதமற்று மதவெறி கொண்டு மனிதர்கள் வெறி பிடித்தவர்களாய் செயல்படும் போது இதுவரை கண்டு வந்த உயர்வான கனவுகள் எல்லாம் சுக்குநூறாய் போய்விடுமோ என்ற அச்சம் அவருக்கு ஏற்பட்டது. 

1904 ஆம் ஆண்டு வைஸ்ராய் கர்சன் வங்காளத்தை இந்தியாவிலிருந்து பிரிப்பதற்காக முயற்சித்த பொது அங்கே மிகப் பெரிய தேச பக்தி வெடித்துக் கிளம்பியது. 1905 ஆம் ஆண்டு வங்காளம் இந்தியாவிலிருந்து பிரிக்கப்பட்டது. ஆனாலும் மிகப்பெரிய போராட்டத்தாலும் ஒற்றுமையாலும் 1911ஆம் ஆண்டு மீண்டும் வங்காளம் இந்தியாவில் இணைக்கப்பட்டது. இந்திய சுதந்திரம் அடைய இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் இது மாதிரியான பிரிவினைப் போராட்டங்கள், வன்முறைகள் நிகழ்வதை பாபுஜியால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. 

இன்றைய நாள் பலதரப் பட்ட மக்கள் காந்திஜியை சந்தித்த வண்ணம் இருந்தனர். அவர்களின் முகத்தில் மகிழ்ச்சி என்பதே இல்லை. இங்கு சுற்றியிருக்கும் பகுதிகளில் வசிக்கும் முஸ்லீம்கள் மிகப் பெரிய பாதிப்புக்கு உள்ளாகி இருந்தது காந்திஜிக்கு மிகப் பெரிய வேதனையை அளித்தது.

இதை எப்படி எதிர்கொள்வது என்று காந்திஜி திண்டாடிப் போயிருந்தார். கல்கத்தாவின் முன்னாள் மேயராக இருந்த எஸ்.முகம்மது உஸ்மான் அப்போது கல்கத்தா முஸ்லீம் லீக் கட்சியின் செயலாளராக இருந்தார். அவரைப் பயன்படுத்தி முஸ்லீம்களின் பயத்தைப் போக்க முடியும் என்று எண்ணினார் காந்திஜி. அந்த முஸ்லீம் தலைவர் காந்திஜியை அவர் குழுவுடன் வந்து சந்தித்தார். அவர்களின் கோரிக்கையைக் கேட்ட காந்திஜி அதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எண்ணினார். 

அந்த தலைவர் நம் அமைதித் தூதுவரிடம் நவகாளி பயணத்தை ஒத்தி வைக்க வேண்டினார். இன்னும் இரண்டு நாட்களாவது எங்களுடன் தயவு செய்து தங்குங்கள் என்று அவர்கள் கெஞ்சிக் கேட்டுக் கொண்டனர். நவகாளியில் உள்ள இந்துக்களுக்கு உதவுவதற்கு நீங்கள் செல்கிறீர்கள். அங்கே இருக்கும் இந்துக்களை போல இங்குள்ள முஸ்லீம்களை காப்பாற்றுவதும் உங்கள் கடமை என்று கோரிக்கை வைத்தனர்.

கடவுள் சித்தம் இவ்வாறு இருக்கிறது என்று காந்திஜி சிந்தித்தார். ஆகஸ்ட் 15ஆம் தேதி கிழக்கு வங்கத்தில் இருக்க வேண்டுமென்று அவர் மிகவும் விரும்பினார். ஆனால் "உங்களுடன் கல்கத்தாவில் இருக்க நான் உடன்படுகிறேன்" என்று உஸ்மானிடமும் அவரது குழுவிடமும் தெரிவித்தார். நீங்கள் எனக்கு ஒரு உத்தரவாதத்தை தர வேண்டும். "நவகாளியில் அமைதி நிலவும் என்பதே அந்த உத்தரவாதம். உங்கள் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டு நான் நவகாளிக்கு செல்லாமலிருக்கும் நிலையில் அங்கு நவகாளியில் எந்த அசம்பாவிதம் நடந்தாலும் என் உயிருக்கு உத்தரவாதம் இல்லை." என்று காந்திஜி தெரிவித்தார்.

நாடு சுயாட்சிப் பொறுப்பை ஏற்கும்போது வன்முறை வெறியாட்டங்கள் நிகழ்வது மிகப் பெரிய அவமானமாக இருக்கும் என்று பிரார்த்தனை கூட்டத்தில் கூறினார். ஆகஸ்ட் 15 ஆம் தேதி நவகாளியில் இருப்பதாக எடுத்துக் கொண்ட உறுதிமொழியையும் காப்பாற்ற வேண்டும். அதே நேரத்தில் இவர்களின் கோரிக்கையும் நிறைவேற்ற வேண்டும். அவர் ஒரு தீர்க்கமான முடிவெடுத்தார்.

11 ஆம் தேதி நவகாளிக்கு புறப்பட இருந்த முடிவை மாற்றி 13ஆம் தேதி நவகாளிக்கு புறப்பட தன் பயணத்தை மாற்றிக் கொண்டார் காந்திஜி. மாலை பிரார்த்தனைக்கு பெரும் திரளாக மக்கள் வந்திருந்தனர். அவர்களிடம் "எனது வாழ்நாள் முழுவதும் இந்து முஸ்லீம்  ஒற்றுமைக்காக போராடி வந்திருக்கிறேன். நாடு விடுதலை அடையும்போது இரு பிரிவினர்களும் இப்படி மதம் பிடித்தவர்கள் போல நடந்துகொள்வது வேதனை அளிக்கிறது. இந்த பைத்தியக்காரத் தனத்தை என்னால் சகித்துக் கொண்டு உயிர் வாழ முடியாது. இது தொடர்ந்தால் எதிர்காலம் இருளானதாகத் தான் இருக்கும்" என்றார்.

Thursday, August 13, 2020

காந்தியின் இறுதி நாட்களுடனான என் பயணம் - ஆகஸ்டு 09,1947. நாள் - 175

நேற்றைய தினம் பாட்டனாவில் காந்திஜியை சந்திக்க ஏராளமான மக்கள் வந்திருந்தனர். அவர் மனது முழுவதும் இந்தியா இரண்டாகத் துன்னடாடப்படுவதை நினைத்து கவலையடைந்து கொண்டே இருந்தது. அவர் எவ்வளவு முயற்சித்து அனைவரிடமும் புன்முறுவல் பூத்தாலும் அவரது மனது மீண்டும் மீண்டும் வருந்திக் கொண்டே இருந்தது.

அவர் இந்த பிரிவினையைத் தவிர்க்க எவ்வளவோ போராடி விட்டிருந்தார். அவர் மனது தன் உடைந்த விளையாட்டு பொம்மையை ஒட்டவைக்க முயலும் குழந்தை போல அழுதுகொண்டே இருந்தது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் சென்று வர பாஸ்போர்ட் தேவை இல்லை என்ற நிலை அவருக்கு மகிழ்ச்சியை அளித்தது. மதங்களால் ஆன இரண்டு தனித் தனி நாடாக கருதாமல் ஒரு நாட்டின் இரு பகுதிகளாக மட்டுமே அவரால் பார்க்க முடிந்தது.

மக்கள் சேவை செய்யும் காங்கிரஸ் கட்சி இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் ஒரே அமைப்பாக இருந்து அதன் சேவையை தொடர வேண்டும் என்று எண்ணினார். அப்பொழுதுதான் இரண்டு நாடுகளிலும் இருக்கும்  ஆலயங்கள், வழிபாட்டுத் தலங்கள் போன்றவை பாதுகாப்பாக இருக்க முடியும் என்று அவர் நம்பினார்.

பாட்டனாவில் அவரது பேச்சைக் கேட்க ஏராளமான மக்கள் பிரார்த்தனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். பீகாரை சேர்ந்த பெரும்பான்மை மக்களுக்கு காந்திஜி பின்வருமாறு அறிவுரை கூறினார். அறிவுரை அல்ல எச்சரிக்கை என்றே கூறலாம். "முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையை என்னால் எதற்காகவும் பொறுத்துக்கொள்ள முடியாது. கல்கத்தாவில் நிலைமை  மோசமானதாக இருக்கிறது. அங்கு நான் தங்கியிருக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. என் உயிரைக் கொடுத்துதான் இந்த பிரிவினை வன்முறையை அடக்க முடியும் என்றால் என் உயிரையும் கொடுக்க நான் தயாராக இருக்கிறேன்." என்று குறிப்பிட்டார்.

பீகாரில் வேறு சில இடங்களிலும் நிலச் சுவான்தார்களின் அறமற்ற செயல்களால் விவசாயிகள் மிகப் பெரிய அவல நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளனர் என்று அறிந்த காந்திஜி அது குறித்து "ஜமீன்தார்கள் தாங்களே முன்வந்து தங்களின் நிலவுரிமையைக் கைவிட வேண்டும். தங்களுடைய நிலங்களை தங்கள் பிடியிலேயே வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக அவர்கள் வன்முறையை பயன்படுத்த மாட்டார்கள் என்று எண்ணுகிறேன். அவ்வாறு செய்பவர்களுக்கு தற்காப்பு ஆயுதங்களை அரசு அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். தான் மீண்டும் பீகாருக்கு வருகை புரிய விரும்புவதாகக் கூறினார். 


நல்ல நோக்கங்களை நிறைவேற்ற முயலும்போது நல்ல வழிமுறைகளையும் நடைமுறைகளையும் கடைப்பிடிக்க வேண்டும். சரியான பாதையைக் கடைப்பிடிப்பதைப் பற்றி ஒருவர் உறுதியாக இருக்க முடியும். நாம் தீர்மானித்துள்ள இலக்குகளை எட்டுவதில் முழுமையாகவோ அல்லது பாதியாகவோ வெற்றி பெறலாம். அல்லது இலக்கை எட்டாமலும் போகலாம். ஆனால் அதைப் பற்றி ஒருவர் கவலைப்பட வேண்டியதில்லை. இலக்கை சென்றடைவதற்கு முறையாகவும், மனப்பூரவமாகவும்  முயற்சிப்பது தான் முக்கியம். இதைப் பற்றி தான் ஒருவர் உண்மையில் கவலைப்பட வேண்டும். 

அந்த முயற்சியில் ஈடுபடுவதனால் ஏற்படக்கூடிய திருப்தியுணர்வை வைத்துக் கொண்டு ஒருவர் அந்த முயற்சியின் மதிப்பைத் தீர்மானிக்க வேண்டும். அன்புடைமை, அன்பு காட்டுவது ஆகியவை தன்னளவிலேயே மிகுந்த மதிப்பு வாய்ந்தவை. இதேபோல் குறிப்பிட்ட நோக்கத்துக்காகப் பாடுபடுவதும் முயற்சிப்பதும் கூட மதிக்கத்தக்கவைதான். இறுதியில் அந்த நோக்கத்தில் வென்றாலும் தோற்றாலும் பொருட்படுத்தத் தேவையில்லை. இது தான் மகாத்மாவின் வாழ்க்கைக்கான அவரின் அனுபவக் குறிப்புகள்.

