Wednesday, April 10, 2019

முதல் மழை

கடந்த சில மாதங்களாக உடல் நிலை சரியில்லாத காரணத்தால் சொந்த ஊரிற்கு சென்றிருந்தேன். உடல் நலமின்றி போவதற்கு முக்கிய காரணம் ஓய்வு இல்லாமல் இருப்பதே. கூடவே இந்த வெய்யில் வேறு. சிறிது ஓய்வும் வீட்டு சாப்பாடும் தேவைப்பட்டது.வீட்டிலிருந்தபடியே அலுவலக வேலையை செய்தேன். வீட்டில் நல்ல ஓய்வு. ஆனால் வெய்யில் கொழுத்தியெடுத்தது. பெங்களூருவில் இருந்ததை விட குறைவுதான் என்று தோன்றியது.

10 நாட்கள் வீட்டிலிருந்து சுகபோக வாழ்க்கை வாழ்ந்துவிட்டு கடந்த ஞாயிறு அன்று சுமார் 3 மணி வாக்கில் பெங்களூரு கிளம்பினேன். வீட்டில் இருந்தவரை வெய்யிலின் தாக்கம் தெரியவில்லை. பவானியில் பேருந்து ஏறி சேலம் டிக்கெட் வாங்கி இருக்கையில் அமர்ந்தேன். ஜன்னலிருந்து வந்த காற்று அனல் அடித்தது. அந்த அனலின் வெப்பத்தைத் தாங்க முடியாமல் உடல் எரியத் தொடங்கியது. ஜன்னலை மூடினால் வேர்த்துக் கொட்டுகிறது.

நான் கல்லூரியில் படிக்கும் காலத்தில் இதே சாலையில் தான் கல்லூரி பேருந்தில் தினமும் சுமார் 3 மணி நேரம் பயணம் செய்திருக்கிறேன். அப்பொழுதெல்லாம் இப்படி எரிந்ததில்லை. சாலையின் இரு பக்கங்களும் புளிய மரங்களால் நிரம்பி இருக்கும். உச்சி வெய்யிலில் பயணித்தால் கூட குளிர்ந்த காற்றே வீசும். உடலுக்கும் மனதுக்கும் கண்களுக்கும் இதமாக இருக்கும்.

ஆனால் இன்று மரங்களை கண்ணில் பார்க்கவே முடியவில்லை. சாலை விரிவாக்கத்தில் அத்துனை மரங்களையும் வெட்டி வீழ்த்தியாகிற்று. நெடுஞ்சாலை அமைத்து கட்டணம் எல்லாம் வசூலிக்கிறார்கள். ஆனால் வெட்டப்பட்ட மரங்களுக்கு பதிலாக மரக்கன்றுகளை நடவேயில்லை. ஐந்தாறு கிலோமீட்டர்க்கு ஒரு முறை சில மரங்களை கண்ணில் பார்க்க முடிகிறது(அதுவும் சேலம் பெங்களூரு சாலையில் தான்). பவானி சேலம் சாலையில் இன்னும் மோசம்.

நட்டு வைத்திருக்கும் சில மரங்களும் நம் நாட்டு வகை மரங்கள் அல்லாமல் இருப்பதால் இந்த வெய்யில் தாங்க முடியாமல் கருகுகிறது. ஐந்து ஆறடி வளர்ந்த மரங்கள் கூட கருகியிருப்பதை பார்க்கும்பொழுது கண்ணில் ரத்தம் வருகிறது.

இதையெல்லாம் தாண்டி சேலம் தர்மபுரி நெடுஞ்சாலையில் தொப்பூர் வனப்பகுதியை கடந்து சென்றது பேருந்து. என்னால் வெப்பத்தின் தாக்குதலை எதிர்கொள்ள முடியவில்லை. அப்பொழுதுஅந்த வனப்பகுதியை பார்த்துக் கொண்டே சென்றேன். பச்சை என்பது துளிகூட கண்ணில் படவில்லை. காய்ந்து கருகி வெந்து கொண்டிருந்தது.

அந்த வனத்தில் வாழும் உயிரினங்களின் நிலைமையை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. ஒவ்வொன்றும் தண்ணீருக்கும், உணவுக்கும் என்ன பாடுபடுகிறதோ அந்த கருகுகிற காட்டில். இது போன்று எல்லா காடுகளிலும் எந்த பழங்களும் கிடைக்காமல் அலையும் பறவைகளும், எந்த பச்சை மரமும் உண்ண கிடைக்காமல் திரியும் யானைகளும், மேய புல் கிடைக்காமல் கதறும் மான்களும் மற்ற எல்லா உயிர்களும் என்ன பாவம் செய்தன.

 

நினைத்து பார்க்க முடியாமல் கண்ணில் கண்ணீர் கொட்டியது. அந்த நேரத்தில் என்னால் கொடுக்க முடிந்தது அதுவே. சிறிது நேரம் அசைவற்று உட்கார்ந்திருந்தேன். பின் அந்த கண்ணீருடனே ஒரு பிரார்த்தனையை வைத்தேன். சிவா அண்ணாவும் முத்துவும் எப்பொழுதுமே கூறுவார்கள் மனதார பிரார்த்தனையை வைத்துவிட்டு நம் அடுத்த வேலையை பார்க்க  வேண்டும் என்றும், அது கட்டாயம் நிறைவேறும் என்றும் அதை இந்த இயற்கை நிறைவேற்றும் என்றும்.

ஆம் என் பிரார்த்தனையை இந்த இயற்கை ஏற்றுக்கொண்டது. திங்கள் மாலை ஒரு உழவு மழை பெய்தது. என்னால் நம்பவே முடியவில்லை. வருடத்தின் முதல் மழை. ஆனந்தத்துடனும், நன்றியுடனும் என் கண்கள் மீண்டும் நனைந்தன. செவ்வாய் மாலையிலும் சிறிது மழை பெய்தது. பிரார்த்தனையினால் தானா என்று தெரியாது. ஆனால் மழைபெய்தது. ஒருத்தியின் கண்ணீருக்கே செவி சாய்க்கும் இயற்கையிடம் அனைவரும் மழை வேண்டி பிரார்த்தனை செய்வோம். காடுகளின் அனலை தணிக்க வேண்டுவோம்.

நாம் செய்த தவற்றிற்கு நாம் தான் பிராயச்சித்தம் தேட வேண்டும். காடுகளை அழித்து, மரங்களை வெட்டி, மலைகளை குடைந்து நமக்கான அழிவை மட்டுமல்லாமல் அனைத்து உயிரினங்களுக்கும் கொடூரமான அழிவை கொடுக்கிறோம். முடிந்தவரை ஒரு மரமாவது நடுங்கள். அதில் பழுக்கும் பழத்தை ஒரு பறவை சாப்பிட்டால்கூட நீங்கள் இயற்கையிடம் மன்னிப்பு பெற்றவர்களாவீர்கள்.

இயற்கை தான் கடவுள்.

1 comment: