Saturday, January 11, 2020

கனவை நோக்கி பறக்கும் சுஜிக்கு

சிறுவயதில் ஒவ்வொருவருக்கும் ஒரு கனவு இருந்திருக்கும். நான் இப்படி ஆகப் போகிறேன், நான் அப்படி ஆகப் போகிறேன் என்று. காலப்போக்கில் குடும்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப அந்த கனவுகள் காற்றில் பறந்திருந்தாலும் மனதில் எங்கோ ஒரு மூலையில் ஒட்டிக் கொண்டிருக்கும். எனக்கும் கூட அப்படி ஒரு கனவு இருந்திருக்கிறது. பைலட் வேலைக்கு செல்ல வேண்டுமென்பது. அப்பா லாரி ஓட்டினால் நாம் விமானம் ஓட்டுவோம் என்று.  இன்று வரை இது ரகசிய கனவு தான்.

இது போல் ஒவ்வொருவருக்கும் ஒரு கனவு இருந்திருக்கும். எவ்வளவு விதமான கனவுகள் இருந்தாலும் படித்தவர்கள் அதிகமாக விழுவது மென்பொருள் துறையில் தான். இங்கே மட்டும் விழுந்து விட்டால் வெளியே செல்வது கடினம். எல்லா வகையான வசதிகளையும் கொடுத்து இதிலிருந்து மீளமுடியாதவாறு பார்த்துக் கொள்ளும். வெளியில் செல்வதை பற்றி பாதுகாப்பற்ற ஒரு சிந்தனையை கொடுத்துவிடும்.

ஆனால் இந்த எட்டு வருட சொகுசான/பாதுகாப்பான வேலையை விட்டு விட்டு தன் கனவைத் துரத்தி பறக்கிறாள் என் தோழி. அவள் வேலையை ராஜினாமா செய்துவிட்டு தன் சிறுவயது கனவான கலெக்டர் கனவை நோக்கி பயணிக்கிறாள். மிகப் பெரிய துணிச்சலான முதல் அடியை எடுத்து வைத்திருக்கிறாள்.

இதுவரை தன் குடும்பத்திற்காக தன் கனவை ஓரம் கட்டிவைத்துவிட்டு எட்டு வருடம் உழைத்திருக்கிறாள். பெண்களுக்கு அதிக கட்டுப்பாடுகள் இருக்கும். அதிலும் அப்பா இல்லாத பெண்களுக்கு இன்னும் இரண்டு மடங்கு இருக்கும். ஆண் இல்லாத வீட்டில் சிறிய விடயம் என்றால் கூட பெரிதாய் பேசித் தீர்த்துவிடுவார்கள். அதற்கு பயந்து எல்லா அம்மாக்களும் அளவில்லா கட்டுப்பாடுகளை தனக்கும், தன் பிள்ளைகளுக்கும் விதித்திருப்பார்கள்.

அவளை இப்படியான கட்டுப்பாடுகளுடன் வேலைக்கு செல்லும் பெண்ணாகத் தான் அறிமுகம் கிடைத்தது. விடுதியில் ஒரே அறை. ஆரம்பத்தில் எனக்கும் அவளுக்கும் துளியும் ஒத்துவராது. நிறைய சண்டையிட்டிருக்கிறோம். ஆனால் ஏனோ அவளை பிடித்துப் போனது. தான் உண்டு தன் வேலை உண்டு என்றிருந்தவள். அவள் வெளியே செல்வது மிக அரிது. நான் உள்ளே இருப்பது மிக அரிது. இருவரும் நேர் எதிர்.

ஆனால் ஒரு வருடத்திற்கு பிறகு இருவரும் சேர்ந்து சுற்றாத இடமில்லை. செய்யாத சேவைகள் இல்லை. அலுவலகத்தில் கூட சேர்ந்தே சுற்றினோம். அனைவருக்கும் எங்களை சேர்ந்தே தான் தெரியும். தனியாய் இருவரும் வீடு எடுத்து, சமைத்து, மலையேற்றங்களுக்கு சென்று, பயணங்கள் மேற்கொண்டு, அலுவலகத்திலும்/வெளியிலும் நிறைய சமூக பணியாற்றி இப்படி எங்களுக்கான அனுபவங்கள் கணக்கற்றவை.