காந்தியின் இறுதி நாட்களுடனான என் பயணம் - ஆகஸ்டு 08,1947. நாள் - 176

லாகூரிலிருந்து பாட்டனாவிற்கு காந்திஜியும் அவரது குழுவும் மூன்றாம் வகுப்பு ரயில் பெட்டியில் பயணம் செய்து கொண்டிருந்தனர். அன்றைய தினம் வறட்சி மிகுந்த வடநாட்டில் மழைகொட்டியது. காந்திஜி இருந்த பெட்டியில் பல இடங்களில் இருந்த கூரையின் ஓட்டைகளால் மழை நீர் உள்ளே புகுந்தது. பெட்டியில் குட்டை போல் மழை நீர் தேங்கி தானும் அவர்களுடன் பயணம் செய்வேன் என்று அடம் பிடித்தது.

குழுவைச் சேர்ந்த ஒருவர் சென்று ரயிலின் கார்டை சந்தித்து புகார் கூறினார். அவரும் பஃத்தியுடன் ஓடிவந்து அவர்களுக்கு வேறொரு பெட்டியை ஏற்பாடு செய்து தருவதாக கூறினார். அதனால் ரெயில் சிறிது கூடுதலான நேரம் நின்றாலும் பரவாயில்லை என்று கூறிய காந்திஜி "எங்களுக்கு புதிய பெட்டி அளித்த பின் இந்தப் பெட்டியை என்ன செய்வீர்கள்" என்று கேட்டார். 

இந்த பெட்டியை மற்ற பயணிகள் பயன்படுத்திக் கொள்ள அனுமதி தருவோம் என்றார். அதற்கு காந்திஜி "மற்ற பயணிகளுக்கு இந்த ஒழுகும் பெட்டி போதும் என்றால் எங்களுக்கும் இந்த ஒழுகும் பெட்டியே போதும்" என்று கூறியது அவரை திகைப்படைய வைத்தது. அந்த அலுவலர் காந்திஜியிடம் தன்னை ஆசிர்வதிக்குமாறு வேண்டினார். அவரிடம் "பயணிகளை அன்புடன் நடத்துங்கள். அவர்களிடம் லஞ்சம் பெறாதீர்கள். ஏழைப் பயணிகளை தொல்லை செய்யாதீர்கள். அதுதான் நீங்கள் செய்யக் கூடிய மிகச் சிறந்த பணியாகும்." என்று ஆசிர்வதித்தார். 

அரை நூற்றாண்டுக்கு முன்னர் இது மாதிரியான ஒரு ரயில் நிலையத்தில் அவரை நிறவெறியால் ரயிலிருந்து வெளியே தூக்கியெறியப்பட்டது தான் இவை அனைத்துக்குமான தொடக்கமாக அமைந்தது. அதன் பிறகு இந்தியாவிலும் தென் ஆப்பிரிக்காவிலும் மிகப் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்தாலும் அதற்காக காந்திஜியும் அவரின் குழுவும் நிறைய துன்பங்களை அனுபவித்துள்ளனர். அவரின் நீண்ட கசப்பான போராட்டங்கள் தான் மிகப் பெரிய மாற்றங்களை மிகக் குறுகிய காலத்தில் ஏற்படுத்தியது.

ஆனால் அவர் வா முகாமில் தங்கியிருந்தவர்கள் அனுபவித்த துன்பங்களை நேரில் கண்டதும் மிகப் பெரிய துயரத்திற்கு உள்ளாகியிருந்தார். குறிப்பிட்ட கால இடைவெளியில் மனித சமூகம் மிருகத்தனத்தை நோக்கு பின்னோக்கிச் செல்வது அவர் நெஞ்சைப் பிழிந்தது. இது போன்று நிகழ்வதை தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியே அவர் சிந்தித்துக் கொண்டிருந்தார். அதற்காக அவர் இளைஞர்களை சரியான வழியில் வளர்த்தெடுப்பதன் மூலம் இந்தியாவின் எதிர்காலத்தை மட்டுமல்ல உலகின் எதிர்காலத்தையும் மாற்ற முடியும் என்று தீவிரமாக நம்பினார்.

மழை நீரின் குளிருக்கு ஓரமாக ஒதுங்கி அமர்ந்து கொண்டு ஹரிஜன் இதழுக்கு கட்டுரை ஒன்றை எழுத ஆரம்பித்தார் மகாத்மா. தேசத்தின் வளர்ச்சியில் மாணவர்கள் பங்கேற்க அடித்தளமாக ஒரு தேசிய மாணவர் மாநாட்டைக் கூட்ட வேண்டும் என்று சிலர் வைத்திருந்த கோரிக்கையைப் பற்றி அவர் தனது கட்டுரையில்  குறிப்பிட்டிருந்தார். 

"மனித குலத்தின் எதிர்காலத்தை உருவாக்குபவர்கள் மாணவர்களே. அவர்களைப் பிரிவினை செய்ய முடியாது. நான் வருத்தத்துடன் ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன். அவர்கள் தாங்களாகவே சிந்திக்க முடியாதவர்களாக இருக்கிறார்கள். அல்லது அவர்களின் தலைவர்கள் அவர்களை படிக்கவிடுவதில்லை. அவ்வாறு அனுமதித்திருந்தால் அவர்கள் நல்ல குடிமக்களாக வளர்ந்திருப்பார்கள். 


அந்நிய அரசாங்கம் ஏற்பட்ட காலத்திலிருந்தே இந்தச் சீரழிவு துவங்கிவிட்டது. நாமும் அந்தத் தவறுகளை சரி செய்ய எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அரசியல் அமைப்புகள் மாணவர்களை வலைபோட்டு பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மாணவர்களும் அதில் சிக்கிக் கொள்கின்றனர்.எனவே ஒரு மாணவர் அமைப்பை உருவாக்குவது என்பது மிகவும் கடினமானது. தனது கடமையிலிருந்து விலகாத ஒரு உணர்வே மாணவர்களுக்குத் தேவை. அதன் பிறகே மாணவர்களை ஒரு அணியில் சேர்ப்பதற்கான வாய்ப்பு உருவாகும். 

நேரடி அரசியலில் ஈடுபடுவதை மாணவர்கள் தவிர்க்க வில்லை என்றால் இது சாத்தியமில்லை. தீர்வு காணப்பட வேண்டிய பல பிரச்சனைகளை ஆய்வு செய்வது மாணவனின் கடமையாகும். தனது படிப்பை முடித்தபிறகு தான் செயல் பட வேண்டிய காலம் வரும்." என்று மாணவர்களின் எதிர்காலம் குறித்து நாம் செயல்பட வேண்டியவை பற்றி காந்திஜி எழுதியிருந்தார். மாணவர்கள் பழமையில் ஊரித் திளைத்து முதியவர்கள் மட்டுமே செயல் பட வேண்டும் என்று எண்ணிக் கொள்ளக் கூடாது என்றும் கூறினார்.

சோம்பேறித்தனத்துக்கும், கெட்ட பழக்கங்களுக்கும் ஆட்பட்டுவிடும் மாணவர்களுக்கு "எளிய வாழ்க்கை முறை, உயர்ந்த சிந்தனை கொண்டவர்களாக மாணவர்கள் இருக்க வேண்டும். அவனது படிப்பிலிருந்து இன்பம் பெறுபவனாக இருக்க வேண்டும். அறிவு பெற்ற நிலையிலிருந்து மேலும் சிறந்த அறிவை நோக்கி முன்னேறுவபவனாக இருக்க வேண்டும்." என்று தன் எண்ணத்தை கூறினார். 

இன்று பாட்னா வந்து சேர்ந்திருந்தார் காந்திஜி. அவர் "இயற்கையான எளிமையான வாழ்க்கையை வாழுங்கள். சிறுபான்மை மக்களின் நலன்களை பாதுகாத்திடுங்கள். கிராமங்களுக்குச் சென்று அங்குள்ள மக்களில் ஒருவராக வாழுங்கள். மதுவிலக்கை அமல் படுத்துங்கள்." என்று பீஹார் கவர்னராக பொறுப்பேற்க இருக்கும் திரு ஜெய்ராம் தாஸ் அவர்களுக்கு எழுதியிருந்தார்.

மாலை பிரார்த்தனையில் "பிரிவினைக்கும், நம்பிக்கையின்மைக்கும் வெறுப்புக்கும் அன்பு ஒன்று தான் மிகச்சசிறந்த பதில்" என்று கூறினார்.

Tuesday, August 11, 2020

காந்தியின் இறுதி நாட்களுடனான என் பயணம் - ஆகஸ்டு 07,1947. நாள் - 177

தனது 77 வயதிலும் ஓய்வு இல்லாமல் மக்களுக்காக பயணித்துக் கொண்டே இருக்கிறார். நேற்றைய தினம் லாகூர் வந்தடைந்த காந்திஜி திருமதி.ராமேஸ்வரி நேரு அவர்களின் வீட்டில் தாங்கினார். அனைவரும் உறங்கும் இரவு வேளையிலும் கூட அவர் மனது தேடுதல் பணிக்கு தயாராகிக் கொண்டே இருக்கிறதே தவிர அவர் சிறிது நேரம் கூடத் தூங்கவில்லை. 

பழமை வாய்ந்த லாகூர் நகர மசூதியின் தொழுகை அழைப்பு ஒலியை எழுப்புவதற்கு முன்னமே காந்திஜி எழுந்து தனது வேலைகளை தொடங்கியிருந்தார். பிரார்த்தனைகளை முடித்துக்கொண்டு கடிதங்களை எழுத ஆரம்பித்தார். அவர் தன் நண்பரான வல்லபாய் படேலுக்கு இரண்டு கடிதங்களை எழுதினார். காந்திஜி மனம் திறந்து உரையாடும் சிறந்த உறவாக இருந்தது படேல் ஆவார். 

ஒரு கடிதத்தில் "வா அகதிகள் முகாமில் இருக்கும் மக்கள் வெளியேற்றப் படக் கூடாது. இந்துக்கள் மற்றும் சீக்கியர்களின் வாழ்க்கை ராவல்பிண்டியிலேயே அமைய வேண்டும். இது தொடர்பாக நீங்கள் பாகிஸ்தான் அரசுக்கு தகவல் அனுப்ப வேண்டும். இன்று மாலை பயணத்தை தொடங்கி ஒரு நாள் பாட்டனாவில் தங்கிவிட்டு பின் கல்கத்தா சென்று அங்கிருந்து நவகாளிக்கு செல்கிறேன். சுசீலா நய்யார் வா முகாமில் தங்கவிட்டு வந்துள்ளேன். மக்கள் மிகுந்த பீதியுடன் காணப்பட்டனர். அதற்கான அவசியமில்லை என்று நினைக்கிறேன்" என்று எழுதியிருந்தார்.

மற்றொரு கடிதத்தில் படேலுக்கு பீகாரை சேர்ந்த முஸ்லீம்களை அதிகாரிகள் துன்பப் படுத்துகிறார்கள் என்ற புகார் வந்துள்ளது. அந்த அதிகாரிகளை விசாரணை செய்து மக்களின் குறைகளை போக்க வேண்டுமென காந்திஜி படேலிடம் வலியுறுத்தி எழுதியிருந்தார்.

