Saturday, June 15, 2019

சு. ரா. ஜெயமோகன் ஆசானுடனான நாட்கள்

ஒரு வாரமாக என் நாட்கள் சு ரா வுடனும் ஜெயமோகன் ஆசானுடனும் மெதுவாக மென்மையாக அமைதியாக நகர்கிறது. ஆம் சு ரா பற்றிய நினைவுகளை ஜெயமோகன் ஆசான் பகிர்ந்த "சுந்தர ராமசாமி நினைவின் நதியில்" என்ற புத்தகத்தின் வாயிலாக இருவருடனும் பயணிக்கிறேன். எழுதும்போது கூட ஜெயமோகன் என்ற பெயரை மட்டும் குறிப்பிடுவது அவரை மரியாதையின்றி சொல்வதாவே எனக்கு படுகிறது.அதனால் அவரை இங்கே ஆசான் என்றே குறிப்பிட போகிறேன். ஆசான் என்று குறிப்பிடுவதையே மிக நெருக்கமாக உணர்கிறேன்.

சு. ரா அய்யாவை பற்றி நான் பெரிதும் அறிந்ததில்லை. அவரின் ஜே ஜே சில குறிப்புகளை என் அண்ணன் கல்லூரி காலத்திலேயே பரிசாக கொடுத்து அறிமுகம் செய்துவைத்தார். ஆனால் என்னால் அவரின் எழுத்துக்களை உள்வாங்க முடியவில்லை. கடந்த வருடம் தான் "ஒரு புளியமரத்தின் கதை" மூலமாக அவரின் எழுத்தை தொட முயற்சித்து தொடர்கிறேன்.



சு ரா வை அறிமுகம் செய்து வைத்த அதே அண்ணன் தான் ஆசானையும் அறிமுகம் செய்து வைத்தார். "அறம்" புத்தகத்தை பரிசாக கொடுத்து என்னை வேறு எழுத்து உலகத்திற்கு செல்ல வழிகாட்டினார். ஆசானின் எழுத்துக்களை வெகு விரைவாக உள்வாங்கத் தொடங்கிய பின்னர் தான் ஹரூக்கி முரக்காமி, அயன் ரேண்ட், சிட்னி ஷெல்டன், அமிஷ் போன்றவர்களின் ஆங்கில எழுத்துக்களில் உலாத்திக்கொண்டிருந்த நான் தமிழ் புத்தகங்களுக்குத் திரும்பினேன்.

ஆசானின் எழுத்தில் கருத்தில் ஒவ்வொரு புத்தகத்திலும் விழுந்து எழ முடியாமல் அலுவலகத்தை சுற்றி சுற்றி நடந்திருக்கிறேன். வேலை செய்ய வேண்டும் என்ற நினைப்பே வராது. அறத்தில் ஒவ்வொரு கதையும் என்னை உருக்கியெடுத்தது. அறம் மிக உணர்ச்சிப்பூர்வமாக என்னை ஆட்டிப் படைத்தது. அவரின் எழுத்துக்கள் எளிதாகவும் இல்லை கடினமாகவும் இல்லை. அதில் சிக்கித் தவித்து வெளிவர முடியாமல் அவரின் வேறெந்த புத்தகத்தையும் சில நாட்கள் தொடவே இல்லை.

மிக வீரியமான ஒன்றை உடலில் செலுத்திவிட்டு அதன் விளைவுகளை எதிர்கொள்ள முடியாமல் மிக லேசான ஒன்றைத் தேடி உள்ளே செலுத்துவதை போல ஆசானின் எழுத்துக்களின் வீரியத்தைத் தாங்காமல் ஜெயகாந்தனையும், எஸ். ரா வையும் படித்து ஆசுவாசப்படுத்திக் கொண்டேன். அதன் பின் தான் கி.ரா வை கண்டடைந்தேன். இன்றும் ஆசானின் புத்தகத்திற்கு பிறகு வாசிக்க ஒரு கி.ரா புத்தகம் இருக்கும். இல்லையென்றால் அந்த எழுத்துக்களில் இருந்து மீள முடியாமல் தவிப்பேன்.

ஆசானின் காடு புத்தகம் தொடங்கி ஏனோ அதை எதிர்கொள்ளும் மனநிலை இல்லாமல் 40 பக்கங்களில் நிறுத்தி வைத்திருக்கிறேன். முகங்களின் தேசம் புத்தகத்தில் முதல் 6 பயணக் கட்டுரைகளை வாசித்துவிட்டு எங்கே நானும் ஊர் சுற்ற கிளம்பிவிடுவேனோ என்றே தோன்றியது. நான் நிறைய இடங்களை, மக்களை பார்க்க ஏற்கனவே நிறைய சுற்றியிருக்கிறேன். இந்த புத்தகம் அந்த தாகத்தை இன்னும் அதிகப்படுத்தியது.

புறப்பாடு பற்றித் தனியாக எழுத நிறைய இருக்கிறது. அதில் வரும் ஓவ்வொரு மனிதரையும் அவ்வளவு உள்வாங்கியிருக்கிறேன். ஆசான் மிக நெருக்கமானது புறப்பாடு புத்தகத்தில் தான். அவரின் ஒவ்வொரு புத்தகம் பற்றியும் தனித் தனியாக எழுத வேண்டும். யூடூபில் அவரின் பேச்சுக்கள் அனைத்தையும் கேட்டாகிவிட்டது. இப்பொழுது அதிகமாக அவரின் கட்டுரைகளுடன்.

கடந்த வருடம் அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது கோவை விஷ்ணுபுரம் விழாவில் தான். அவரை நேரில் பார்த்தபோது பேச்சும் வரவில்லை மூச்சும் வரவில்லை. இவ்வளவு நாட்கள் என் நினைவிலும் புத்தகங்களிலும் வாழ்ந்தவரை ரத்தமும் சதையுமாக கண்ணாடியுடன் நேரில் நிற்பதை பார்த்து சில கணங்கள் செயலிழந்து நின்றேன். ஸ்டாலின் அண்ணா ஆசானிடம் என்னை அறிமுகம் செய்யும்பொழுது கூட என்னால் பேச முடியவில்லை.



அந்த கண்கள் என்னை உற்று நோக்கியது. என் கண்ணை ஏன் அவ்வளவு அழுத்தமாக பார்த்தார் என்று தெரியவில்லை. இல்லை எனக்குத் தான் அப்படி தோன்றியதா என்றும் தெரியவில்லை. அந்த ஒரு நாள் முழுவதும் அவரை தூரத்திலிருந்து பார்த்துக்கொண்டு மட்டும் இருந்தேன். அவர் இருக்கும் இடம் தேடிச்சென்று சிறு தொலைவில் நின்று பார்த்துக்கொண்டே இருந்தேன். அந்த விழாவில் யார் பேசியதும் என் காதில் ஏறவில்லை.

வாழ்வில் எந்தவொரு மனிதரை சந்தித்ததற்காகவும் இவ்வளவு நெகிழ்ச்சியடைந்ததுமில்லை. இனி யாரும் என்னை இவ்வளவு பாதிப்பார்கள் என்றும் தோன்றவில்லை.

ஆசானின் கண்களின் வழியே சு. ரா வுடன் பயணிக்கிறேன். மெதுவாக கால்நடையாகத் தான் செல்கிறோம். அவர் ஆசானின் ஆசான். தன் ஆசானின் வீட்டிலிருந்து அவருடன் நடந்த உரையாடல்கள், நிகழ்வுகள், நேர்மறை விவாதங்கள், என நானும் அவர்களுடன் அந்த வீட்டில் ஒரு ஓரத்தில் யாரும் அறியாமல் அமர்ந்து அனைத்தையும் கேட்டுக்கொண்டும் பார்த்துக்கொண்டும் அப்படியே என் அலுவலகத்தில் ஜாவாவில் குறியீடுகளை எழுதிக்கொண்டும் பயணிக்கிறேன்.

இது மரியாதையா பக்தியா என்று பிரித்துப்பார்க்க தோன்றவில்லை. பிரித்துப் பார்க்க முயலவும் இல்லை.

Thursday, June 13, 2019

வியாழன் விரதம்

இன்று வியாழக்கிழமை. சாய்பாபாவிற்காக விரதம் இருக்க உகந்த நாள். இன்று ஒரு நாள் ஒரு வேலை உணவு மட்டுமே எடுக்கலாம். அது எப்போது வேண்டுமானாலும் எடுக்கலாம். நான் பொதுவாக இரவு உணவு மட்டும் எடுத்துக்கொள்வேன். இந்த சாய்பாபா விரதம் பற்றி சுமார் 10 வருடங்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் பெரிதும் அறியப்படாமல் இருந்தது. ஆனால் இப்பொழுது அநேகமாக அறுபது சதவீதம் பேர் முக்கியமாக பெண்கள் சாய்பாபாவை வழிபடுகிறார்கள்  என்றே தோன்றுகிறது.

எங்கள் ஊரிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் ஊராட்சி கோட்டை மலை அடிவாரத்தில் ஒரு மாந்தோப்பின் முடிவில் என்றும் அமர்ந்திருப்பார் ஒரு சாய்பாபா. அன்று அவரை பெரிதாய் யாரும் கண்டுகொண்டதில்லை. அனால் இப்பொழுதெல்லாம் பெரும் கூட்டம் வரிசை கட்டி நிற்கிறது என்று அப்பா கூறினார்.

எனக்கு இந்த மனித பிறவியில் கடவுள் அவதாரம் என்று கூறுபவர்கள் மீது எந்த நம்பிக்கையும் இல்லை. ஆனால் இந்த சாய்பாபா நம்பிக்கை எப்படி வந்ததென்றால் சென்னையில் வேலையில் சேர்ந்து ஒரு வருடம் ஆகியிருந்தது. மூன்று மாதம் பயிற்சி அதன் பிறகு வேலை. ஐ டி துறையில் மென்பொருள் சேவை நிறுவனமாக இருந்தால் அவ்வளவு எளிதில் புதிதாக வந்தவர்களுக்கு வேலை கொடுக்க மாட்டார்கள். பெஞ்ச் பீரியட் என்று சொல்லி வேலை இல்லாமல் தினமும் அலுவலகம் சென்று வர வேண்டும்.

புதிதாக வந்தவர்களுக்கு வேலை தெரியாது என்று சொல்லி எந்த ப்ராஜெக்ட்டிலும் எடுக்க மாட்டார்கள். யாரும் வேலை கொடுக்காததால் எங்களுக்கும் வேலை தெரியாது. எனக்கும் ஒரு வருடம் வேலை இல்லாமல் அலுவலகம் சென்று வருவது வெறுத்துப்போனது. சும்மா உட்கார்ந்து சம்பளம் வாங்க கை கூசவில்லை. ஆனால் எதுவும் கற்றுக்கொள்ளாமல் இருப்பது ஒருவித பயத்தை அளித்தது. மிக நெருக்கடியான சூழல். பெங்களூரு வந்த நண்பர்களுக்கு ப்ராஜெக்ட் கிடைத்தது என்றும், இங்கே  வாய்ப்பு இருப்பதாகவும் கூறினார்கள்.

ஆனால் என்னை பெங்களூரு அனுப்ப ஒரு சதவீதம் கூட வாய்ப்பு இல்லை. அப்பொழுது அலுவலகத்தில் வேலை செய்யும் தம்பி ஒருவன் வியாழன் அன்று அவன் வழக்கமாக செல்லும் சாய்பாபா கோவிலுக்கு செல்லும்போது என்னையும்  அழைத்து சென்றான். நான் நம்பிக்கையில்லை என்றேன். அவன் நடக்காத ஒரு விசையத்தை நடக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய். அது நடந்தால் நம்பு என்றான். சரி என்று நானும், காசா பணமா வேண்டி வைப்போம் என்று பெங்களூருவில் ப்ராஜெக்ட் கிடைக்க வேண்டும் என்று நினைத்து வைத்துக்கொண்டேன்.

பாருங்கள் ஒரு வாரத்தில் ப்ராஜெக்ட் கிடைத்தது. இடமாற்றமும் கிடைத்தது. இது சாய்பாபா அருள் தானா என்று யோசித்துக்கொண்டிருந்தேன். மறுபடியும் ஒரு சோதனை வைப்போம் என்று இன்போசிஸ் நிறுவன நேர்முக தேர்வை முடித்துவிட்டு சாய்பாபாவிடம் சொல்லிவைத்தேன். அவர் இப்போதும் நீ நம்பித்தான் ஆக வேண்டும் என்றார். நான் முடியாது என்று இன்னொன்றை வேண்டினேன். என் அண்ணனுக்கு திருமணம் நடக்க வேண்டும் என்று தான். ஒரே வாரத்தில் அதையும் செய்தார்.

சரி இப்படி நம்பிக்கை இல்லை இல்லை என்று  சொல்லிச் சொல்லி எல்லா காரியத்தையும் நிறைவேற்றிக்கொள்ளலாம் என்று திட்டம் போட்டு ஒவ்வொன்றாய் அவரிடம் சொன்னால், என்னை ஏமாற்றுகிறாயா என்று இனி ஒன்றும் செய்து தர மாட்டேன் என்று சொல்லி கோபித்து கொண்டார் போல. இப்பொழுதெல்லாம் என்ன வேண்டினாலும் நடக்க மேட்டேங்குதே என்று தான் இந்த விரதம்.

இப்படி ஒரு கடவுள் இருக்கிறாரா இல்லையா என்று தெரியாமல் நாம் அனைவரும் நம் சுயநலத்திற்காக விரதம் இருக்க, வடக்கில் துறவிகள் கங்கையை  காப்பாற்ற உண்ணா நோன்பிருந்து உயிர் துறக்கிறார்கள். அதில் முக்கியமானவரின் நினைவுதினம் இன்று. ஆம் நீரின் தூய்மைக்காக போராடி உயிர் துறந்தவர் தான் நிகமானந்தா எனும் துறவி. ஒரு நாள் இரண்டு நாள் இல்லை. 114 நாட்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தார்.



                                             இளம் துறவி ஆத்மபோதானந்

அவர் மட்டுமல்ல அவரை போன்று அடுத்தடுத்து துறவிகள் அந்த உண்ணா நோன்பினை தொடர்ந்தனர். இறுதியாக நோன்பிருந்த இளம் துறவி ஆத்மபோதானந் 194 நாட்கள் வரை கங்கைக்காக விரதம் இருந்து அரசு வேண்டுகோளை ஏற்றதனால் விரதத்தை கடந்த மே மாதம் முடித்துக்கொண்டார். இப்படி இயற்கைக்காக நோன்பு இருப்பவர்களை வணங்கலாம். வழிபடலாம். தவறே இல்லை. ஏனோ என் விரதத்தைப் பார்த்து நானே சிரித்துக்கொள்கிறேன்.