அவளுடைய கனவைப் பற்றியும் அறிந்திருக்கிறேன். பள்ளியிலும், பழ்கலைக்கழகத்திலும், அலுவலகத்திலும்   தங்க மங்கையான அவளின் கனவு வீணாகிறதே என்றுகூட தோன்றும். ஆனால் அவளின் மொத்த குடும்பமும் அவள் உழைப்பில் இருக்கிறது. அண்ணனிடமிருந்து சரியான ஆதரவு இல்லாததால் தன் கனவை மூட்டை கட்டி வைத்து விட்டு இந்த மென்பொருள் துறையில் குப்பை கொட்டினாள்.

ஆனால் இன்று வேலையை விட்டு விட்டு படிக்கிறாள். அவளுடனும், அவள் கனவுடனும் இன்று துணை நிற்பது அவள் வாழ்க்கைத் துணை. ஆம், அவளை காதலிக்கும் அந்த மேன்மையான துணை அவள் கனவையும் சேர்த்து காதலிக்கிறது. அவள் சுமைகளை தான் ஏற்றுக்கொண்டு அவளை பறக்கச் செய்கிறது. அவளுடைய நம்பிக்கைக்கான அந்த துணையை நான் வணங்குகிறேன்.

ஒவ்வொரு பெண்களும், ஆண்களும் இது போன்ற ஆதரவை பெற்றோரிடம் தான் எதிர்பார்ப்பார்கள். அவர்களிடம் கிடைக்காத ஆதரவு வாழ்க்கைத் துணையிடம் கிடைக்கும்போது அனைத்து கனவுகளும் நிறைவேறும். தன்னுடன் சேர்த்து தன் கனவையும் நேசிக்கும் வாழ்க்கைத் துணையை கண்டடைவது வரம். அவ்வாறு ஒரு துணை கிடைத்தால் அவர்களை எதற்காகவும் தொலைத்து விடாதீர்கள்.



கனவை நோக்கி பயணிக்கும் என்னுயிர் தோழி சுஜிக்கும் அவள் கனவை நனவாக்கும் ஆனந்திற்கும் என் வாழ்த்துக்கள். அவள் கனவு நனவாக நம் பிரார்த்தனைகள்.

இது போல் உங்கள் கனவுகள் என்ன? உங்கள் துணையின்/பிள்ளைகளின் கனவுகள் என்ன? பகிர்ந்துகொள்ளுங்களேன்.

3 comments:

  1. நல்ல பதிவு. சுஜி அக்காவை எனக்கு நாலு வருடத்திற்கு மேல் தெரியும். ஆம் அக்கா என்று தான் சொன்னேன்... என்னை விட ஒரு வருடம் தான் பெரியவர் எனினும் முதலில் இருந்து அக்கா என்று குப்பிட்டே பழகிவிட்டேன். அவருக்கு அக்காஜி என்ற பெயர் வாங்கி கொடுத்த பெருமை என்னையே சாரும்.

    நான் ஆனந்தின் farmmate.. கடந்த 4 வருடமாக ஆனந் ஈடுபட்ட பெரும்பாலான மரம் நடுதல் மற்றும் farming activitiesல் எனக்கும் பங்கு உண்டு.

    இருவரும் மற்றவருடய கனவை மதிக்கவும் நேசிக்கவும் செய்கிறார்கள். இருவரும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. @மைவிழி
    "அவளை காதலிக்கும் அந்த மேன்மையான துணை அவள் கனவையும் சேர்த்து காதலிக்கிறது"

    அருமையான வாக்கியம்

    @சுஜி
    உன்னுடைய கனவு விரைவில் நினைவாக என்னுடய மனமார்ந்த வாழ்த்துக்கள் ..

    ReplyDelete
  3. கணவரோ அல்லது காதலனோ அவர்கள் துணையின் கனவையும் சேர்த்து காதலிக்கும் போது பெண்ணுக்கு எல்லாமே சாத்தியம் ��
    மனமார்ந்த வாழ்த்துக்கள்��
    மகிழும் இனி! நிகழும் இனி!

    ReplyDelete