இந்திய தேசிய காங்கிரஸின் மூவண்ணக் கொடியில் கை ராட்டையின் சின்னம் வரையப்பட்டிருந்தது. ஆனால் இந்திய தேசியக் கொடி வரையும் குழு ராட்டையை விடுத்து தர்ம சக்கரத்தை வரைந்தது. இந்த புதிய சக்கரம் கை ராட்டையில் உள்ள சக்கரத்தையும் அடையாளப்படுத்துகிறது என்று காந்திஜிக்கு விளக்கம் அளிக்கப் பட்ட போதும் அவர் அதை ஏற்க மறுத்தார். அவர் என்றும் ராட்டையானது தேக ஆரோக்கியமுள்ள ஒவ்வொரு மனிதனும்  தினமும் உண்மையுடன், பக்தியுடன் செய்ய வேண்டிய ஒன்று என்று எண்ணினார்.

இந்திய யூனியனின் கொடியில் கைராட்டை இல்லையென்றால் நான் அதை வணங்க மறுத்துவிடுவேன் என்று லாகூர் காங்கிரஸ் ஊழியர்கள் அவரை சந்தித்த பொழுது கூறினார். "கைராட்டை இல்லாத தேசியக் கொடியை என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. கொடியிலுள்ள சக்கரம் கைராட்டையும் அடையாளப் படுத்துகிறது, வேறு சிலர் அதை சுதர்சன சக்கரம் என்றும் கூறுன்கின்றனர். கைராட்டை என்பது அமைதியான உடல் உழைப்பின் அடையாளம், சுதர்சன சக்கரம் என்பது வன்முறையின் அடையாளம். தீயதை அழித்து நல்லதை செய்யும் என்றாலும் அது வன்முறையைத் தான் முன்னிறுத்துகிறது." என்று அவர் கருதினார்.  

புதிய பாகிஸ்தானின் தேசியக் கொடியப் பற்றியும் காந்திஜி பேசினார். அனைவருக்கும் சமவுரிமைகள் வழங்குவதையும் அந்த நாட்டின் சிறுபான்மை மக்களுக்கு முழுமையான பாதுகாப்பை அளிப்பதையும் உறுதி செய்யும் வகையில் பாகிஸ்தானின் தேசியக் கொடி அமைக்கப் பட்டால் அதை ஏற்றுக் கொண்டு மரியாதை அளிக்கலாம் என்றார். 

லாகூர் பயணம் முடிவுக்கு வந்து அவர் கல்கத்தா மெயில் மூலம் பயணத்தை தொடங்கினார். ரெயில் ஏறும்போது " சோதனையொன்று நம் அனைவரையும் விரைவில் எதிர்கொள்ளக் காத்திருக்கிறது. அதனைச் சந்திக்க நீங்கள் தயாராக வேண்டும். உங்களால் முடிந்தவரை தூய்மைக்கான பயிற்சிகளில் ஈடுபடுங்கள்" என்று கூறினார்.

அமிர்தரஸ் ரயில் நிலையத்தில் வண்டி நின்றபொழுது அவரைக் காண மக்கள் பெரும் ஆர்வம் காட்டினார்கள். ஒரு வாரத்திற்கு முன்பு அதே ரயில் நிலையத்தில் அவருக்கு கருப்புக் கொடிகள் காட்டப்பட்டது. ஆனால் அவர் ஸ்ரீநகரில் ஆற்றிய பணிகளைப் பற்றிய செய்திகள் காந்திஜி வரும் முன்னமே அங்குள்ள மக்களுக்கு வந்தடைந்துள்ளது.

அது அற்புதமான மாற்றத்தை அங்குள்ள மக்களின் மனதில் ஏற்படுத்தியிருந்தது. அவர்கள் கடந்த வாரம் நடந்துகொண்டதிற்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டனர். அவரை வரவேற்று அனைவரும் பெரிதாய் முழக்கங்கள் இட்டனர். சில இளைஞர்கள் ஆர்வமுடன் அவரது கைப்பையை வாங்கிக்கொண்டனர். அதில் நிதி வசூல் செய்து ஹரிஜன் பத்திரிக்கைக்கு அளிக்கவுள்ளதாக கூறினார்கள். 

அவரின் நான்கு நாட்கள் பயணம் சூழ்நிலையையே மாற்றி விட்டது என்று அவர்கள் கேட்டதற்கு "கடந்த காலத்தை மறந்து விடுங்கள். தினமும் தூங்கி எழுந்தவுடன் ஒரு புதிய நாள் துவங்குகிறது. நாம் அனைவரும் இப்பொழுது விழித்துக் கொள்வோம்" என்று கூறி அவரது பயணத்தைத் தொடர்ந்தார் மகாத்மா.

காந்தியின் இறுதி நாட்களுடனான என் பயணம் - ஆகஸ்டு 06,1947. நாள் - 178

நேற்று சிறிதும் ஓய்வின்றி பயணிக்க வேண்டியிருந்தது. ஜம்முவிலிருந்து, பஞ்சாசாகேப், அங்கிருந்து வாவிற்கு, அங்கிருந்து ராவல்பிண்டிக்கு, பின் லாகூருக்கு என பயணம் உடலை அழுத்தியது. அவர் ஒரு துறவியைப் போல மிகுந்த சுயகட்டுப்பாடு, உணவுப் பழக்கம், இயற்கை வைத்திய முறை என்று அனைத்தையும் பின்பற்றினார். அதனால் தான் 50 கிலோ உள்ள அவரது மெலிந்த உடல் அவர் செய்த அனைத்து வேலைகளுக்கும் ஒத்துழைத்து இன்றும் அவரை இயங்கச் செய்கிறது.

அதற்கு அவர் வாழ்க்கை முறையே காரணம். அவரின் ஓய்வு அழிச்சல் அற்ற வேளையில் பாதியை நிறைவேற்றியிருந்தால் கூட அவர்களுக்குக் காந்திஜிக்கு ஏற்பட்ட களைப்பைப் போல் இரண்டு மூன்று மடங்கு அலுப்பும் களைப்பும் ஏற்பட்டிருக்கும்.  அவர் பஞ்சா சாகேப்பிலிருந்து கிளம்பி ராவல் பிண்டி, வா மற்றும் லாகூர்  என செல்லும் இடமெல்லாம் பல ஆயிரக்கணக்கான ஆதரவற்ற ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் அடைந்த துன்பங்களை பார்த்து மனதளவில், உடலளவில் சோர்வடைந்திருந்தார். 

எங்கும் பரவிக் கிடக்கின்ற வகுப்புவாத வன்முறைகளுக்கு ஆளாகி இருந்த மக்கள் அனைவரும் சுக்குநூறாய் உடைந்து போயிருந்தனர். காந்திஜி அவர்களுக்கு நடந்த அனைத்தையும் தனக்கு நடந்தாகவே உணர்ந்து துன்பப்பட்டார். அவர் கண்ட காட்சிகளை அவரால் நம்ப முடியவில்லை. 30 ஆண்டுகளாக இந்து முஸ்லீம் ஒற்றுமை என்ற லட்சியத்துக்காக மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வுடன் உழைத்தவர் காந்திஜி. அவர் ஆற்றி வந்த பணிகள் அனைத்தும் தம் கண்ணெதிரே அழிந்து போனதை பார்க்க நேர்ந்தது. அவர் மீண்டும் மீண்டும் கேட்ட இரக்கமற்ற நிகழ்வுகள் அவரது வாழ்நாள் லட்சியம் தோல்வியடைந்ததை தான் குறிக்கின்றது. அதனை அவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

நன்மை நடந்த நேரத்திலும் மோசமான சூழ்நிலைகளிலும் தடுமாற்றமின்றி சீரான முறையில் இயங்க முயற்சித்தார். என்றாலும் அவரது லட்சியத்தை முழுவதுமாய் அடைய முடியவில்லை. சிறிதளவும் அஞ்சி நடுங்காமல் சாதாரணமான முறையில் எல்லாவற்றையும் அவரால் ஏற்றுக் கொள்ள முடிந்தது. ஆனால் பிறரின் சோகமத்தையும் துன்பத்தையும் பார்த்து அவரால் ரத்தக் கண்ணீர் விடாமல் இருக்க முடியவில்லை.


பஞ்சாசாகேப் நிகழ்வுகள் அவரை நிலைகுலையைச் செய்திருந்தன. வா(wah) எனும் இடத்தில் அகதிகள் முகாமில் 9000 சீக்கியர்களும் இந்துக்களும் தங்கியிருந்தனர். அவர்களின் சோகக் கதைகளை கேட்டறிந்தார். அன்று மாலை பிரார்த்தனை கூட்டத்தில் காந்திஜி பேசினார். "ஆகஸ்ட் 15 ஆம் தேதி நெருங்குவதை நினைத்து இந்துக்களும் சீக்கியர்களும் அச்சப்படத் தேவையில்லை. பாகிஸ்தான் அமைக்கப்படும் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இப்பொழுது முஸ்லீம்கள் சண்டையிடுவதற்கு எந்த காரணமும் இல்லை. இங்குள்ள மாவட்ட ஆணையர் ராவல்பிண்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள அகதிகள் அச்சப்படத் தேவையில்லை என்று கூறியுள்ளார். அதனால் உங்கள் அச்சங்களை தூக்கியெறியுங்கள்" என்று கேட்டுக்கொண்டார்.

தான் நவகாளிக்கு செல்ல வேண்டியிருக்கிறது என்றும் வா-பகுதி மக்களுக்கு தங்கியிருந்து உதவி செய்வதற்காக தனது நம்பிக்கைக்குரிய சகா டாக்டர் சுசீலா நய்யாரை விட்டுச் செல்வதாக காந்திஜி கூறினார். இன்று நடந்த காங்கிரஸ் ஊழியர்கள் கூட்டத்தில் "தனது மிச்ச வாழ்நாளை பாகிஸ்தானில் கழிக்கப் போவதாகவும், அது கிழக்கு வங்காளமாகவோ அல்லது மேற்கு பஞ்சாப் அல்லது வடமேற்கு எல்லை மாகாணமாகவோ இருக்கலாம்." என்று கூறினார்.

"என்னுடைய இதயம் எப்பொழுதும் இங்கே பஞ்சாபில் தான் இருந்து வருகிறது. உங்களுடைய மாகாணத்தை மறந்துவிட்டேன் என்று நினைக்க வேண்டாம். ஆனால் நான் இப்போது இருக்க வேண்டிய இடம் நவகாளி. நான் அங்கு செல்வதால் இறந்தாலும் பரவாயில்லை. அங்கு செல்வேன். அங்கு எனது பனி முடிந்தவுடன் நான் இங்கு மீண்டும் வருவேன் என்று உறுதியளிக்கிறேன்." என்று ஆறுதல் கூறினார். அவர்களுக்கு தைரியத்தையும் அவர்களின் வீரத்தையும் நினைவூட்டினார்.

அவர் வழக்கம் போல் செய்தித்தாள்களை வாசித்தார். பின் கடிதங்களை படித்து அதற்கு பதில் எழுதினார். ஜவஹர்லால் நேருவிற்கு அவர் எழுதிய கடிதத்தில் ஸ்ரீநகர் பிரதமர் கக் எவ்வளவு கெட்ட பெயர் ஈட்டியுள்ளார் என்பதை அவரிடம் வெளிப்படையாக தெரிவித்ததை கூறியிருந்தார். இந்த கடிதத்தை வல்லபாய் பட்டேலிடம் காட்டுமாறும் கேட்டிருந்தார். காஷ்மீர் மஹாராஜா தனது பிரதமரைக் கழட்டி விட நினைப்பதாகவும் காந்திஜி கருதினார். இது குறித்து பட்டேல் ஏதாவது செய்ய வேண்டும் என்றும் "அதன் மூலம் காஷ்மீரை இப்போது கூட பாதுகாக்க முடியும்" என்றும் எழுதியிருந்தார்.