இன்று வறண்ட தமிழகம் முழுவதும் மழை பெய்தது என்றறிந்தேன். ஆம் இன்று நிகமானந்தா உண்ணா நோன்பிருந்து உயிர் துறந்த நாள். இயற்கை அன்னை அவள் அஞ்சலியை செலுத்திவிட்டாள்.

Wednesday, June 12, 2019

தினம் தினம்

தினமும் எழுத வேண்டும் என்று இரண்டு வருடங்களுக்கு முன்னமே முடிவு செய்து எழுத ஆரம்பித்தேன். ஆனால் என்னால் தொடர்ந்து எழுத முடியவில்லை. பல காரணங்கள் கூறலாம். சோம்பேறித்தனம், சுய ஒழுக்கமின்மை, அதிகமான கவனச்சிதறல் என்று ஏகப்பட்டதை சொல்லலாம். ஆனால் காரணங்கள் வெறும் காரணங்களே.

சரி தொடர்ந்து எழுத ஊக்கம் தேவைப்பட்டதால் வலைப்பதிவைத் தொடங்கி எழுதிப் பார்த்தேன். ஆடிக்கொருவாட்டி அம்மாவாசைக்கு ஒருவாட்டின்னு எழுதுனா எப்படினு என்மேலேயே எனக்கு கடுப்பாகிவிட்டது. இருந்தாலும் ஒவ்வொரு முறையும் விடாமல் ஆரம்பிக்கிறேன். முயற்சிக்காமல் இருப்பது தான் தவறு.



பிடித்ததை செய்துகொண்டே இருக்க வேண்டும். அதில் எவ்வளவு பிழை இருந்தாலும் செய்ய வேண்டும். எனக்கு இருக்கும் இன்னொரு பிரச்சனை, ஒரு செயலை பிழை இல்லாமல் மிக நேர்த்தியாக, மிக பூர்ணத்துவத்துடன் செய்ய வேண்டும். அதாவது ஆங்கிலத்தில் பெர்பெக்ஷன்(Perfection)  என்பார்களே அப்படி இருக்க வேண்டும். இல்லையென்றால் அந்த செயலை செய்யவேண்டியதில்லை என்று நினைப்பவள்.

நான் மட்டுமல்ல முக்கால்வாசி பெண்கள் அப்படித்தான். எங்கள் வீட்டிலேயே எடுத்துக்கொள்ளலாம். என் அம்மா பாத்திரம் கழுவி முடித்தபிறகு அதை நேர்த்தியாக அடுக்கி வைப்பார்கள். அதே போல நான் கழுவும் போதும் நேர்த்தியாக அடுக்கி வைக்க வேண்டும். இல்லையென்றால் அதற்க்கு ஒரு திட்டு விழும். ஒருவேளை அவர்களுக்கு திருப்தி இல்லையென்றால் அவர்களே அதை சரி செய்துவிட்டு தான் செல்வார்கள். அடுத்தமுறை அந்த வேலையை செய்ய சொல்லமாட்டார்கள்.

சரியாக ஒரு வேலையை செய்வது என்பது பெண்கள் அகராதியில், அவர்களுக்கு தெரிந்த மாதிரி செய்வதே. அவர்கள்(பெண்கள்) செய்வதை போல் செய்யாமல் மாற்றி செய்தால் அது தவறுதான். அந்த வேலையை இன்னும் எளிமையாக செய்தாலும் தவறு தவறு தான். சொல்வதை அப்படியே ஈயடித்தான் காப்பி போல செய்தாலும் பெண்களுக்கு திருப்தி இருக்காது. இதனால் தான் ஆண்கள் தான் எவ்வளவு உதவி செய்தாலும் தன் மனைவியை திருப்தி செய்யமுடியவில்லை என்று புலம்புகிறார்கள். பெண்களை திருப்தி செய்வது அவ்வளவு எளிதில்லை.

எதை வாங்கிக் கொடுத்து வியப்பூட்ட செய்தாலும், அவர்கள் இன்னும் கொஞ்சம் சிறந்ததாக வாங்கியிருக்கலாம் என்று சொல்லவோ மனதில் நினைக்கவோ செய்வார்கள். தானே வாங்கியிருந்தால் இன்னும் சிறந்ததை தேர்வு செய்திருப்பேன் என்று எண்ணுவார்கள். ஏனெனில் பெண்களுக்கு தன்னால் தான் சிறப்பாக செய்ய முடியும் என்று எப்பொழுதுமே ஒரு எண்ணம் இருக்கும்.

அப்படித்தான் நானும் சிறப்பாக எழுத வேண்டும் என்று நினைத்து நினைத்து எழுவதே இல்லை. இனி ஒரு முடிவு. ரொம்ப மொக்கையாக இருந்தாலும் பரவாயில்லை எழுதவேண்டும் என்று. பார்ப்போம் இது எவ்வளவு நாள் என்று.

(பி.கு : ஆண்கள் எவ்வளவு தவறாக ஒரு வேலையை செய்தாலும் வெளியே மட்டுமே பெண்கள் திட்டுவார்கள். உள்ளூர அந்த வேலையை ரசிப்பார்கள்.) 

Saturday, April 20, 2019

குழந்தைகளும் தேர்தலும்

தேர்தலில் வாக்களிக்க ஒரு வாரம் முன்பே சொந்த ஊருக்கு வந்துவிட்டிருந்தேன். தேர்தலுக்கு முந்தைய நாள் பெங்களுருவில் இருந்து பயணம் செய்வது மிகக் கடினம். திருவிழா போல் பேருந்துகளில் கூட்டம் அலைமோதும் என்ற என் கணிப்பு மிகச் சரியாய் இருந்தது. இந்த அரசு உரிய ஏற்பாடு செய்திருக்கும் காலங்களிலேயே பேருந்து சிக்காமல் அல்லது நெரிசலில் அவதிபட வேண்டும்.

இம்முறை மிகவும் மோசம். பயணிகள் நெரிசல் தாங்காமல், பேருந்து கிடைக்காமல் பேருந்தின் கூரை மேல் பயணம் செய்திருப்பதை டிவியில் பார்த்து நொந்துகொண்டதை தவிர வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை. பவானியில் குடியேறியிருக்கிற வீட்டின் முதல் மாடியில் இரு பிள்ளைகளுடன் ஒரு குடும்பத்தார் வசிக்கிறார்கள். அதில் மூத்தவன் ஏழு வயது சிறுவன். இந்த நவீன கல்வி முறையில் சிக்கித்தவிக்கும் குழந்தை.

பள்ளிகள் முடிந்தாலும் பெற்றோர்களின் ஆர்வத்திற்காக அபாகஸ் பயிற்சி வகுப்பு, வரைதல் பயிற்சி வகுப்பு என அந்த குழந்தை ஓடிக் கொண்டிருக்கிறான். இரண்டு வாரங்களாக என்னால் அவனுடன் சிறிது நேரம் செலவிட முடிகிறது. அவனுக்கு அஞ்சாங்கல் (ஐந்து கல் விளையாட்டு), தாயக்கரம், பரமபதம் என்று நம் விளையாட்டுகளை சொல்லிக்கொடுத்தும் அவனுடன் விளையாடியும் வருகிறேன்.

அவன் அனைத்தையும் வெகு ஆர்வமாக கற்றுக்கொள்ள ஆரம்பித்தான். அவனுக்கு இந்த விளையாட்டுகள் மிகவும் பிடித்துப்போனது. ஆரம்பத்தில் அவனால் எந்த விளையாட்டிலும் தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தோற்றுவிட்டால் கோபம் கொண்டு கல்லைத்தூக்கி எறிவது, கீழே உருண்டு தரையை தட்டுவது என்று அவன் கோபத்தை காட்டினான். ஆனால் போகப் போக அவனுக்கு தோற்றாலும் அடுத்த முறை ஜெயிப்போம் என்ற என்ன வரத்தொடங்கியது. பரமபதத்தில் பாம்பு கடித்தால் என்ன, நான் ஏணி ஏறி சீக்கிரம் மேலே வந்துவிடுவேன் என்று சொல்கிற அளவுக்கு மாற்றம்.

எங்கள் குடியிருப்புக்கு வெளியே ஒரு வேம்பு வளரத் தொடங்கியிருக்கிறது. தினமும் அதற்கு தண்ணீர் விடுவதை பார்த்து விட்டு அவனும் தண்ணீர் விட ஆரம்பித்தான். சிறிது தள்ளியிருக்கும் ஓராண்டு வயதான மரத்திற்கு ஏன் தண்ணீர் விடுவதில்லை என்று கேட்டான். குழந்தைகள் நம்மை போன்று சுயநலவாதிகள் அல்ல என்பதை உரைக்கவைத்தான். அந்த மரம் நம் வீட்டிற்கு முன்னாடி இல்லை. பக்கத்து இடத்திற்கு அருகில் இருக்கிறது என்றேன். அவனோ "பரவால்ல அக்கா அது ரொம்ப தண்ணியில்லாம வாடியிருக்கு. அதுக்கும் ஊத்தலாமா?" என்றான்.

 


மகிழ்ந்து அதை சுத்தம் செய்ய வேண்டும், நாளை செய்யலாம் என்றேன். அடுத்தநாள் அவன் வகுப்புகளில் இருந்து வந்தவுடன் முதல் வேலையாக இருவரும் அதை சுத்தம் செய்து தண்ணீர் விட்டோம். இனி அதை அவன் கவனித்துக்கொள்வான். குழந்தைகள் வெகுவிரைவாக இயற்கையோடு ஒன்றிவிடுகிறார்கள். அதன் முக்கியத்துவத்தை நாம் தான் அவர்களுக்கு கூறவேண்டும். நாம் செய்வதை பார்த்தாலே போதும். அவர்கள் செய்துவிடுவார்கள்.

அவன் அம்மாயிக்கு மிகுந்த மகிழ்ச்சி. "நாலு செவுத்தைத் தாண்டி எங்கையும் போக மாட்டான். இப்போ வெளிய வந்து வெளையாடுறான்" என்றார்.

அடுத்த நாள் ஓட்டு போட சொந்த ஊரிற்கு சென்றிருந்தேன். வாக்குச்சாவடியில் ஏழு மணிக்கே பெரிய வரிசை. எங்கள் ஊர்த் திருவிழா போல அத்துனைபேரை பார்க்க முடிந்தது. வரிசையில் எனக்கு பின்னால் ஊரின் சொத்து பத்து நிறைய உள்ள ஒரு குடும்பத்தின் அம்மாவும் மகளும் வந்து நின்றார்கள். அந்த அம்மா வந்தவுடன் ஆண்கள் வரிசையில் நிர்ப்பவரில் ஒருவரை அழைத்து வெளியே காவலாளியுடன் நிற்கும் இளைஞர் யார் என்று அதிகாரத் தொனியில் கேட்டார்.

ஏதோ பெரிய பிரச்சனை மாதிரி பேச ஆரம்பித்தார். காவலாளி அவர்களின் வாகனத்தை தூரமாக நிறுத்த சொல்லிவிட்டாராம். காவலாளியை திட்டமுடியவில்லை. அதனால் அவர்கூட நின்றிருந்த எங்கள் ஊர் இளைஞரை மிரட்டுவதைபோல் திட்டிக்கொண்டிருந்தார். இதில் பெண்கள் உரிமை வரை பேசிக்கொண்டிருந்தார். சிறிய பிரச்சனை, இதை பிரச்சனை என்றுகூட கூற முடியாது. எவ்வளவு மன அழுத்தம். ஆண்ட, ஆள்கின்ற பரம்பரையல்லவா, சும்மா விட்டுவிட முடியுமா. பொரிந்துதள்ளிக் கொண்டிருந்தார். ஒருவழியாக ஓட்டு போட்டாகிவிட்டது.

ஐந்து மரக்கன்றுகளை எடுத்துக்கொண்டு சித்தி வீட்டிற்கு சென்றோம். நான் ரசித்து, ருசித்து வாழ்ந்த வீடு, தோட்டம், கரடு என எனக்கு மிகவும் பிடத்த இடம் என் சித்தி வீடு. இப்பொழுது பார்த்தால் காய்ந்து நீரில்லாமல், விவசாயம் செய்யாமல் எல்லாமும் கருகி நின்றது. பாறை அருகில் ஒரு பாழி(பாறைகளுக்கிடையில் நீர் ஊரும் குளம்) இருக்கும். என்றும் வற்றாத அதுவும் காய்ந்து கிடந்தது.

சித்திரை காற்று வீசத்தொடங்கியதும் வானம் கருக்கிக்கொண்டு வந்தது. ஆனால் மழை வராமல் புழுதிக்காற்று வீசியது. எங்கே மழை வராமல் போய்விடுமோ என்று வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். இன்றும் மனதில் குழந்தையாகவே இருக்கும் என் மாமன் மகள் என்னருகில் வந்து அக்கா மழை வந்தால் ஜாலியாக ஆடலாம்ல என்றாள். சரி கண்ணைமூடி வானத்துக்கிட்ட மழை வேணும்னு கேளு என்றேன்.

அவள் கைகூப்பி வானத்தைப்பார்த்து முதலில் கெஞ்சலாகவும் பிறகு கொஞ்சலாகவும் மழையை வேண்டினாள். "ப்ளீஸ் மரங்க, நாய், மாடெல்லாம் பாவம். கொஞ்சம் மழையே வந்துட்டு போ. என் செல்லம்ல, தங்கம்ல. இங்க வந்துட்டு போவேன். வராம போகாத செல்லக்குட்டி" என்றாள். நான் சிரித்துவிட்டேன். அவளுக்காக அந்த மழை அங்கு வந்துவிட்டுப் போனது.

இந்த குழந்தைகளை போலவே இருந்துவிடலாம் என்றே தோன்றியது. எவ்வளவு மகிழ்ச்சியான உலகம் அவர்களுடையது. எந்த வன்மமும், பொறாமையும் இல்லாத உலகு.

 


மிக மகிழ்ச்சியாக ஐந்து மரக்கன்றுகளையும் நட்டுவிட்டு வீடு திரும்பினோம். ஒரு நாட்டு கொய்யா, மூன்று எழுமிச்சை மற்றும் ஒரு  விடாம்பழம் என தேர்தலன்றே நட்டாயிற்று. ஐந்து வருடங்களுக்கு பிறகு அடுத்த தேர்தலில் இரண்டின்(மரக்கன்றுகள், ஒட்டு பெற்ற வாக்காளர்) பங்களிப்பையும் பார்ப்போம்.

Saturday, April 13, 2019

கனவும் கல்விக் கடனும்

அரசு பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்புவரை படித்து முடித்து, என் வாழ்வை எப்படி தொடர்வது என்று குழம்பி இருந்த தருணம். பதினைந்து வருடங்களுக்கு முன்பெல்லாம் கல்லூரியில் படிப்பதென்பது பெரும் கனவாகவே இருந்தது. அதுவும் பெண்களுக்கு எட்டாக் கனி. கீழ் தட்டு குடும்பத்தில் பிறந்திருந்தால் இன்னும் மோசம். எங்கள் பகுதியில் பெரும் பணக்காரர்கள், நிறைய தோட்டம், சொத்து வைத்திருப்பவர்கள், அரசாங்க வேளையில் இருப்பவர்கள், நிலையான சம்பளம் வாங்குபவர்கள், தொழிலதிபர்கள் போன்றவர்களின் பிள்ளைகள் மட்டுமே பள்ளியைத் தாண்டி கல்லூரி படிப்பிற்கு செல்வார்கள்.

பெரிய பெரிய கனவுகல் இருந்தாலும் ஒரு முக்கிய தீர்மானத்தை எடுத்திருந்தேன். என்னவென்றால் எங்கள் ஊரில் எனக்கு முன்பு இருந்த அக்காங்களை போல் பள்ளிக்கு பிறகு திருமணம் செய்துகொண்டு கையில் ஒரு குழந்தையுடனும், இடுப்பில் ஒரு குழந்தையுடனும் என் ஊருக்கு வந்து போக கூடாது என்பது தான். என் சொந்த காலில் நிற்க வேண்டும். இங்கு உள்ள பெண்களுக்கு கனவு காண கற்றுக்கொடுக்க வேண்டும். அதற்காக நான் என் வாழ்வை மாற்றி அமைக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.

என் அப்பாவோ, பள்ளி படிப்பு முடிந்தது இனி இரண்டு வருடம் தையல் கற்றுக்கொண்டு வேலை செய். அப்புறம் திருமணம் செய்து வைக்கிறேன் என்று என்னிடம் பொறுமையாக பேசினார். அவர் என்ன செய்ய முடியும். இதுதான் ஆண்டாண்டு காலமாக வழக்கில் இருந்து வருகிறது. அதுவும் பொருளாதார பின்புலம் இல்லாதவர். வீட்டில் உணவுக்கு பிரச்சனையில்லை அனால் பெரிதாய் எதுவும் செலவு செய்ய முடியாத சூழல்.

அழுது புரண்டு, சாப்பிடாமல் இருந்து, உறவினர் அண்ணன்களையெல்லாம் உதவிக்கு அழைத்து அப்பாவை சம்மதிக்க வைத்து இளங்கலை கணிதத்தில் விவேகானந்தா மகளிர் கல்லூரியில் சேர்ந்தேன். 3 வருடத்திற்கு முப்பத்தி ஆறாயிரம் செலவு ஆனது. பெரும் தொகை தான். இதற்காக அப்பா வெளி மாநிலங்களுக்கு லாரி ஓட்டச் சென்றார். செலவு தாங்காமல் என் தங்கையும்  அரசு பள்ளியில் சேர்க்கப்பட்டாள்.

மூன்று வருடம் முடித்து முதுகலை கணிப்பொறியில் விண்ணப்பித்தேன். அப்பாவோ கணிதம் ஆசிரியர் பயிற்சிக்கு சேர்ந்துகொள், அது தான் பெண்களுக்கான வேலை என்றார். அதுவும் மூன்று வருடம் முதுகலை கணிப்பொறி பயில பணம் இல்லை என்றார். அண்ணா பழ்கலைக்கழகத்தின் கீழ் வரும் கல்லூரியில் படித்தால் பெரிய செலவு செய்ய வேண்டி வரும். கிட்டத்தட்ட பொறியியல் படிப்பிற்கு நிகராக லட்சங்களில் செலவு ஆகும். நுழைவுத் தேர்வில் தனியார் கல்லூரியே கிடைத்திருந்தது.

அப்பொழுதிருந்த காங்கிரஸ் அரசு கல்விக்கடன் திட்டத்தை அறிமுகம் செய்து கல்வி கடன் கொடுத்து வந்தது. தமிழ்நாட்டில் அது நல்ல முறையில் செயல்படுத்தப்பட்டிருந்தது.  கல்விக்கடனை எப்படியும் பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையில் துணிந்து கல்லூரியில் சேர்ந்தேன். அரசு வங்கிகள் கையை விரித்திருந்தாலும், தனியார் வங்கிகள் உதவின. வங்கி மேலாளர் எங்கள் வீட்டிற்கு வந்து எங்கள் குடிசை வீட்டையும், கால்நடைகளின் சாலையையும் பார்த்துவிட்டு என் தங்கையிடம் மதிப்பெண்னை  மட்டும் கேட்டுவிட்டு வேறெதுவும் கேட்காமல் கடனை வழங்கினார்.

என் வாழ்வில் முக்கியத் திருப்பம் இந்த கல்வி கடனாலேயே நிகழ்ந்தது. குடும்ப பின்னணியை பார்த்து அவர் எந்த கேள்வியும் கேட்காமல் கல்விக்கடன் கொடுத்தார். அவருக்கு நிச்சயம் தெரிந்திருக்கும், இந்த கல்விக்கடனால் ஒரு தலைமுறையின் வாழ்வே மாறும் என்று. நான் மட்டுமல்ல என் தங்கையும் கல்விக்கடன் மூலம் தான் பொறியியல் படித்து முடித்தாள். இருவரும் படித்து முடித்து மென்பொருள் நிறுவனத்தில் சேர்ந்து இன்று அந்த கல்விக்கடனையும் கட்டி முடித்தாயிற்று. என் தந்தைக்கும் பணி ஓய்வு கொடுத்தாயிற்று. கல்விக்கடன் இல்லையென்றால் எங்களின் நிலமை?

படித்து முடித்து 6 மாதங்களில் வேலை தேடி அலைந்திருக்கிறேன். வேலை கிடைக்கும் வரையோ அல்லது கிடைத்த பின்னோ கடனை கேட்டு வந்து யாரும் வாசலில் நிற்கவில்லை. இதுவே நான் வட்டிக்கு கடன் வாங்கியிருந்தாலும், அடகு வைக்க என்னென்ன கேட்டிருப்பார்கள். அடகு வைக்க எதுவும் இல்லை என்பதால் கடன் கிடைத்திருந்திருக்காது. அடகு இல்லாமல் கடன் கொடுத்திருந்தாலும், வேலைக்கு செல்வதற்குள் என்னென்ன பேச்சுக்கள், தொந்தரவுகள், வட்டியின் உச்சம் என்று எத்துனை அல்லல் பட்டிருக்க வேண்டும்.

நான் மட்டுமல்ல எல்லா கீழ்த்தட்டு மக்களின் குடும்பங்களின் ஒரு தலைமுறை வாழ்வை மாற்றியதே இந்த திட்டம் தான். என் வகுப்பில் படித்தவர்களில் முதல் தலைமுறை பட்டதாரியான 70 சதவீதம் பேர் கல்விக்கடன் மூலம் வந்தவர்களே. கூலித் தொழிலாளர்களின் பிள்ளைகள் முதல் வருமானம் இல்லாதவர்களின் பிள்ளைகள் வரை இன்று பயன்பெற்றிருப்பதை நான் நேரடியாக பார்த்திருக்கிறேன்.

உறவினர்களில் எத்துனை பேர் எங்களை ஏளனமாகவும் இலக்காரமாகவும் பார்த்தார்கள் பேசினார்கள் என்று எனக்குத் தெரியும். பணத்தை வைத்தே உறவுகளின் முக்கியத்துவம் பார்க்கப்பட்டது. இதையும் தாண்டி யாரும் உதவி செய்யவில்லை, செய்யவும் மாட்டார்கள். இன்று நிலைமை வேறு. மொத்தமாக ஒரு தலைமுறையின் வாழ்வே மாறிப்போயிருக்கிறது.

நல்ல வேலை அப்பொழுது மட்டும் மத்திய அரசாங்கம் இந்த திட்டத்திற்கு பதிலாக ஒரு சிலையை கட்டியிருந்திருந்தால் அந்த சுற்றுலா தளத்தில் என் பிள்ளைகள் டீ,  வடை விற்று பிழைத்துக் கொண்டிருந்திருப்பார்களோ என்னவோ.

ஒரு அரசோ/கட்சியோ இது போன்ற அடித்தட்டு மக்களின் வாழ்வை முன்னேற்றும் திட்டத்தை வகுத்து அதை சரியான முறையில் செயல்படுத்துவார்களேயானால் அவர்களுக்கு துணிந்து வாக்களிக்கலாம்.

Wednesday, April 10, 2019

முதல் மழை

கடந்த சில மாதங்களாக உடல் நிலை சரியில்லாத காரணத்தால் சொந்த ஊரிற்கு சென்றிருந்தேன். உடல் நலமின்றி போவதற்கு முக்கிய காரணம் ஓய்வு இல்லாமல் இருப்பதே. கூடவே இந்த வெய்யில் வேறு. சிறிது ஓய்வும் வீட்டு சாப்பாடும் தேவைப்பட்டது.வீட்டிலிருந்தபடியே அலுவலக வேலையை செய்தேன். வீட்டில் நல்ல ஓய்வு. ஆனால் வெய்யில் கொழுத்தியெடுத்தது. பெங்களூருவில் இருந்ததை விட குறைவுதான் என்று தோன்றியது.

10 நாட்கள் வீட்டிலிருந்து சுகபோக வாழ்க்கை வாழ்ந்துவிட்டு கடந்த ஞாயிறு அன்று சுமார் 3 மணி வாக்கில் பெங்களூரு கிளம்பினேன். வீட்டில் இருந்தவரை வெய்யிலின் தாக்கம் தெரியவில்லை. பவானியில் பேருந்து ஏறி சேலம் டிக்கெட் வாங்கி இருக்கையில் அமர்ந்தேன். ஜன்னலிருந்து வந்த காற்று அனல் அடித்தது. அந்த அனலின் வெப்பத்தைத் தாங்க முடியாமல் உடல் எரியத் தொடங்கியது. ஜன்னலை மூடினால் வேர்த்துக் கொட்டுகிறது.

நான் கல்லூரியில் படிக்கும் காலத்தில் இதே சாலையில் தான் கல்லூரி பேருந்தில் தினமும் சுமார் 3 மணி நேரம் பயணம் செய்திருக்கிறேன். அப்பொழுதெல்லாம் இப்படி எரிந்ததில்லை. சாலையின் இரு பக்கங்களும் புளிய மரங்களால் நிரம்பி இருக்கும். உச்சி வெய்யிலில் பயணித்தால் கூட குளிர்ந்த காற்றே வீசும். உடலுக்கும் மனதுக்கும் கண்களுக்கும் இதமாக இருக்கும்.

ஆனால் இன்று மரங்களை கண்ணில் பார்க்கவே முடியவில்லை. சாலை விரிவாக்கத்தில் அத்துனை மரங்களையும் வெட்டி வீழ்த்தியாகிற்று. நெடுஞ்சாலை அமைத்து கட்டணம் எல்லாம் வசூலிக்கிறார்கள். ஆனால் வெட்டப்பட்ட மரங்களுக்கு பதிலாக மரக்கன்றுகளை நடவேயில்லை. ஐந்தாறு கிலோமீட்டர்க்கு ஒரு முறை சில மரங்களை கண்ணில் பார்க்க முடிகிறது(அதுவும் சேலம் பெங்களூரு சாலையில் தான்). பவானி சேலம் சாலையில் இன்னும் மோசம்.

நட்டு வைத்திருக்கும் சில மரங்களும் நம் நாட்டு வகை மரங்கள் அல்லாமல் இருப்பதால் இந்த வெய்யில் தாங்க முடியாமல் கருகுகிறது. ஐந்து ஆறடி வளர்ந்த மரங்கள் கூட கருகியிருப்பதை பார்க்கும்பொழுது கண்ணில் ரத்தம் வருகிறது.

இதையெல்லாம் தாண்டி சேலம் தர்மபுரி நெடுஞ்சாலையில் தொப்பூர் வனப்பகுதியை கடந்து சென்றது பேருந்து. என்னால் வெப்பத்தின் தாக்குதலை எதிர்கொள்ள முடியவில்லை. அப்பொழுதுஅந்த வனப்பகுதியை பார்த்துக் கொண்டே சென்றேன். பச்சை என்பது துளிகூட கண்ணில் படவில்லை. காய்ந்து கருகி வெந்து கொண்டிருந்தது.

அந்த வனத்தில் வாழும் உயிரினங்களின் நிலைமையை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. ஒவ்வொன்றும் தண்ணீருக்கும், உணவுக்கும் என்ன பாடுபடுகிறதோ அந்த கருகுகிற காட்டில். இது போன்று எல்லா காடுகளிலும் எந்த பழங்களும் கிடைக்காமல் அலையும் பறவைகளும், எந்த பச்சை மரமும் உண்ண கிடைக்காமல் திரியும் யானைகளும், மேய புல் கிடைக்காமல் கதறும் மான்களும் மற்ற எல்லா உயிர்களும் என்ன பாவம் செய்தன.

 

நினைத்து பார்க்க முடியாமல் கண்ணில் கண்ணீர் கொட்டியது. அந்த நேரத்தில் என்னால் கொடுக்க முடிந்தது அதுவே. சிறிது நேரம் அசைவற்று உட்கார்ந்திருந்தேன். பின் அந்த கண்ணீருடனே ஒரு பிரார்த்தனையை வைத்தேன். சிவா அண்ணாவும் முத்துவும் எப்பொழுதுமே கூறுவார்கள் மனதார பிரார்த்தனையை வைத்துவிட்டு நம் அடுத்த வேலையை பார்க்க  வேண்டும் என்றும், அது கட்டாயம் நிறைவேறும் என்றும் அதை இந்த இயற்கை நிறைவேற்றும் என்றும்.

ஆம் என் பிரார்த்தனையை இந்த இயற்கை ஏற்றுக்கொண்டது. திங்கள் மாலை ஒரு உழவு மழை பெய்தது. என்னால் நம்பவே முடியவில்லை. வருடத்தின் முதல் மழை. ஆனந்தத்துடனும், நன்றியுடனும் என் கண்கள் மீண்டும் நனைந்தன. செவ்வாய் மாலையிலும் சிறிது மழை பெய்தது. பிரார்த்தனையினால் தானா என்று தெரியாது. ஆனால் மழைபெய்தது. ஒருத்தியின் கண்ணீருக்கே செவி சாய்க்கும் இயற்கையிடம் அனைவரும் மழை வேண்டி பிரார்த்தனை செய்வோம். காடுகளின் அனலை தணிக்க வேண்டுவோம்.

