மனிதனின் சமூகம் என்பது தனிநபர்களை உள்ளடக்கியது. அவர்களுக்கு பணிபுரிவதற்காகவே சமூகம் அமைக்கப்பட்டது. ஆனால் அது அதனை உருவாக்கியவனையே அழிக்கக்கூடிய ஒரு தன்மையைப் பெற முடியும். தனிப்பட்ட முறையில் ஒரு நபர் ஒரு செயலை செய்ய வேண்டாம் என்று நினைத்தாலும் சமூகம் செய்யும் நிர்பந்தத்தினால் அதை செய்ய வைக்க முடியும். அப்போது சேவகனாக செயல்பட வேண்டிய சமூகம் தன்னை உருவாக்கிய எஜமானனை விட பலமானதாக மாறிவிடும்.
சுயமாக செயல்படும் சமூகம் நல்லவைகளையே செய்கின்றன. ஆனால் மிகவும் பலம் வாய்ந்த ஒரு சமுதாயமே நியாயம் நேர்மை ஆகியவற்றை கடைபிடிக்காமல் தடம் புரண்டு போய்த் தனது சிறந்த மக்களைக் கூட வெறிபிடித்த மிருகமாய் மாற்றும் போது என்ன செய்வது? இதையெல்லாம் அறிந்து கொண்டதாலேயே காந்திஜி சிறந்த தலைவராய் முடிவெடுக்க முடிந்தது.
நவகாளியில் நடந்தது போலவே கல்கத்தாவிலும் நடக்குமோ என்ற அச்ச உணர்வு அவருக்கு ஏற்பட்டு இருந்தது. கல்கத்தாவில் தங்கியிருந்து பிரிவினைக் கலவரங்கள் நடைபெற்ற இடங்களை காந்திஜி பார்வையிட வேண்டுமென்று முஸ்லீம்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று அவர் செயல் படத் தொடங்கினார். முஸ்லீம் கொள்ளைக்காரர்களால் தங்கள் உயிருக்கும் உடமைக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக இந்து மதப் பிரிவைச் சேர்ந்த சில குழுக்கள் ஆத்திரத்துடன் காந்திஜியிடம் தெரிவித்திருந்தன. இந்தக் கூற்றை காந்திஜியால் நம்ப முடியவில்லை.
"கல்கத்தாவில் 23 சதவீதம் பேர் முஸ்லீம்கள் என்று அறிகிறேன். அப்படியென்றால் சிறுபான்மை மக்கள் எப்படி பெருபான்மை மக்களை துன்புறுத்த முடியும். அரசாங்கத்தின் ஒத்துழைப்பின் மூலமோ அல்லது திறமையற்ற அரசாங்கத்தாலோ தான் இது நடை பெறுகிறது " என்று நேற்றைய பிரார்த்தனை கூட்டத்தில் பேசினார் காந்திஜி.
இன்றைய தினம் திங்கட்கிழமை. மௌன விரத நாள். வழக்கமாக எழுதும் அளவை விட இன்று அதிகமாகவே அவர் எழுதித் தள்ளினார். கல்கத்தாவில் கலவரம் பாதித்த பகுதிகளைத் தானே நேரில் சென்று பார்த்து வந்தார் காந்திஜி. அவருடன் மேற்கு வங்காள முதல்வர் டாக்டர். பி.சி.கோஷ், மேயர் எஸ்.சி ரே சவுத்ரி, போலீஸ் கமிஷனர் எஸ்.என்.சாட்டர்ஜி, கல்கத்தாவின் முன்னாள் மேயர் எஸ்.முகமது உஸ்மான் ஆகியோரும் சென்றிருந்தனர்.
மாலை 4 மணிக்கு சோடேபூர் ஆசிரமத்திலிருந்து கிளம்பிய அந்த குழு பைக்பாரா, சித்பூர், பெல்காட்சியா, மானிக்டோல், நார்கல்டங்காய் பெலியகட்டா, என்டாளி, டங்ரா மற்றும் ராஜாபஜார் இடங்களுக்கு சென்றிருந்தனர். பல இடங்களில் வன்முறையின் போது கடப்பாரை கோடாலி பயன்படுத்தி வீடுகளை இடித்து மிஞ்சியிருந்த சுவர்களைத் தான் காண முடிந்தது. சண்டை சச்சரவுகள் அற்ற வீடுகள் கூட வன்முறையால் தீயில் கருகி விட்டிருந்தது.
சில இடங்களில் எந்த இடிபாடுகள் இல்லாமல் இருந்தாலும் அங்கு யாரும் வசிக்கவில்லை. பயத்தால் மக்கள் வெளியேறி இருந்தனர். சிறிது நம்பிக்கை இருக்கும் மக்கள் காந்திஜியை வரவேற்று வாழ்த்தொலிகளை முழங்கினர். மகாத்மா கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது. இன்றைய நாள் மௌனவிரத நாள். அவர் பேச இனி என்ன இருக்கிறது. இது போன்ற மனிதத் தன்மையற்ற செயலைக் கண்ட அவருக்கு கண்களிலும், நெஞ்சிலும் நீர் வடிந்தது.
மனிதத்தை மனிதன் இழக்கும்போது அதை துணிந்து எதிர்த்து மனிதத்தை நிலைநாட்டுவதே மஹாத்மா. 21 ஆம் நூற்றாண்டிலும் நாம் இந்த மதப் பிரிவினைக்கு எதிராக காந்திஜியுடன் கை கோர்த்து நின்று மனிதத்தை காக்க வேண்டும். அவரின் கைகளை இருக்கமாக பற்றிக் கொண்டு சாதி, மத வன்முறையை அவர் வழியிலேயே மனஉறுதியுடன் எதிர்த்து நின்று மனிதத்தை நிலைநாட்டுவோம்.
No comments:
Post a Comment