Monday, August 10, 2020

காந்தியின் இறுதி நாட்களுடனான என் பயணம் - ஆகஸ்டு 05,1947. நாள் - 179

அபா மற்றும் மனுகாந்தியின் தோள்களில் கையை வைத்தவாறு பல மணி நேரமாக காத்து நின்று கட்டுக்கடங்காத கூட்டத்திற்கு இடையே மேடையை நோக்கிச் சென்றார் காந்திஜி. ஆனால் அவர் மனது முழுவதும் ஸ்ரீநகரில் பல்வேறு மக்களுடன் நடந்த உரையாடல்களையே சுற்றிச் சுற்றியே வந்தது. காந்திஜியை சந்தித்தவர்கள் பல்வேறு தரப்பட்ட மக்களாய் இருந்தாலும் அவர்கள் வலியுறுத்தியது இரண்டு விஷயங்களைத் தான். 

ஒன்று சுதந்திர போராட்ட வீரரான ஷேக் அப்துல்லாவை விடுதலை செய்வது. மற்றொன்று பிரதமர் ராமச்சந்திர கக் விரைவில் மாற்றப் பட வேண்டும் என்பது. காந்திஜி இது குறித்து தன்னால் எதுவும் செய்ய முடியாது என்றும் தான் ஒரு அரசியல் தூதுவராக இந்த காஷ்மீர் பயணத்தை மேற்கொள்ளவில்லை என்றும் குறிப்பிட்டார். ஆனால் அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் தங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவது அவர்களில் கையில் தான் இருக்கிறது என்றும் மக்களின் குரலையும் சக்தியையும் தாண்டி வேறு எந்த வலுவான சக்தியும் இல்லை என்று கூறினார்.

ஆகஸ்ட் 15 நெருங்குகிற நிலையில் காஷ்மீரின் நிலை என்ன என்பதை தெரிந்து கொள்ள ஜம்மு மக்கள் விரும்பினர். காஷ்மீருக்கு என்ன நிகழும் என்பது காஷ்மீர் மக்களாகிய உங்களை பொறுத்து தான் இருக்கிறது என்று காந்திஜி தெரிவித்தார். ஜம்மு பெரிய அளவில் இந்து மக்களை கொண்டு இருந்தாலும் முஸ்லீம்கள் ஸ்ரீநகரைப் போலவே இங்கும் ஷேக் அப்துல்லா சிறையில் இருப்பது பற்றி கொந்தளிப்பில் இருந்தனர். எங்கள் தலைவர் சிறையில் இருக்கும்போது நாங்கள் என்ன செய்ய முடியும் என்று கேள்வி எழுப்பினர்.


தலைவர் மக்கள் மத்தியில் இல்லையென்றாலும் தன் மக்கள் ஆதரவற்றவர்களாக, நம்பிக்கை இழந்தவர்களாக உணரும் மனப்பான்மை கொண்டவர்களாக மக்களை ஒரு சிறந்த தலைவர் வளர்க்கமாட்டார். தலைவர் தான் முன்னடத்தி செல்பவர். ஆனால் தன்னைப் பின்பற்றுபவர்களின் திறமைமிக்க பிரதிநிதியாகத்தான் அவர் வழிநடத்திச் செல்வார். ஒரு தலைவர் எவ்வளவு மகத்தானவராக இருந்தாலும் அந்த ஒரு மனிதரையே சார்ந்து நிற்கும் போக்கிலிருந்து மக்கள் விலகிச் செல்ல வேண்டும். வலிமைமிக்க தங்களுடைய சொந்த கால்களில் நிற்பதற்குக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறினார் காந்திஜி.

மாபெரும் தலைவர்கள் ஆனாலும் மக்கள் தலைவர்கள் இல்லாமலே அவரின் கொள்கைகளை பின்பற்றவும் தங்கள் உரிமைக்காகவும் தொடர்ந்து போராடவும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்பினார் காந்திஜி. 

அரிஜன் பத்திரிகைக்காக ஒரு கட்டுரையை எழுதினார். விடியும் முன்னமே தானும் தன் பயணக்குழுவும் கிளம்பி ராவல்பிண்டிக்கு பயணத்தைத் தொடங்கினர். சில மணி நேரத்தில் ராவல்பிண்டிக்கு அருகில் உள்ள பஞ்ச சாகேப் என்ற இடத்தைச் சென்றடைந்தனர். சீக்கியர்கள் மிகுந்த பக்தியுணர்வுடன் வழிபாட்டு வந்த ஒரு குருத்வாரா பஞ்சாசாகேபில் அமைந்திருந்தது.

இந்தியாவை பிரிவினை செய்வது என்ற முடிவினால் மிகவும் மோசமான முறையில் பாதிக்கப்பட்ட ஒரு சமூகமாக சீக்கிய சமூகம் ஆக்கப்பட்டிருந்தது. வயது பாராபட்சம் இல்லாமல் அனைத்து வயது சீக்கியர்களும் அந்த கோவிலில் காந்திஜியை தரிசிக்க குழுமியிருந்தனர். காந்திஜிக்கு உரிய மரியாதையுடன் அவர்களின் குருமார்கள் வரவேற்றனர்.

சீக்கியர்களின் கோவில்கள் ஏற்கனவே இரண்டு முறை தாக்கப்பட்டு இருந்தது. தாங்கள் ஒரு தீவில் இருப்பது போலவும் தங்களை சூழ்ந்து வரும் தீமைகளிலிருந்தும், பேரழிவிலிருந்தும் காத்துக் கொள்வதற்கு காந்திஜியின் ஆலோசனையை வேண்டினர். இது போன்று மீண்டும் நிகழாமல் இருக்க அவர்கள் சில கோரிக்கைகளை முன் வைத்தனர். அதில் ஒன்று கிழக்குப் பஞ்சாபின் எல்லைகளை வரையறுத்து அதனை சீக்கியர்கள் வாழ்வதற்கான தனியிடமாக ஒதுக்குவது. அவ்வாறு செய்தால் தாங்கள் நிம்மதியுடன் வாழ்வார்கள் என்று கூறினார்.

அதனை கண்டித்த காந்திஜி இது சரியான கோரிக்கை அல்ல என்று கூறினார். மதமோ, அல்லது வேறு எதுவுமே எந்தவொரு அரசாங்க பதவி வகிப்பதற்கான ஒரு அடிப்படையாக இருக்கக் கூடாது என்றார். தங்களுடைய புனிதத்தலங்களுக்கு ஏற்படும் பிரச்சனை குறித்து காந்திஜி "அவற்றை பாதுகாக்க உங்களுக்கு வெளியில் இருந்து வேறு எவரோ வர வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். உங்கள் எதிர்காலம் பற்றிய அச்சத்தை ஒதுக்கி வையுங்கள். உங்களுடைய நம்பிக்கையை பாதுகாக்க உறுதியுடன் செயல்படுங்கள். நீங்கள் பயந்தபடியே முஸ்லீம்கள் உங்கள் கோவில்களை அழிக்க முயற்சி செய்வது இஸ்லாமிய பாரம்பரியத்திற்கு முரணானது." என்று அவர்களுக்கு நம்பிக்கை வார்த்தைகள் கூறினார்.

காந்திஜி என்றும் மக்களை தங்கள் நம்பிக்கைக்காக போராடச் செய்தார். தலைவன் இல்லாமலும் மக்கள் தங்கள் அற வழியில் முன்னேற்றத்தை நோக்கி செல்ல வேண்டும் என்று நினைத்தார். இன்றும் காந்தியத்தை கடைபிடிப்பவர்கள் காந்திஜி இல்லை என்று வருந்தாமல் தங்கள் சேவையை காந்தியின் வழியில் தொடர்கின்றனர் என்பது தான் அவரின் வெற்றி.

Sunday, August 9, 2020

காந்தியின் இறுதி நாட்களுடனான என் பயணம் - ஆகஸ்டு 04,1947. நாள் - 180

காஷ்மீரில் இருந்து திரும்புகையில் ஜம்முவில் தாங்கினார் காந்திஜி. அவர் தங்கியிருந்த இடத்திலும் அதை சுற்றியும் அவர் பல்வேறு மக்களை, குழுக்களை சென்று சந்தித்து உரையாடி வந்தார். அவரின் நாட்கள் முழுவதும் பயணத்திலேயே அதிகமாக கழிந்தது. ஆனாலும் அவர் எழுதுவதற்கு தனது நேரத்தை தவறாமல் ஒதுக்க முயற்சித்தார்.

ஆனாலும் பதில் எழுத முடியாமல் கடிதங்களும், ஹரிஜன் பத்திரிக்கையும் பாக்கியிருந்தது. நேற்றைய நாள்  தனது ஏராளமான பணிகளுக்கு இடையே ஹைதராபாத்வாசி ஒருவரின் கடிதத்திற்கு பதில் எழுதுவதற்கு தனது நேரத்தை அப்படியே ஒதுக்கி விட்டார். அவர் தனது கடிதத்தில் பின்வருமாறு எழுதியிருந்தார்.

"காந்திஜி உயிருடன் புதைக்கப்படுகிறார். காந்திஜி என்பதன் பொருள் அவரது லட்சியங்கள் ஆகும். நாம் இன்றிருக்கும் இடத்திற்கு அந்த லட்சியங்கள் தான் நம்மை அழைத்து வந்துள்ளன. இவ்வளவு உயரத்திற்கு நாம் ஏறுவதற்குக் காரணமான ஏணியை நாம் உதைத்துத் தள்ளுகிறோம். காந்திஜியின் மிகப் பெரிய சீடர்கள் என்று கருதப்படுபவர்கள் இதனைச் செய்து வருகின்றனர். இந்துமுஸ்லீம் ஒற்றுமை, இந்துஸ்தானியை தேசிய மொழியாக ஆக்குவது, காதி கிராமத்து தொழில்கள் ஆகிய அனைத்துமே மறக்கப்பட்டு விட்டன. இவற்றை பற்றியெல்லாம் இன்னமும் பேசி வருபவர்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள் அல்லது அவர்களே மற்றவர்களை ஏமாற்றி வருகிறார்கள்." இவ்வாறு எழுதியிருந்தார்.

பிரச்சனையை சமாளிப்பதற்கான சிறந்த வழி அதனுடன் நேருக்கு நேர் மோதுவதுதான் என்று காந்திஜி நம்பினார். கடிதத்தில் வந்திருந்ததை 'ஹரிஜன்' ஆங்கில வார இதழிலும் அதன் இந்திப் பதிப்பான சேவக்கிலும் மேற்கோள் காட்டிவிட்டு தனது கருத்துக்களை பின்வருமாறு எழுதினார். "நான் ஏற்கனவே புதைக்கப்பட்டு விட்டேன் என்று நம்பலாமா?"