நாம் செய்த தவற்றிற்கு நாம் தான் பிராயச்சித்தம் தேட வேண்டும். காடுகளை அழித்து, மரங்களை வெட்டி, மலைகளை குடைந்து நமக்கான அழிவை மட்டுமல்லாமல் அனைத்து உயிரினங்களுக்கும் கொடூரமான அழிவை கொடுக்கிறோம். முடிந்தவரை ஒரு மரமாவது நடுங்கள். அதில் பழுக்கும் பழத்தை ஒரு பறவை சாப்பிட்டால்கூட நீங்கள் இயற்கையிடம் மன்னிப்பு பெற்றவர்களாவீர்கள்.

இயற்கை தான் கடவுள்.

Sunday, January 13, 2019

தன்மீட்சி

                                                                புத்தக விமர்சனம்
தன்மீட்சி - ஜெயமோகன்
பதிப்பகம் : தன்னறம்
          இது என் முதல் புத்தக விமர்சனம். எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் தனது வலைதளத்தில் வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்த தன்மீட்சி. ஏதாவதொரு சூழலில் நாம் அனைவருமே நம்மை ஏதோவொன்றிலிருந்து மீட்டெடுக்க வேண்டிய நிலை உள்ளது. அவ்வாறாக ஏதோவொன்றில் சிக்கித் தவிக்கும்பொழுது நமக்கு எண்ணற்ற கேள்விகளும் மன உளைச்சல்களும் நம்மை பாடாய் படுத்தும். நாம் செல்லும் பாதை சரியா என்ற சந்தேகம் ஏற்படத் தொடங்கும்.

          அவ்வாறான சந்தேகங்களை நாம் முன்பெல்லாம் கோவிலில் உள்ள சுவாமிகளிடமும், பெரியோர்களிடமும், ஜோசியர்களிடமும், ஞானிகளிடமும் கேட்டுத் தெளிவு பெறுவோம். வாசிப்பவர்கள் தான் ஆசானாய் நினைப்பவர்களிடம் கேட்டுத் தெளிவு பெறுகின்றனர். அந்த வகையில் இப்புத்தகம் வாசிப்பவர்களின் கேள்விக்கான பதில்களை தாங்கி வெளிவந்திருக்கிறது. இந்த கேள்விகள் அனைவருக்கும் பொதுவானதாகவே இருக்கின்றது.

          நம் வாழ்வில் நாம் செய்கின்ற வேலையை நமக்கு மனதார பிடித்தும், அதை செய்யும் பொழுது மகிழ்ந்தும், செய்து முடித்த பிறகு நிறைவையும் பெருகிறோமா என்றால் பலரின் பதில் இல்லை என்றே சொல்லலாம். நான் படித்த படிப்பு வேறு, நான் செய்யும் வேலை வேறு, எனக்கு பிடித்த வேலை வேறு. கால சூழ்நிலைகளாலோ, பணத்திற்காகவோ எனக்கு பிடிக்காத இந்த வேலையை செய்கிறேன் என்று பலர் கூற கேட்டிருக்கிறேன். இதில் நிம்மதியோ மன நிறைவோ என்றும் இல்லை. எனக்கு அறம் சார்ந்த, மன நிறைவைத் தருகிற, எனக்குப் பிடித்த ஒரு வேலையை/தொழிலை நான் எவ்வாறு கண்டடைவது போன்ற கேள்விகளுக்கு ஜெயமோகன் அவர்க்கே உரித்தான பாணியில் கூறியுள்ளார்.
          
          இது போன்ற அக வாழ்வையும், புற வாழ்வையும் இணைக்கும் தொழிலை/வேலையை நம்மை கண்டடைய வைக்கும் பதில்கள் இதில் அடக்கம். ஒரு வாசகர் "என் 20 வயதில் இளமையின் வேகத்திலும், உற்சாகத்திலும், லட்சிய வெற்றியிலும் ஒரு அரசியல் கட்சியில் சேர்ந்து உழைத்து, ஒரு பெரும் துரோகத்தால் 30 வயதில் அதை விட்டு வெளியேறி சொந்தமாக தொழில் தொடங்கி வாழ்க்கை வசதி அமைக்கப் பெற்றாலும் எனக்கென்று ஒரு கனவோ, ஆர்வமோ, வேட்க்கையோ இன்றி ஒவ்வொரு நாளையும் கழித்துக் கொண்டிருக்கிறேன். என் வாழ்வில் நிறைவோ, இலக்கோ இன்றி ஏனோ தானோ என்றே செல்கிறது. வாழ்க்கையை, நான் எங்கே தவறவிட்டேன் அல்லது வாழ்க்கை என்னை எங்கே கைவிட்டு விட்டது?" என்று கேட்டிருந்தார். இதற்கான பதிலை நாம் நமக்கான கேள்விக்கு பொருத்திக் கொள்ளலாம்.


          இது போன்ற கேள்விகளுக்கு கடந்த 20 ஆண்டுகளாக வாசகர்களுக்கு பதில் போட்டுக் கொண்டிருக்கிறார். இது சமகால பிரச்சனை. தொடர்ந்து எழுப்பப்பட்ட, திரும்ப திரும்ப பதில் கூற வேண்டிய கேள்வி பதில்களின் தொகுப்பு இப்புத்தகம். என் பல கேள்விகளுக்கு விடையை பெற்றேன். பல குற்ற உணர்ச்சிகளில் இருந்து விடு பெற உதவிய இப்புத்தகம் ஒரு பொக்கிஷம் என்றே கூறுவேன்.

          வாழ்வில் பல சமயங்களில் நம் கனவுகளை நோக்கி பயணிக்க நமக்கு உந்துதல் தேவைப்படுகிறது. இது கேள்வி பதில் கொண்ட புத்தகமானாலும் நமக்கு மிகப் பெரிய உந்துதலை அடைய இப்புத்தகம் பெரும் உதவி புரியும். ஜெயமோகன் அவர்களின் ஒவ்வொரு வார்த்தைகளும் அவ்வளவு உள்ளர்த்தத்தை கொண்டது. நம்மை பெரிதும் சிந்திக்கத் தூண்டுவது. இப்புத்தகம் சிந்தனைக்கும், செயல் ஆக்கத்திற்கும் தீனி போடக்கூடியது.

          அதிகம் வாசிப்பதாலோ என்னவோ என் சிந்தனை என் பேச்சு அனைத்தும் சமூக மாற்றத்திற்காகவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பது குறித்தும், அறம் சார்ந்ததாகவும் இருப்பதால் இது என்னை ஒரு படி என் உறவினர்களில் இருந்து விலக்கியே வைத்திருக்கிறது. சில சமயம் நானும் ஏன் மற்றவர்களை போல் சாதாரண வாழ்க்கையை வாழக்கூடாது என்ற கேள்வி என்னைத் துரத்தும்.

