நேற்றைய தினம் பாட்டனாவில் காந்திஜியை சந்திக்க ஏராளமான மக்கள் வந்திருந்தனர். அவர் மனது முழுவதும் இந்தியா இரண்டாகத் துன்னடாடப்படுவதை நினைத்து கவலையடைந்து கொண்டே இருந்தது. அவர் எவ்வளவு முயற்சித்து அனைவரிடமும் புன்முறுவல் பூத்தாலும் அவரது மனது மீண்டும் மீண்டும் வருந்திக் கொண்டே இருந்தது.
அவர் இந்த பிரிவினையைத் தவிர்க்க எவ்வளவோ போராடி விட்டிருந்தார். அவர் மனது தன் உடைந்த விளையாட்டு பொம்மையை ஒட்டவைக்க முயலும் குழந்தை போல அழுதுகொண்டே இருந்தது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் சென்று வர பாஸ்போர்ட் தேவை இல்லை என்ற நிலை அவருக்கு மகிழ்ச்சியை அளித்தது. மதங்களால் ஆன இரண்டு தனித் தனி நாடாக கருதாமல் ஒரு நாட்டின் இரு பகுதிகளாக மட்டுமே அவரால் பார்க்க முடிந்தது.
மக்கள் சேவை செய்யும் காங்கிரஸ் கட்சி இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் ஒரே அமைப்பாக இருந்து அதன் சேவையை தொடர வேண்டும் என்று எண்ணினார். அப்பொழுதுதான் இரண்டு நாடுகளிலும் இருக்கும் ஆலயங்கள், வழிபாட்டுத் தலங்கள் போன்றவை பாதுகாப்பாக இருக்க முடியும் என்று அவர் நம்பினார்.
பாட்டனாவில் அவரது பேச்சைக் கேட்க ஏராளமான மக்கள் பிரார்த்தனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். பீகாரை சேர்ந்த பெரும்பான்மை மக்களுக்கு காந்திஜி பின்வருமாறு அறிவுரை கூறினார். அறிவுரை அல்ல எச்சரிக்கை என்றே கூறலாம். "முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையை என்னால் எதற்காகவும் பொறுத்துக்கொள்ள முடியாது. கல்கத்தாவில் நிலைமை மோசமானதாக இருக்கிறது. அங்கு நான் தங்கியிருக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. என் உயிரைக் கொடுத்துதான் இந்த பிரிவினை வன்முறையை அடக்க முடியும் என்றால் என் உயிரையும் கொடுக்க நான் தயாராக இருக்கிறேன்." என்று குறிப்பிட்டார்.
பீகாரில் வேறு சில இடங்களிலும் நிலச் சுவான்தார்களின் அறமற்ற செயல்களால் விவசாயிகள் மிகப் பெரிய அவல நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளனர் என்று அறிந்த காந்திஜி அது குறித்து "ஜமீன்தார்கள் தாங்களே முன்வந்து தங்களின் நிலவுரிமையைக் கைவிட வேண்டும். தங்களுடைய நிலங்களை தங்கள் பிடியிலேயே வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக அவர்கள் வன்முறையை பயன்படுத்த மாட்டார்கள் என்று எண்ணுகிறேன். அவ்வாறு செய்பவர்களுக்கு தற்காப்பு ஆயுதங்களை அரசு அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். தான் மீண்டும் பீகாருக்கு வருகை புரிய விரும்புவதாகக் கூறினார்.
நல்ல நோக்கங்களை நிறைவேற்ற முயலும்போது நல்ல வழிமுறைகளையும் நடைமுறைகளையும் கடைப்பிடிக்க வேண்டும். சரியான பாதையைக் கடைப்பிடிப்பதைப் பற்றி ஒருவர் உறுதியாக இருக்க முடியும். நாம் தீர்மானித்துள்ள இலக்குகளை எட்டுவதில் முழுமையாகவோ அல்லது பாதியாகவோ வெற்றி பெறலாம். அல்லது இலக்கை எட்டாமலும் போகலாம். ஆனால் அதைப் பற்றி ஒருவர் கவலைப்பட வேண்டியதில்லை. இலக்கை சென்றடைவதற்கு முறையாகவும், மனப்பூரவமாகவும் முயற்சிப்பது தான் முக்கியம். இதைப் பற்றி தான் ஒருவர் உண்மையில் கவலைப்பட வேண்டும்.
அந்த முயற்சியில் ஈடுபடுவதனால் ஏற்படக்கூடிய திருப்தியுணர்வை வைத்துக் கொண்டு ஒருவர் அந்த முயற்சியின் மதிப்பைத் தீர்மானிக்க வேண்டும். அன்புடைமை, அன்பு காட்டுவது ஆகியவை தன்னளவிலேயே மிகுந்த மதிப்பு வாய்ந்தவை. இதேபோல் குறிப்பிட்ட நோக்கத்துக்காகப் பாடுபடுவதும் முயற்சிப்பதும் கூட மதிக்கத்தக்கவைதான். இறுதியில் அந்த நோக்கத்தில் வென்றாலும் தோற்றாலும் பொருட்படுத்தத் தேவையில்லை. இது தான் மகாத்மாவின் வாழ்க்கைக்கான அவரின் அனுபவக் குறிப்புகள்.
No comments:
Post a Comment