"மேலே குறிப்பிட்டுள்ள செயல்பாடுகளில் நம்பிக்கையுள்ளவர்கள் தான் எனது சீடர்கள் என்று நான் கருதுகிறேன். இந்தியாவின் கோடிக்கணக்கான கிராம மக்களுக்கு அந்த லட்சியங்களில் நம்பிக்கை இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். இருந்தாலும் அவரது குற்றச்சாட்டுகள் மிகவும் உண்மையானதுதான். காந்திய லட்சியங்களில் ஈடுபாடு மீண்டும் ஏற்பட வேண்டும் என்று அவர் ஆர்வத்துடன் எடுத்துக் கொண்ட முயற்சிகளில் கடும் சோதனைகளை அவர் சந்தித்துள்ளார் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. அச்சுறுத்தும் வண்ணம் கருமேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில் ஒரு சிறிய வெள்ளிக்கீற்றாவது தென்படாதா என்று இறைஞ்சிக் கேட்கும் நிலையில் அவர் இருக்கிறார்."


காந்திஜி மேலும் தொடர்ந்தார். "இந்து முஸ்லீம் ஒற்றுமையைப் பற்றி முஸ்லீம் லீக் கட்சி உறுப்பினர்களிடம் கூட மாற்றம் காணப்படுகிறது. நாம் அனைவரும் சகோதரர்கள் என்று அவர்கள் பேச ஆரம்பித்துள்ளனர். இந்துக்கள்-முஸ்லீம்கள் ஆகிய இரு பிரிவினருமே 'காதி'யை புறக்கணித்து கிராமத் தொழில்களுக்குத் தீங்கு நேர அனுமதிக்க மாட்டார்கள் என்று நாம் நம்புவோமாக. இந்துஸ்தானியை நாம் எப்படிக் கைவிட முடியும்? ஒரு முக்கிய விஷயத்தை கடிதம் எழுதியவர் மறந்துவிட்டார். தீண்டாமையையும் சாதி வேறுபாடுகளையும் அகற்றுவதன் மூலம் இந்துக்கள் தங்களை தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும். இந்துக்களை வெறுக்கும் போக்கைக் கைவிடுவதன் மூலம் முஸ்லீம்கள் தங்களை தூய்மைப் படுத்திக் கொள்ள வேண்டும்."

காந்திஜி ஸ்ரீநகரில் கழித்த கடைசி காலைப் பொழுது இன்று தான். அவரை தினமும் பிரதமர் பண்டிட் கக் சந்தித்து வந்தார். அவரது நேரத்தில் தினம் ஒரு மணி நேரத்தை அவர் எடுத்துக் கொண்டிருந்தார். அவரிடம் பிரியா விடைப் பெற்றுக் கொண்டு பயண ஏற்பாடுகளை விவரித்தார். ஜம்முவை சென்று அங்கு தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 12 மணி நேர பயணத்தை சிறிது ஓய்வுகள் எடுத்து காந்திஜியும் அவரது குழுவும் பயணத்தை தொடர்ந்தார்கள் . 

 சிறிதும் ஓய்வின்றி அவர் தொடர்ந்து கலந்து கொண்ட நிகழ்ச்சிகள், தட்ப வெப்பநிலை போன்றவற்றால் காந்திஜிக்கு ஜலதோஷம் அதிகரித்திருந்தது. இந்நிலையில் அவர் மாலை 5 மணிக்கு ஜம்மு வந்தடைந்தார். அவருடைய வருகைக்காக பெரும் மக்கள் கூட்டம் காத்திருந்தது. 77 வயதிலும் தனது உடல்நிலை எவ்வளவு மோசமாக இருந்தாலும் அதைப் பொருட்படுத்தாது அவர் உரையாடுவதற்காக அமைத்திருந்த மேடையை நோக்கிச் சென்றார்.

Saturday, August 8, 2020

காந்தியின் இறுதி நாட்களுடனான என் பயணம் - ஆகஸ்டு 03,1947. நாள் - 181

ஸ்ரீநகரில் பொதுக்கூட்டங்கள் நடத்த தடை விதிக்கப் பட்டிருந்தது. அதனால் காந்திஜியின் மாலைப் பிரார்த்தனைக்  கூட்டம் நடத்த முடியாமல் இருந்தது. பிரார்த்தனை கூட்டத்தில் கலந்து கொள்ள மக்கள் ஆயிரக்கணக்கானவர்கள் கூடினர். ஆனால் என்றும் சட்டத்தை தீவிரமாக மதிக்கும் காந்திஜி "பொதுப் பிரார்த்தனை நடத்த நான் விரும்புகிறேன். ஆனால் அதிகாரிகள் அனுமதி அளிக்க மறுக்கும்போது அதனை நடத்த நான் விரும்பவில்லை. எனது பிரார்த்தனை வேண்டும் என்று கேட்டு கூட்டம் வலியுறித்தினால் அரசிடம் முறையான அனுமதி பெறுங்கள்" என்று கூறினார்.

பின் அவர் சில அமைப்புகளிடம் "காஷ்மீர் மக்களையும், பேகம் ஷேக் அப்துல்லாவையும் காண்பதற்கு தான் காஷ்மீர் வந்தேன். ஷேக் அப்துல்லா ஒரு அறவழி போராளி. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே சண்டையை மூட்டி  வரவில்லை. பாகிஸ்தான் என்ற தேசம் ஏற்கனவே உருவாக்கப்பட்டு விட்டது. எனவே மேலும் சண்டைக்கான காரணம்  இல்லை." என்று அவர்களின் கேள்விக்கு பதில் அளித்தார்.

மக்களின் வலுவான வேண்டுகோளுக்காக காஷ்மீர் பிரதமர் கக் பிரார்த்தனை கூட்டங்களுக்கு விலக்கு அளித்தார். இதனால் நகரம் திருவிழாப் பூண்டதுபோல் காணப்பட்டது. காஷ்மீரில் காந்திஜியின் முதல் பிரார்த்தனைக் கூட்டம். 20000 மக்கள் கலந்து கொண்ட மிகப்பெரிய கூட்டமாக அது இருந்தது. பிரார்த்தனை கூட்டத்தில் புனித குரானின் செய்யுள் வரிகள் சிலவற்றை பேகம் அப்துல்லா பாடினார். பின் மனுகாந்தியும் டாக்டர்.சுசீலா நய்யாரும் பகவத் கீதையிலிருந்து சில சுலோகங்களை தேர்வு செய்து இனிய குரலில் பாடினார்கள். பார்சி மொழியின் புனித நூலான ஜென்ட் அவஸ்தாவிலிருந்து சில வரிகள் பாடப்பட்டன.

கோடை மழை தொடங்கியதால் காந்திஜிக்கு ஜலதோஷம் பிடித்திருந்தது. இருந்தாலும் அவர் அதிகாலை 3 மணிக்கே எழுந்து அவரது வேலைகளை தொடங்கிவிட்டார் எப்பொழுதும் போல. இன்றைய நாள் பிரதமர் கக் அதிகாலையிலேயே காந்திஜியை சந்திக்க வந்திருந்தார். ஒரு மணி நேர உரையாடலுக்கு பிறகு கக் மஹாராஜாவையும் ராணியையும் அரண்மனையில் சந்திக்க செய்திருந்த ஏற்பாடுகளை விளக்கிக் கூறினார். மகாராஜாவை சந்திப்பதற்கான வாய்ப்பை காந்திஜி பயன்படுத்திக் கொண்டார்.


அன்று மாலை பேகம் அப்துல்லாவை சந்திக்க அவரது இல்லத்திற்குச் சென்றிருந்தார். சிறையில் வாழும் ஷேக் அப்துல்லாவிற்காக அவரது மனைவியிடம் வருத்தம் தெரிவித்தார். அவர் படும் துன்பங்களுக்கும், ஒடுக்கு முறையும் வீண் போகாது என்று ஆறுதல் கூறினார்.  "எந்த அறப் போராட்டக் காரரையும் எந்த காலத்திலும் தோற்கடிக்க முடியாது" என்று உறுதிப்படக் கூறினார் காந்திஜி. 

Friday, August 7, 2020

காந்தியின் இறுதி நாட்களுடனான என் பயணம் - ஆகஸ்டு 02,1947. நாள் - 182

நேற்றைய தினம் மகாத்மாவின் பயணக்குழு கோஹாலாவிலிருந்து ஸ்ரீநகர் நோக்கி தங்கள் பயணத்தை தொடங்கி இருந்தனர். ஸ்ரீநகர் சென்றடைய 35 மைல் பயணம் பாக்கியிருந்த நிலையில் காஷ்மீர் பள்ளத்தாக்கின் இரண்டாவது பெரிய நகரமான பாரமுல்லாவில் ஒரு அமளி ஏற்பட்டது. பாரமுல்லாவிலும் கோஹாலாவைப் போல் வரவேற்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

ஆனால் நிகழ்வை சீர்குலைக்கும் வகையில் காஷ்மீர் முஸ்லீம் மாநாட்டு கட்சி ஊழியர்கள் ஆக்ரோஷமான முறையில் எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பிக் கூச்சலிட்டனர். கலவர முறையில் நடந்து கொண்டனர். கட்டுப்பாடில்லாமல்  வன்முறைக் கும்பல் ஒன்று காந்திஜியை நெருங்க முயற்சி செய்தது. காஷ்மீர் ராஜ்ய போலீஸ் படையச் சேர்ந்தவர்கள் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். மகிழ்ச்சியற்ற காந்திஜிக்கு இது மேலும் வேதனையை அளித்தது.

காந்திஜி கலவரம் செய்பவர்களிடம் சென்று அவர்களின் குறைகள் என்ன என்று கேட்க விரும்பினார். அதிர்ஷ்ட வசமாக அவர் அவ்வாறு செய்ய யாரும் அனுமதிக்கவில்லை. இதைத் தான் அவர் எப்பொழுதும் செய்து வந்தார். தன்னைத் தாக்க வந்தவர்களிடம் உரையாட விரும்பினார் காந்திஜி. பிரிட்டிஷ் அரசை எதிர்த்த பொழுதும் அவர்களுடன் உரையாடிக் கொண்டே இருந்தார். ஆங்கிலேயர்களுக்கு எதிரான ஒவ்வொரு போராட்டத்தைத் தொடங்கும் போதும் அவர் அவர்களிடம் கடிதம் மூலம் தெளிவாக உரையாடினார்.

அவர் எதிரிகளிடம் கூட வெறுப்பை உருவாக்க விரும்பவில்லை. இது எனக்கு மிகவும் நெருக்கமான ஒன்றாக இருக்கிறது. ஆம் நம் எதிரியாய் இருந்தாலும் வெறுப்பை உருவாக்காமல் வெறுப்பில்லாமல் உரையாட வேண்டும். அது பல பிரச்சனைகளை வேரிலேயே தடுத்துவிடும் என்பது எனது புரிதல்.


மாலை 5 மணிக்கு அவரும் குழுவும் ஸ்ரீநகரை அடைந்தவுடன் வரவேற்பு முழக்கங்கள் எழுப்பப்பட்டன. காந்திஜியின் வழக்கமான புன்னகை அவரது முகத்தில் மீண்டும் தோன்றியது. இரு கரங்குவித்து வணக்கம் தெரிவித்தபடியே வந்து கொண்டிருந்தார்.