          என்னால் என் பெற்றோர்கள் அடையும் மன உளைச்சல் மிக மிக அதிகம். பெற்றோர்களின் மன உளைச்சலால் நான் அதிக குற்ற உணர்ச்சியடைந்தேன். நான் வித்யாசமானவள் என்று தெரிந்தாலும், இந்த குற்ற உணர்ச்சி என்னை வதைக்கும். ஆனால் அந்த குற்ற உணர்ச்சியில் இருந்து என்னை மீட்டெடுத்ததே இந்த தன்மீட்சி.

Tuesday, January 1, 2019

விடைபெறும் 2018

          ஆஹா!! இந்த வருடம் தான் எத்தனை எத்தனை மாற்றம் கொண்டதாக இருந்து விட்டது.

          இந்த 2018 ஆம் ஆண்டு நிறைய கற்றல் நிறைந்ததாகவும், புது அனுபவங்களை கொண்டதாகவும், பல நல்ல மனிதர்களை பெற்றும், நிறைய உறவுகளை இழந்தும், நினைத்துப் பார்க்க முடியா வலிகளை அனுபவித்தும், உளமார மகிழ்ந்தும், சில கனவுகளை நனவாக்கியும், பல கனவுகளை நோக்கி பயணிக்கும் ஆற்றலையும் என்னிடம் கொடுத்துவிட்டு சென்றுள்ளது.

          ஆம் 2017 டிசம்பர் 31 இரவு ஊட்டியிலிருந்து பெங்களூருக்கு பேருந்தில் பயணித்துக் கொண்டிருக்கையில் பிறந்தது 2018 வருடம். சரியாக 12.00 மணியளவில் நூறுக்கும் மேலான முகமறியா சகோதரர்கள் பேருந்தை வழி மறித்து, ஜன்னலை தட்டி எழுப்பி புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறிச்சென்றனர். இப்படி முகமறியா உள்ளங்களின் வாழ்த்துக்களால் இந்த ஆண்டு எண்ணற்ற முகமறியா மனிதர்களை எனக்குக் கொடுத்தது.

          ஆரம்பத்தில் வழக்கம் போல் மலை ஏறுதல், ஓட்டம் என்று சென்றது. பிறகு ஆழம் விழுதுகள் நிகழ்ச்சியின் மூலமாக சில நல்ல நண்பர்களும், உறவுகளும் கிடைத்தது. பிறகு குக்கூ காட்டுப்பள்ளி. வாழ்வின் அர்த்தத்தை கொடுத்து அகம் மகிழ வாழ கற்றுக் கொடுத்த இடம். பணத்தை மட்டுமே யோசிக்கும், சுவாசிக்கும் சூழலிருந்து வந்த எனக்கு குக்கூ மக்களின் அன்பும், கூட்டு வாழ்க்கையும் நெகிழச்செய்தது. நிறைய புதிய சுயநலமில்லா  உறவுகள் கிடைக்கப்பெற்றேன். மனதார வாழ்ந்திருந்த நாட்களை கொடுத்தது குக்கூவும் அங்கிருந்த மக்களும்.

          இவ்வாறு மகிழ்ந்திருந்த சமயத்தில் தான் என் அப்பிச்சியின் உடல்நிலை மிக மோசமாகி என்னை வருத்தியெடுத்தது. அவர் சரியாவதற்குள் என் மனநிலை மோசமானது என் சொந்தங்களைப் பார்த்து. இந்த சுயநல உலகிற்க்கு குணமாகித் திரும்பி வருவதை விட நிம்மதியாய் சொர்க்கலோகம் செல்லலாம் என்று என் அப்பிச்சி நினைத்து விட்டார் போல. ஜூன் 2, என்னை இந்த கூட்டத்தின் நடுவிலேத் தனியாக விட்டுச்சென்றார். அவர் இறப்பிற்கு வந்தவர்களில் 99.9 சதவீதம் சொந்தங்கள் அவர் இறப்பிற்கு வருத்தப்பட்டு வந்தவர்கள் அல்ல. கடமைக்காக வந்தவர்கள்.

          இது மிகுந்த மன உளைச்சலை கொடுத்தது. இதிலிருந்து வெளிவருவதற்க்காக பள்ளியில் கவனத்தை செலுத்தினேன். அலுவலுகத்திலும் நிறைய ஏமாற்றங்கள். சில உறவுகளும், நட்புகளும் என்னை உலுக்கியெடுத்தது. என்னை மீண்டும் மீண்டும் கீழே இழுத்துத் தள்ளியது.
எல்லாவற்றையும் தூக்கி எரியத் தயாரானேன். உறவுகளை பிரிவது, எனக்கு உயிர் பிரிவது போன்றது. அனால் சில சமயங்களில் சில உறவுகளை பிரிந்தால் மட்டுமே நம் உயிர் மிஞ்சும் என்ற நிலையில் சிலரை பிரிந்து என்னை காப்பாற்றிக்கொண்டேன்.

          பள்ளியின் நர்சரி வேலைகள், பிளாஸ்டிக் காலம் புத்தகம் தமிழ் மொழிபெயர்ப்பு என்று மனநிலை சரியாகத் தொடங்கியது. புத்தகத்தில் என் பெயரை எதிர் பார்க்கவில்லை. அதுவும் ஒரு பெரிய கனவே. அதுவும் கிருஷ்ணம்மாள் அம்மாவின் ஆசியுடன் புத்தகம் கையில் கிடைத்தது. பயணங்கள் எதுவும் செல்லாமல் சில மாதம் வீட்டிலேயே தங்க நேர்ந்தது. அது நரகம் போன்றதாக மாறியது. உடல்நிலையும், மனநிலையும் மோசமானது. மனநிலையை சீராக வைத்துக்கொள்ள இந்த வான்சிட்டு வலைப்பதிவைத் தொடங்கினேன்.

          என் நண்பர்களின் வாழ்வில் நல்ல தருணங்கள் நடந்தேறி மகிழ்வைக் கொடுத்தது. நிறைய நிறைய குழந்தைகளை சந்தித்தேன். புதுமையான அனுபவங்கள். வலிகளைத் தாங்க கற்றுக்கொடுத்தது இந்த 2018 ஆம் ஆண்டு. ஆண்டின் இறுதியில் எழுத்தாளர் ஜெயமோகன் அய்யா அவர்களை சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றேன். மாபெரும் கனவு இது. அதிகமான புத்தகங்கள் வாசித்த வருடம் இது. இந்த வருடத்தை அர்த்தமுள்ளதாக்கிய அனைவருக்கும் என் நன்றியும் வாழ்த்துக்களும்.

          இவை அனைத்திற்கும் மேலாக என்னுடன் ஒரு நட்பு எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கிறது. என் எல்லா வலிகளிலும், துயரங்களிலும், என் மோசமான மனநிலையிலும் என்னுடன் இருந்து எனக்கு தோள் கொடுத்துத் தாங்குகிறது. அனைவரும் என்னை கைவிட்ட நிலையிலும் அது என் பக்கம் நிற்கிறது. இந்த உலகில் நீங்கள் எவ்வளவு மோசமான நிலைக்குச் சென்றாலும் நல்ல நட்பு இருந்தால் எதையும் தாண்டி வரலாம். அப்படி ஒரு நட்பு கிடைத்தது எனக்கு வரமே. இந்த ஆண்டின் அனைத்து மகிழ்வையும் என் தோழன் ஸ்ரீனிக்கு சமர்ப்பிக்கிறேன்.

          2019 ஆண்டை மகிழ்ச்சியாலும், அனுபவத்தாலும் நிறைக்க வரவேற்கிறேன்.

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.