அவர் கிஷோரிலால் இல்லத்தில் தங்குவதாக ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. மக்கள் அவரைப் பார்க்க வந்த வண்ணம் இருந்தனர். களைப்படைந்த நிலையிலும் அவர் தங்கியிருந்த மாளிகையின் முற்றத்தில் 5 முறைக்கும் மேலாக வந்து காட்சி அளித்தார். மாலை நடை பயிற்சிக்காக 'தால்' ஏரிக்கரைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கே ஏற்பட்ட புத்துணர்ச்சியுடன் உறங்கச் சென்றார். 

இன்றைய நாள் ஆகஸ்ட் 2 ஆம் தேதி காந்திஜி அதிகாலை 3 மணிக்கே எழுந்துவிட்டார். ஏற்கனவே அவர் திட்டமிட்டபடி ஒவ்வொரு வேலைகளாய் ஆரம்பித்தார். முதலில் காஷ்மீர் பிரதமரான திரு கக் அவர்களை சந்தித்தார். இவர் மகாராஜாவின் முழு நம்பிக்கைக்கு உரியவர். பண்டித நேருவின் தீவிர எதிர்ப்பாளர். நேரு கக் அவர்களைப் பற்றி "பண்டிட் கக் என்ன உணர்கிறார், என்ன நினைக்கிறார் என்பதைக் கேட்பதற்கே அலுப்பு ஏற்படுகிறது. அவர் என்ன ஆலோசனை கூறுகிறாரோ அதற்கு நேர் எதிரான ஒன்றைச் செய்வது பொதுவாக சரியாக இருக்கும் என்று உண்மையில் நான் நினைக்கிறேன்." என்று காந்திஜியிடம் கூறியிருந்தார்.

ஆனால் இப்பொழுது காந்திஜி தான் காஷ்மீருக்கு வருகை புரிந்துள்ளார். காந்திஜி எளிதில் சீறிப்பாயும் தன்மையுடைய ஜவஹர்லால் அல்ல. பிரிட்டிஷ் அதிகாரிகள், சிறை அதிகாரிகள், பிரதமர்கள், வைஸ்ராய்கள் போன்ற பலரைப் பலகாலமாக எதிர்கொண்ட அனுபவ முதிர்ச்சி பெற்றவர் காந்தியடிகள். கடுமையாக அவரை எதிர்த்து வந்துள்ள இந்தியர்களான சுபாஷ் சந்திரபோஸ், பி.ஆர். அம்பேத்கார் போன்றவர்களிடம் கிடைத்த அனுபவங்களைக் குறிப்பிட வேண்டியதில்லை. இத்தகைய பக்குவம் வாய்ந்த காந்திஜி காஷ்மீர் பிரதமர் கக் அவர்களுடன் ஒரு மணி நேரத்துக்கு மேலான நீண்ட அமைதியான பொறுமைமிக்க உரையாடலில் ஈடுபட்டார்.

அதன்பின் பல்வேரு முக்கிய மனிதர்களை காந்திஜி தொடர்ந்து சந்தித்துக் கொண்டே இருந்தார். சிறிது ஓய்வுக்குப்பின் மீண்டும் பலருடனான சந்திப்பு தொடர்ந்து கொண்டே இருந்தது. இவ்வாறு நாட்டிற்காகவும், மக்களின் நலனிற்காகவும் ஓடி ஓடி உழைத்துக் கொண்டிருந்தார் அந்த 77 வயது இளைஞர்.

Wednesday, August 5, 2020

காந்தியின் இறுதி நாட்களுடனான என் பயணம் - ஆகஸ்டு 01,1947. நாள் - 183

கோடிக்கணக்கான மக்களின் ஒரே எதிர்பார்ப்பான அந்த நாளுக்கு இன்னும் இரண்டு வாரங்களே இருந்தன. அந்த நாள் நம் இந்தியத் தாய் தன் சுதந்திரக் காற்றை சுவாசிக்க போகிற நாள். ஆகஸ்ட் 15 ஆம் தேதியான வரலாறு நாளில் அவர் இந்தியாவின் தலைநகரில் இருக்க வேண்டுமென பலரும் வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் காந்திஜி அதனை நிராகரித்துவிட்டார். அந்த நாளில் வங்காளத்தில் நவகாளியில் இருக்கப் போவதாக தனக்குள் நினைத்துக் கொண்டார்.

அவர் ஏற்கனவே அங்கு தங்கியிருக்கிறார். அர்த்தமற்ற பிரிவினை வன்முறையினால் பாதிக்கப் பட்டிருந்த கணக்கற்ற மக்களுக்கு ஆறுதல் கூறி பல்வேறு தொண்டுகளை செய்திருக்கிறார். அவர்களின் காயங்களை ஆற்றும் பணியில் தனியொரு மனிதனாக ஈடுபட்டார். பயத்தால் வீடுகளை விட்டு வெளியேறியவர்களை திரும்பி வருவதற்குத் தூண்டுகோலாய்ச் செயல்பட்டார். கொலை செய்தவர்கள், வன்முறையில் ஈடுபட்டவர்கள், கொடுமைகள் செய்தவர்கள் என அனைவரிடமும் உரையாடினார்.


அஹிம்சையை கையிலெடுக்காமல் இருந்திருந்தால் நாம் வன்முறையிலும் சண்டையிலுமே பல உயிர்களை பலி கொடுத்திருப்போம். உள்நாட்டிலும் சரி, ஆங்கிலேயர்களுடனும் சரி அஹிம்சையால் தான் நாம் வென்றிருக்கிறோம். பலர் சுதந்திரம் கிடைத்ததிற்கு வேறு பல காரணங்களை கூறலாம். ஆனால் உயிர் சேதம் மிக மிகக் குறைவாக ஒரு பெரிய ஆதிக்க அரசை எதிர்த்து சுதந்திரம் பெற்றது அஹிம்சையால் மட்டுமே சாத்தியம் என்று உறுதியாக கூற முடியும். 

இந்தியத் துணை கண்டத்தின் வடக்குப் பகுதியில் நவகாளிக்குப் போட்டியான ஒரு இடமாக வடமேற்கு எல்லை மாகாணச் சூழல் உருவாகி வந்தது. ரத்த வெள்ளத்தில் மிதந்த தீக்கொழுந்து விட்டெறியும் கிழக்குப் பகுதி நவகாளி என்றால் அந்த அவமானச் சின்னத்துக்குப் போட்டியாக வடக்குப் பகுதியில் இது உருவாகி இருந்தது. 

காந்திஜி ராவல்பிண்டிக்கு முந்தைய சகாலா ரயில் நிலையத்தில் நேற்றே வந்திறங்கியிருந்தார். அப்போதிலிருந்தே மனிதர்களின் அழுகுரல்கள் அவரை விட்டு விலகவே இல்லை. கலவரங்களால் பாதிக்கப்பட்ட வேறு சில பகுதிகளுக்கும் தன்னை அழைத்துச் செல்லுமாறு காந்திஜி கேட்டுக் கொண்டார். அவர் என்றும் களத்தில் மக்களோடு மக்களாக இருந்து அவர்களுக்கான ஆறுதலை வழங்கியும், தீர்வையும் தேடித் தந்தார்.காஷ்மீர் பயணத்துக்கு செல்லவேண்டி இருந்ததால் அங்கே தங்கியிருக்க முடியவில்லை. நவகாளி சென்று திரும்பிய பிறகு மீண்டும் வரலாம் என்று அவர் நினைத்தார். 

பண்டித நேரு காஷ்மீருக்கு வருவதை விரும்பாத காஷ்மீர் மகாராஜாவின் ஆட்சி காந்திஜியையும் வராமல் தடுக்க தீவிரமாக முயற்சித்தது. மஹாராஜா அரிசிங் மவுண்ட்பேட்டன் பிரபுவிற்கு வெளிப்படையான ஒரு கடிதத்தை எழுதியிருந்தார். பிரபு அதனை காந்திஜிக்கு அனுப்பி வைத்தார். 

அதில் "அனைத்து விதமான கண்ணோட்டங்களின் அடிப்படையில் பார்த்தாலும் காந்திஜி இந்த ஆண்டில் திட்டமிட்டுள்ள காஷ்மீர் பயணத்தை ரத்து செய்ய முடியவில்லை என்றால் இந்த இலையுதிர் காலத்தின் முடிவில்தான் அது நடைபெற வேண்டும். இந்திய சூழல்களில் மகிழ்ச்சிகரமான திருப்பங்கள் ஏற்படும்வரை காந்திஜியோ வேறு எந்த தலைவருமோ காஷ்மீர் பயணம் மேற்கொள்ளக் கூடாது என்பதை நான் எனது ஆலோசனையாக மீண்டும் உறுதியாக வலியுறுத்துவேன்." 

மகாராஜாவின் விருப்பத்திற்கு மாறாக காந்திஜி காஷ்மீரை நெருங்கிக் கொண்டிருந்தார். நீண்ட மலைப்பயணத்திற்கு பிறகு பகல் 10.30 மணிக்கு அவர்கள் காஷ்மீர் ராஜ்யத்தின் எல்லையான கோஹாலாவைச் சென்று சேர்ந்தனர். பிரதமர் திரு கக் அவர்களின் செயலாளர்கள் காந்திஜியையும் அவரின் குழுவையும் வரவேற்றனர். விரும்பாவிட்டாலும் அந்த மாமனிதரை காஷ்மீர் அரசு மிகுந்த மரியாதையுடன் வரவேற்றது.

காந்தியின் இறுதி நாட்களுடனான என் பயணம் - ஜூலை 31,1947. நாள் - 184

காஷ்மீர் பயணத்துக்கு முந்தைய நாளே பிரார்த்தனை கூட்டத்திற்கு வந்தவர்களிடம் பிரியாவிடை பெற்றுக்கொண்டார் நம் தேசத் தந்தை. பல ஆண்டுகளாக நடத்தி வரும் போராட்டங்களுக்கு அவர் எப்பொழுதும் ரயிலில் மூன்றாம் வகுப்புப் பெட்டியில் தான் பயணங்களை மேற்கொண்டு வந்தார். 

தானே நூற்ற நூலில் நெய்த ஆடையே அவர் என்றும் அணிந்திருந்தார். நாட்டின் ஏழை மக்களுக்கு தன் ஆதரவைத் தெரிவிப்பதற்காக அவர் என்றும் கைத்தறி ஆடை அணிவதையும், மூன்றாம் வகுப்பில் பயணம் செய்வதையும் அவர் தொடர்ந்து பின்பற்றி வந்தார். நாட்டின் கோடிக்கணக்கான  ஏழை மக்கள் ரயிலில் பயணம் செய்வதே அரிது. அதிலும் மூன்றாம் வகுப்பைத் தாண்டி பயணம் செய்வது இல்லை. அதனால் தானும் அதையே பின்பற்றினார்.

தற்சார்பு வாழ்வையும், எளிமையையும் அவர் அனைவருக்கும் போதித்தார். அதை முழுவதுமாக பின்பற்றவும் செய்தார். இன்று காந்தி, காந்தியம் என்றாலே தவறான அர்த்தத்தில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. ஆம் காந்தி என்றாலே கதர் ஆடை, கைத்தடி, வயதான தோற்றம், ரூபாய் நோட்டில் முகம் என்று தான் நம் மனதில் பதிய வைக்கப் பட்டுள்ளது. ஆனால் அவரின் கருத்துக்கள், தொலைநோக்குப் பார்வை என அனைத்தும் இந்தியாவின் முன்னேற்றதிற்காக பல நூற்றாண்டுகளுக்கான திட்டமாக இருந்தது. 

இந்திய நாடு முதலாளித்துவ ஜனநாயக நாடாக உருவாகுவதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்து, சுதந்திர இந்தியா அறம் கொண்ட ஜனநாயக நாடாக இருக்க விரும்பினார். முதலாளித்துவ நாடு தேவைக்கு உற்பத்தி செய்யாமல் லாபத்திற்கு உற்பத்தி செய்யும் நாடாக அமையும். அதனால் உற்பத்தியை பெருக்கி நுகர்வை அதிகரிக்கும்போது இயற்கை வளங்கள் அனைத்தும் சூறையாடப்படும் என்று எண்ணினார்.

அதன் விழைவை இன்று நாம் நேரில் காண்கிறோம். தற்சார்பு வாழ்வை காந்திஜி எல்லோரிடமும் முன்வைத்தார். பொருள் சார்ந்த நுகர்வு வாழ்விலிருந்து விடுபட்டு எளிமையாய், நம் மக்கள் உற்பத்தியில் தயாராகும் பொருட்களை பயன்படுத்த அவர் அறிவுறுத்தினார். 

ஜூலை 30 ஆம் தேதி காந்திஜியும் அவரது குழுவினரும் பழைய டெல்லி ரயில் நிலையத்தில் இருந்து லாகூர் செல்லும் புகைவண்டியில் பயணத்தைக் தொடங்கினர். அவரின் அன்றாட பணிகளை ரயிலிலேயே தொடர்ந்து செய்தார். அவரின் பார்வையாளர்களை சந்திக்கும் பணி, நடைப்பயிற்சி போன்றவை இல்லாததால் கூடுதல் கடிதங்களுக்கு பதில் எழுதினார். 

கடுமையான குழப்பங்களுக்கும் கலவரங்களுக்கும் மத்தியிலும் பதட்டமின்றியும் தெளிவான சிந்தனையுடனும் இருப்பது அவரது பழக்கம். வழிவழியாக வந்த அசைக்க முடியாத கடவுள் நம்பிக்கையை காந்திஜி தொடர்ந்து வெளிப்படுத்தி வந்தார். எப்போதும் நல்லதே நடக்கும்  என்ற அவரது அசைக்க முடியாத நம்பிக்கையை அவர் கடிதத்தில் வெளிப்படுத்தி இருந்தார். "நிலைமைகள் எல்லாம் தலைகீழாக உள்ளன. பிரிட்டிஸ்காரர்கள் உள்ளிட்ட நாம் அனைவரும் ஒரு சோதனை காலத்தில் இருக்கிறோம். கடவுள் மகத்தானவர். மனிதன் முடியாதது என்று கருதுவதை கடவுள் சாத்தியமாக்கிக் காட்டுவார். - அன்புடன் பாபு."



வழியில் ரயில் நிற்கும் நிலையங்களில் அவரைக் காண விரும்பிய கூட்டத்திற்கு ஜன்னல் வழியாகக் கைகளை அசைத்து அவர்களுக்கு காட்சி தந்தார். அன்று பகல் பொழுதிலேயே காந்திஜி ராவல்பிண்டியைச் சென்றடைந்தார். மாலையில் பிரார்த்தனை கூட்டம் ஒன்று நடைபெற்றது. அதில் "உண்மையான ஆழமான அன்பின் மூலம் தான் வெறுப்பையும் மனிதாபிமானமற்ற போக்குகளையும் வென்றெடுக்க முடியும்" என்று உறுதியுடன் கூறினார்.

Monday, August 3, 2020

காந்தியின் இறுதி நாட்களுடனான என் பயணம் - ஜூலை 30,1947. நாள் - 185

பனிசூழ்ந்த வெண்மையை ஆடையாய் போர்த்திய மலைகள் சூழ்ந்த காஷ்மீருக்கு காந்திஜி பயணம் இம்முறை உறுதியானது. ஒரு பொதுப்பணியை செய்வதற்காகவே அவர் செல்கிறார். கடவுளுக்கான பணியை இது போன்ற பணிகளிலிருந்து அவரால் வேறுபடுத்திப் பார்க்க முடியாது. கடவுள் சேவையும், மக்கள் சேவையும் ஒன்றே என்று கருதுகிறவர் அவர்.

இதற்கு முன் பலமுறை அவர் காஷ்மீருக்கு செல்ல முடியாதபடி தடைகள் உண்டாயின. ஒருவேளை பயணத் திட்டங்களில் பொதுநல நோக்கம் தவிர பிற காரணங்கள் இருந்திருக்கலாம். அதனால்தான் கடவுள் தான் செல்ல முடியாதபடி  தடுத்திருக்கிறார் என்று எண்ணினார் பாபுஜி. கடவுள் நம்பிக்கையும், அன்றாடப் பணிகளையும் அவர் உறுதியாய் பின்பற்றுபவர். 

தானும் தனது சீடர்களும் செய்யும் எந்தவொரு செயலும் அறம் சார்ந்ததாக இருக்குமெனில் எந்தத் தடையும் அவர்களின் செயலை தடுத்து நிறுத்த முடியாது என்று உறுதியாக நம்பினார் காந்தியடிகள். மாறாக அக் கடமைகளை நிறைவேற்றுவதற்கு தேவையான அனைத்து உதவிகளும் தானாகவே வந்து சேரும் என்று எண்ணினார்.

தன் நண்பருக்கு எழுதிய கடிதத்தில் அவர் "பொதுப் பணியில் ஈடுபடும் ஒரு மனிதனைத் தேடி பணம் வரும். பொதுநலப் பனி எதுவும் பணப் பற்றாக்குறையால் முன்னேறாமல் தடைபட்டது கிடையாது. இந்த உண்மையை விளக்கக்கூடிய பல அனுபவங்கள் எனக்கு உண்டு. சபர்மதி ஆசிரம உதாரணம் உங்களுக்கு நினைவில்லையா? அவசரத் தேவைக்கு பணம் இல்லாமல் நானும் மகன்லாலும் மிகவும் கவலையடைந்த நேரத்தில் திடீரென்று ஒரு கார் வந்து ஆசிரமத்தின் வாசலில் நின்றது. அதிலிருந்து வந்த முன்பின் தெரியாத நபர் ஒரு பெரிய பணக்கட்டை எனது கரங்களில் வைத்தார். கடவுளின் மீது நம்பிக்கை வைத்து தன்னல உணர்வின்றி நமது பணியை நாம் தொடர்ந்து செய்தால் நம் வேலைகள் என்றும் நின்று போகாது." என்று எழுதினார். 



ஆம் எவ்வளவு நெருக்கடிகள் இருந்தாலும் பொது சேவையில் ஈடுபடும் பொழுது நமக்கு உதவிகள் வந்து சேருவதை நானே கண்கூட பார்த்திருக்கிறேன். சுயநலமற்ற செயலை நாம் எண்ணும்பொழுதோ செய்யும்பொழுதோ இயற்கையும் கடவுளும் நமக்கு தேவையானவற்றை ஏதோவொரு வகையில் கொண்டு வந்து சேர்த்துவிடும். இதை காந்திஜி உணர்ந்ததைப் போல் நானும் உணர்ந்திருக்கிறேன்.

கடவுள் மீது அசைக்க முடியாத பற்று கொண்டவர் காந்திஜி. பலரும் கூட்டாக சேர்ந்து ஒரு குழுவாக ஒன்றுபட்டு இயங்க வேண்டும் எனும் கோட்பாட்டில் ஆழமான நம்பிக்கை கொண்டிருந்தார் காந்திஜி. ஒரு குழுவாக இயங்கும்போது ஒருவரால் ஒத்துப் போக முடியவில்லை என்றால் அந்த குழுவிலிருந்து அவர் ஒதுங்கி விடுவது நல்லது என்று அவர் எண்ணினார். 

ஒருவர் தாம் நினைப்பது சரியானது என்று உறுதியாக நம்பினால் அந்த எண்ணத்தை அவரது மனசாட்சி ஏற்றுக் கொண்டால் அவர் குழுவிலிருந்து விலகி தனியாக செயல்பட வேண்டுமேயன்றி பெரும்பான்மையினரின் கருத்தை எதிர்ப்பதற்கும் தனது கருத்துக்களை மற்றவர் மீது திணிப்பதற்கும் முயலக் கூடாது என்று அவர் கருதினார்.  

இந்த எண்ணத்தை தனது பேச்சிலும் செயலிலும் மீண்டும் மீண்டும் வெளிப்படுத்தி வந்தார். தனது சடலத்தின் மீது தான் இந்தியாவை துண்டாடும் செயல் நடைபெறும் என்று கூறியவர் அவர். ஆனால் பெரும்பாலான செயல்மட்டத் தலைவர்கள் நாட்டைப் பிரித்துப் பாகிஸ்தானை அமைப்பது என்ற பிரிட்டிஷாரின் யோசனையை ஏற்றுக் கொண்டு விட்டனர். இந்திய சுதந்திரத்தை விரைவுபடுத்த இது அவசியம் என்று அவர்கள் கருதினர். இந்த நிலையில் அவர் தனது எதிர்ப்பைக் கைவிட்டு அவர்களின் முடிவுக்கு கட்டுப்பட்டார்.

ஆனால் அந்த முடிவால் அவர் மிகவும் வருத்தப்பட்டார். அதன் மோசமான விளைவுகளை பற்றி அவர் அச்சம் கொண்டார்.

இன்று நாம் நம் மிகப் பெரிய எதிரியாக பாகிஸ்தானை பார்க்கும் அளவுக்கு நம் மனதில் வெறுப்பை ஊற்றி அரசியல் செய்கிறார்கள். ஆனால் அந்த நாடு நம் சகோதர நாடு என்பதை நாம் மறந்துவிட்டோம். நாட்டின் முன்னேற்றத்தைப் பற்றி யோசிக்காமல் நாம் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறோம். இதனால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை, வளர்ச்சியும் இல்லை. வன்முறையை வன்முறையால் வெல்ல ஒரு போதும் முடியாது.

Sunday, August 2, 2020

காந்தியின் இறுதி நாட்களுடனான என் பயணம் - ஜூலை 29,1947. நாள் - 186

ஏற்கனவே பலமுறை அழைப்புகள் வந்தும் ஏதாவது ஒரு காரணத்தால் அதை ஏற்று செல்ல முடியாத நிலையில் காந்திஜி காஷ்மீருக்கு இம்முறை கட்டாயமாக செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது. பல ஆண்டுகளுக்கு முன் 1915இல் தென்னாபிரிக்காவில் இருந்து இந்தியா திரும்பியிருந்த நேரம் அரித்துவாருக்கு புனித பயணம் மேற்கொண்டிருந்தார். அங்கு ஸ்ரீநகரிலிருந்து வந்திருந்த காஷ்மீர் மகாராஜாவை சந்தித்தார் பாபுஜி.

அவர் பாபுஜி தனது ராஜ்யத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். ஆனால் காந்திஜியால் அந்த அழைப்பை ஏற்க முடியவில்லை. அதன் பிறகு 1935 ஆம் ஆண்டில் அவரை மீண்டுமொரு முறை அழைத்தது காஷ்மீர். அவர் அப்படாபாத்தில் காந்திஜி கான் அப்துல் கஃபார்கான் மற்றும் அவரது சகோதரர் டாக்டர் கான் சாகிப் ஆகியவர்களுடன் தங்கி இருந்தார். அந்த முறையும் அவர் பயணம் ரத்தானது.

இன்று துப்புரவாளர் குடியிருப்பில் பிரார்த்தனை கூட்டத்தில் இதனை நினைவுபடுத்தி இப்பொழுது ஒரு மாதம் முன்னரே காஷ்மீருக்கு ஒரு குறுகிய பயணம் மேற்கொள்ள காந்திஜி தயாராய் இருந்தார். மவுண்ட்பேட்டன் பிரபுவின் ஒப்புதலுடன் செல்ல விரும்பினார். ஆனால் வைஸ்ராய் காந்திஜியின் பயணத்தை ஒத்தி வைக்குமாறு கேட்டுக் கொண்டார்.

அதன் பின் இப்பொழுது காந்திஜி செல்வதா, நேரு செல்வதா என்று முடிவு செய்யப்படாமல் இருந்தது. ஆகஸ்ட் 15ஆம் தேதிக்கு சில நாட்களே உள்ள நிலையில் சுதந்திர இந்தியாவின் பிரதமராக பொறுப்பேற்க இருப்பவரை அனுப்ப இயலாது என்று வைஸ்ராய் நினைத்தார். காஷ்மீர் மக்களை கைவிட்டு விடவில்லை என்று மக்கள் பணி செய்பவர்களுக்கு உறுதி அளிக்கவே நேரு அங்கு செல்ல விரும்பினார்.



அன்றைய தலைவர்கள் இந்த நாட்டிற்காக செய்யும் ஒவ்வொரு செயலையும் மிகுந்த பொறுப்புணர்வுடன் செய்துள்ளனர். இல்லையென்றால் தரிசாய் விட்டுச்சென்ற நிலம் இன்று விளையும் பூமியாய் மாறியிருக்காது. புகார்கள் இல்லாமல் ஒற்றுமையுடன் அவர்கள் இந்த நாட்டை கட்டமைத்து உள்ளனர். எந்தவொரு மக்களையும் கைவிடாமல் சுதந்திர ஜனநாயக நாடாக உருவாக்கி பசி, பஞ்சம், இன மத மொழி பாகுபாடின்றி உருவாக அனைவரும் பாடுபட்டனர். ஓய்வு ஒழிச்சல் இன்றி ஓடிக் கொண்டே இருந்தனர் எனலாம்.

காஷ்மீருக்கு மூன்று நாள் பயணம் மேற்கொள்ள காந்திஜி திட்டமிட்டிருந்தார். பயணத்தை முடித்து ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் நவகாளிக்கு சென்றுவிட அவர் விரும்பினார். தான் செல்வதும் செய்வதும், தனிப்பட்ட முறையிலும் அரசியல் ரீதியிலும் சரியானதாக இருக்க வேண்டும் என்பதில் காந்திஜி கறாராக இருந்தார்.

ராவல்பிண்டிக்கு அவர் மேற்கொள்ளவிருந்த ரெயில் பயணத்தின் போதும், அங்கிருந்து காஷ்மீருக்கு பயணம் செல்லும்போதும் மக்கள் அவருக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஆரவாரமற்ற அமைதியான பயணம் செய்ய தான் விரும்புவதாக அறிவித்தார்.

இது சோற்றுக்கும் துணிக்கும் கூட பஞ்சம் ஏற்பட்டுள்ள மோசமான காலம். மிகப்பெரும் சுமையை நாட்டின் சிறந்த தலைவர்கள் எதிர்கொண்டு வருகின்ற காலம் . கடவுளின் அருள் இல்லை என்றால் உறுதியான நெஞ்சம் கொண்ட அந்த சிறந்த தலைவர்கள் கூட உடைந்து நொறுங்கி போவார்கள் என்றார்.

அன்றைய தலைவர்கள் மீது நாம் சுலபமாக சேற்றைவாரி இன்று இறைத்துவிடுகிறோம். ஆனால் ஒவ்வொருவரின் பணியும் மகாத்தானதாக இருந்திருக்கிறது. ஒவ்வொருவரும் சுயநலமின்றி பாடுபட்டுள்ளார்கள். இன்றைய அரசியல் காரணங்களுக்காக அம் மாபெறும் தலைவர்களை தூற்றுவதை போல் தேச துரோகம் எதுவும் இல்லை என்றே தோன்றுகிறது.

Saturday, August 1, 2020

காந்தியின் இறுதி நாட்களுடனான என் பயணம் - ஜூலை 28,1947. நாள் - 187

இன்றைய நாள் மவுனத்திற்கான நாள். ஆம் வாரத்தில் ஒரு நாள் காந்திஜி மவுனத்தை கடைபிடிப்பார். அவர் அந்நாள் முழுவதும் யாருடனும் உரையாட மாட்டார். ஓர் உறுதியான முறையான கட்டுப்பாட்டுக்குத் தன்னை உட்படுத்திக் கொள்வதற்காக அவர் வகுத்திருந்த பல நடவடிக்கைகளில் ஒன்று தான் வாரம் ஒருநாள் மவுனத்தை கடைபிடிப்பது. அதற்காக அவர் திங்கட்கிழமையை தேர்ந்தேடுத்திருந்தார்.

ஒரு மனிதன் தன்னை மிகப்பெரிய செயலுக்கு உட்படுத்துகையில் அதற்கு எல்லா வகையிலும் தன்னை தயாரித்துக் கொள்ள வேண்டும் என்பதை நான் இங்கே புரிந்துகொள்கிறேன். பல நாள் சிந்தித்து இருக்கிறேன் இவர் எவ்வாறு இப்படி பலமாக போராடுகிறார் என்று. தன் முடிவில் பின்வாங்காமல் ஒரு மிகப் பெரிய ஆதிக்க அரசுக்கு எதிராக சிறிதும் சஞ்சலமின்றி திடமாக எப்படி போராட முடிகிறது என்று தோன்றிக் கொண்டே இருந்தது.

ஒரு நாள் உண்ணா விரதம் கூட நமக்கு ஆயிரம் முறை உணவை கண்முன்னே கொண்டுவந்து நிறுத்துகிறது. ஆனால் இவர் எப்படி சிறிதும் சஞ்சலமின்றி ஒவ்வொரு உண்ணாவிரத போராட்டங்களையும், மற்ற போராட்டங்களையும் செய்தார் என்ற என் கேள்விக்கு இன்று தான் பதில் கிடைத்தது. அவர் தன்னை எல்லா வகையிலும் தயார் படுத்திக் கொண்டே இருந்திருக்கிறார். தன்னை கடுமையாக்கிக் கொண்டே வந்திருக்கிறார்.

இன்றைய நாள் தன்னை சந்திக்க வந்தவர்களிடம் எதுவும் உரையாட முடியாமல் ஆனால் அனைவருக்கும் தன் எழுத்து மூலம்  உரையாடினார். இவ்வாறு மவுனம் இருக்கும் சமயத்தில் அவர் மற்றவர்களின் உரையாடல்களை நல்ல முறையில் கூடுதல் கவனமாக கேட்பார். அவ்வாறு கவனிப்பதன் மூல தன்னுடைய பதில்களை முழுமையாக மனதில் வடிவமைத்துக் கொண்டு உரிய விளக்கங்களை அளிக்க முடியும்.

காஷ்மீருக்கு செல்லலாமா வேண்டாமா என்று அவர் முடிவெடுக்காமல் புதிராய் இருந்து வந்தது. இந்நிலையில் அவர் மவுண்ட்பேட்டன் பிரபுவிற்கு கடிதம் எழுதுகிறார். அதில் தான் காஷ்மீர் செல்ல சில சிக்கல்கள் இருப்பதால் தானே செல்ல முடிவெடுத்துள்ளதாக நேற்றிரவு நேரு கூறியிருக்கிறார் எனவும் அதனால் தான் இப்பொழுது பீஹாருக்கும், நவகாளிக்கும் செல்ல எந்த தடையும் இல்லை என்றும் அங்கு செல்வதற்கு இரண்டு நாட்கள் முன் பஞ்சாபிற்கு செல்வேன் மற்றும் நீங்கள் தன்னை சந்திக்க விரும்புகிறீர்கள் என்பது தொடர்ந்தால் நாளை சந்திக்கலாம் என்றும் கடிதம் எழுதினார்.

லார்ட் மவுண்ட் பேட்டனுடன் காந்திஜி


அதற்கு மவுண்ட் பேட்டன் பிரபு  உடனடியாக பதில் எழுதியிருந்தார். "இந்தியாவைச் சேர்ந்த எந்த அரசியல் தலைவர்களும் காஷ்மீருக்கு வருவதை தான் விரும்பவில்லை என்று காஷ்மீர் பிரதமரான  திரு.கக் தெரிவித்ததாக அறிகிறேன். அவர் நேரு வருவதை விரும்பாமல் தான் இவ்வாறு கூறியிருக்கிறார். பண்டித நேரு காஷ்மீருக்குள் வந்தால் வகுப்புவாத வன்முறை பஞ்சாபின் எல்லை வழியாக காஷ்மீருக்குள் பரவிவிடும் என்று காஷ்மீர் நிர்வாகம் அஞ்சுகிறது. அதனால் நேருவிற்கு பதிலாக காந்திஜியே வர வேண்டும்" என்று எழுதியிருந்தார்.

இதனால் என்ன செய்வதென்று காந்திஜி குழம்பி இருந்தார். அவர் படேலிடம் என்ன செய்வது. நான் குழம்பியிருக்கிறேன் என்று வெளிப்படையாக முடிவெடுக்கும் உதவியை கோரினார். அகங்காரம் இல்லாமல் உதவி கேட்பது செயல் மனிதர்களின் மனம்.

இந்தியாவைப் பிரிப்பது. பாகிஸ்தானை உருவாக்குவது ஆகியவை காந்திஜியின் எண்ணத்துக்கு மாறாக "நம் தலைவர்கள்" எடுத்த முடிவாகும். இதைப் பற்றி அவர் சுசீலா பாய்க்கு எழுதிய கடிதத்தில் "பாகிஸ்தான் பற்றிய முடிவுகள் உண்மையில் தவறானது தான். ஆனால் யாருக்கு எதிராக நான் போராடுவது? என்ன நோக்கத்திற்காக போராடுவது?" என்று காந்திஜி கேள்வி எழுப்பியிருந்தார்.

காந்தி தான் பாகிஸ்தானை பிரித்துக் கொடுத்தார் என்று சிறுவயதிலேயே எனக்கு பொய்தரவுகள் தரப்பட்டு அவர் மீது வெறுப்பை ஊற்றியிருந்தார்கள். ஆனால் அவருக்கு பிரிவினையில் சிறிதும் விருப்பம் இல்லாமல் இருந்திருக்கிறது. ஏன் அவர் மீது நமக்கு வெறுப்பு வரவேண்டும் என்று விரும்புகிறார்கள் என்று சிந்துத்துப் பார்த்தாலே காந்தியடிகளின் செயல் புரிந்துவிடும்.